திறந்தவெளி கழிப்பிடப் பிரச்சினைக்குத் தீர்வென்ன? – பகுதி 2

அரசியல் சிறப்புக் கட்டுரை

பாஸ்கர் செல்வராஜ்

தமிழகத்தின் கழிப்பிடம் சார்ந்த புள்ளிவிவரங்களையும் மக்களின் இன்றைய தேவைகளையும், பழக்கவழக்கங்களையும் உற்றுநோக்கும்போது அரசின் கழிவறை மேம்பாட்டுத் திட்டங்கள் கிராமப்புறக் குடும்பங்களை மையப்படுத்தியதாகவும் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த ஏழைகளை இலக்காகக் கொண்டதாகவும் இருக்க வேண்டும் என்பதை தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது.

நகரங்களைப் பொறுத்தவரையில் அதிக எண்ணிக்கையில் பொதுக் கழிப்பறைகளைக் கட்டி சுகாதாரமான முறையில் நிர்வகிக்க வேண்டியது அவசியமாகிறது. நமது பெண்கள், தொழிலாளர்களின் நலன் கருதி பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்துறை, வணிக, வர்த்தக நிலையங்களிலும் மக்கள் அதிகம் குழுமும் பொதுவிடங்களிலும் கழிப்பறை வசதிகள் இருப்பதை உறுதிப்படுத்துவதோடு வழிபாட்டுத் தலங்களிலும் கழிவறைகளை அமைத்து அவற்றின் அங்கமாக்கி சமூகத்தின் சிந்தனை மாற்றத்துக்கு வித்திட வேண்டும்.

“திறந்தவெளி கழிப்பிட பழக்கமற்ற சுகாதாரமான தமிழகம்” என்ற இலக்கை (Aim) அடைய அனைத்து இடங்களிலும் கழிவறைக் கட்டமைப்புகளை ஏற்படுத்துதல், அதன் அவசியத்தை மக்களுக்கு உணர்த்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களின் சிந்தனையை, பழக்கத்தை மாற்றுதல், இந்தப் பிரச்சினையின் பாதிப்புகளையும் இந்தக் கட்டமைப்புக்கான தேவைகளைக் கண்டறியவும் சுகாதாரமான முறையில் பராமரிக்கவும் நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துதல் என்ற முப்பரிமாண உத்தியை (Strategy) கடைப்பிடிக்க வேண்டியிருக்கிறது.

இதைச் செயல்படுத்தி (Execution) இலக்கை எட்ட சென்னையைப் போன்று தமிழகத்தின் எல்லா பகுதிகளின் வருவாயையும் பெருக்கி, திட்டத்தைச் செயல்படுத்தி, நிர்வகிக்க உள்ளாட்சி அரசியல் நிர்வாகக் கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டியிருக்கிறது. மற்ற பகுதிகளில் எல்லாம் அரசு நிர்வாகத்தின் இருப்பை காண்பது அரிது.

Open defecation and free toilets2

பாதிக்கப்படுபவர்களை குறிவைத்து செயல்படுவது(Targeted approach)

இந்த நடவடிக்கையின் முதல் அவசரத்தேவை, இதனால் பாதிக்கப்படுபவர்களை முதலில் கண்டறிந்து பாதுகாப்பது. இவ்வளவு பெரிய பரப்பில் இத்தனை கோடி மக்களில் இவர்களை கண்டறிவது எப்படி? அரசு மருத்துவமனைகளுக்கும் சிறிய தனியார் மருத்துவ மையங்களுக்கும் காய்ச்சல், வயிற்றுப்போக்கு, குடற்புழு, டைபாய்டு போன்ற சுகாதார குறைபாடு தொடர்புடைய பிரச்சினைகளுடன் வருபவர்களின்,

இருப்பிடம், பள்ளிகளில் வயதுக்கேற்ற வளர்ச்சி இல்லாத குழந்தைகளின் இருப்பிடம், ரத்தச்சோகையால் பாதிக்கப்பட்ட பெண்களின் இருப்பிடம், இவ்வாறான நோய்களுக்கான மருந்துகள் அதிகம் விற்பனையாகும் பகுதிகள் ஆகியவற்றை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு கண்காணித்தால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளை சரியாக இனம்கண்டு விடலாம். அந்தப் பகுதிகளின் குடிநீர், கழிவறை, கழிவுநீர் வடிகால் அமைப்புகளை ஆய்வு செய்து மேம்படுத்தும் அதேவேளை அந்தப் பகுதி மக்களிடம் தொடர்ச்சியாக விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தால் இதன் பாதிப்புகளை பெருமளவு குறைக்கலாம்.

தற்காலிகமாக மாவட்ட வாரியாக இதற்கென தொற்றுநோய் கண்காணிப்புக் குழுக்களை ஏற்படுத்தும் அதேவேளை நீண்டகால திட்டமாக தமிழக மக்கள் ஒவ்வொருவருக்கும் தனிச்சிறப்பான மருத்துவ அடையாள எண்ணை வழங்கி அதில் அவர்களின் இருப்பிடத்தை இணைத்து,

எந்த அரசு தனியார் மருத்துவமனைக்கும், மருந்தகத்துக்குச் சென்றாலும் முதலில் இந்த எண்ணில் அவரின் வருகை, நோய் விவரங்களை பொதுவான மருத்துவ மென்பொருள் கட்டமைப்பில் சேமித்த பின்னரே, மருத்துகள் கொடுக்கும் வகையில் மாற்றியமைக்க வேண்டும். அந்தத் தரவுகளைப் பகுத்தறிந்து தானியங்கி முறையில் நோய்த்தொற்று பரவல் எச்சரிக்கையைப் பெறுவது அது உருவாகி பரவும் பகுதிகளைத் துல்லியமாகக் கண்டறிந்து தொற்று மேலும் பரவாமல் நடவடிக்கை எடுப்பது என்பதாக இதை வளர்த்தெடுக்க வேண்டும்.

சமூகத்தின் மனமறிந்து மாற்ற விதைகளைத் தூவுவது

 கொரோனா வந்தபிறகு நுண்ணுயிரிகள் குறித்து வகுப்பெடுக்கும் அளவுக்கு மக்கள் அறிந்திருக்கிறார்கள் என்று முதல்வர் ஒருமுறை பேசினார். கொரோனாவுக்கும் நகரின் குறிப்பிட்ட வர்க்க மக்களுக்கும் ஒருவேளை இது பொருந்தலாம்.

பெரும்பான்மையை பொறுத்தவரையில் காய்ச்சல், சளி, இருமல், தலைபாரம், உடல்வலியைத்தான் நோயாகக் கருதுகிறார்களே ஒழிய இவை உடலுக்குள் நுழைந்த கிருமியின் வேலை என்றோ, அதற்கு எதிரான உடலின் போராட்டமிது என்ற புரிதலோ இல்லை. அளவுகடந்த நோயர்களை கண்டு அலுத்துவிட்ட அரசு மருத்துவரும் தனது ஒவ்வொரு நிமிடத்தையும் காசாக்க துடிக்கும் தனியார் மருத்துவரும் மக்களிடம் நோயைப் பற்றி எடுத்துரைத்து, பரிந்துரைக்கும் மருந்துகள் பற்றி பேசுவது இல்லை.

ஆகவே, மக்களின் மனதில் கொரோனா போன்ற ஒரு நுண்ணுயிரிதான் இதுபோன்ற நோய்களுக்கும் மூலம்; மற்றவை உடல் தாக்குதலுக்கு உள்ளானதன் விளைவு என்ற புரிதலை ஏற்படுத்தாமல் நம்மால் இம்மியளவும் இந்த முயற்சியில் முன்னேற முடியாது.

ஏனெனில் அந்தப் புரிதல்தான் தொற்றை ஏற்படுத்தும் கிருமிகள் தன்னை தாக்காமல் பாதுகாத்துக் கொள்ளும் உணர்வைத் தரும். அது எப்படி தன்னையும், குடும்பத்தையும், குழந்தைகளையும் தாக்காமல் தடுப்பது எனச் சிந்திக்கத் தூண்டும்.

தனது குழந்தைகளுக்கு என்னதான் சத்தான உணவு கொடுத்தாலும் தனது கைகள், பயன்படுத்தும் நீர், வாங்கும் மாமிசம், மீன், காய்கறிகள் சுகாதாரமற்று இருந்தால் அந்தச் சத்தை அவர்களின் உடல் உறிஞ்சும் ஆற்றலின்றி போகும் என்ற புரிதலை தரும்.

அதன் தொடர்ச்சியில் தன்னையும் தன் வீட்டையும் மட்டும் சுத்தமாக வைத்திருந்தால் போதாது, தன்னை சுற்றி உள்ளவர்களும் சுற்றுப்புறமும் சுகாதாரமாக இருந்தால்தான் நுண்ணுயிரி தாக்குதலில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வது சாத்தியம் என்ற உண்மையை நோக்கி நகர்த்தும்.

அது பாதுகாப்பற்ற சுகாதார பழக்கம் இழிவானது என்ற கருத்துருவாக்கமாக சமூகத்தில் மாறும். அது அப்படியான பழக்கத்தில் ஈடுபடுபவர்களை சமூக புறக்கணிப்புக்கும் ஏளனத்துக்கும் உள்ளாக்கும். இப்படியான கருத்துருவாக்கமாக சமூகத்தில் உருவானவைதான் தாயை, தமக்கையை புணர்ந்தவனே என்று வசைபாடும் வழக்கம். அது திறந்தவெளியில் கழிவை வெளியேற்றும் சமூகத்தின் பழக்கத்தை நாளடைவில் மறைந்து போகவைக்கும்.

பொது சுகாதாரநல பாதுகாவல் அணியை உருவாக்குவது

இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தின் முதல்கட்டமாக சுகாதார சீர்கேடு தொடர்பான நோயுடன் வரும் நோயர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் இதுதொடர்பான விழிப்புணர்வு விளக்கக் காகிதத்தை மருந்துடன் சேர்த்துக் கொடுப்பது அல்லது அது தொடர்பான காணொலியைக் காண்பித்த பின்னரே மருந்துகளை கையில் கொடுப்பது என்பதை நடைமுறையாக்க வேண்டும்.

காலப்போக்கில் மருந்து குறித்த தகவல்கள், தன்மை, பக்கவிளைவுகள், தற்காப்பு முறைகள் அச்சிடப்பட்ட காகித பைகளில் மட்டுமே மருந்துகள் கொடுக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்க வேண்டும்.

தற்காலிகமாக அரசு மருத்துவமனைகளில் விளக்கப் படங்கள் மற்றும் காணொலி ஒளிபரப்பும் ஓர் அறையை ஏற்படுத்தி இதை விளக்கி நெறிப்படுத்த ஒருவரை நியமிக்கும் அதேவேளை, எதிர்காலத்தில் இந்த நோயர்களின் அலைபேசி எண்ணுக்கு இந்த விழிப்புணர்வு படங்கள், காணொலிகள் தானாகச் சென்றுசேரும் தானியங்கி கட்டமைப்பை நாம் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

சமீபத்திய மாணவர்-காவலர் உதவிக் குழுக்களை அமைத்து அவர்களை சட்டத்தை நடைமுறைப்படுத்த ஈடுபடுத்தி தற்கால மாற்றத்துக்கும் எதிர்கால தொடர்ச்சிக்கும் உரமிடும் வகையில் கொண்டுவந்திருக்கும் திட்டம் வரவேற்கத்தக்க ஒன்று.

அதேபோல உள்ளூர் பள்ளிகள், சுகாதார மையங்கள் மற்றும் மருத்துவமனைகளின் ஒருங்கிணைப்பில் அந்தந்த பகுதி பள்ளி மாணாக்கர்களை உள்ளடக்கிய பொது சுகாதாரநல பாதுகாவல் அணியை எதிர்காலத்தில் தோற்றுவித்து, இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்யலாம்.

இவர்களின் மூலமாக கழிவறை, கழிவுநீர் தேக்கம், குடிநீர் வசதிகள் குறித்த தகவல்களைத் திரட்டி அந்தந்த பள்ளிகள் மற்றும் பகுதிகளின் தேவைகளையும், குறைகளையும் கண்டறிந்து களையலாம். போதிய நிதி ஆதாரங்களைத் திரட்டிக்கொண்டு இந்த முயற்சியில் ஈடுபடுவது நல்லது. இல்லையேல் அது சமூகத்தில் அவநம்பிக்கையையும் அரசின் மீது எதிர்மறை எண்ணங்களையும் ஏற்படுத்தவல்லது.

கழிப்பறைகளின் வடிவமைப்பு சுற்றுப்புற உள்கட்டமைப்பு மேம்பாடு

Open defecation and free toilets2

மக்கள் புழங்கும் இடங்களில் எல்லாம் போதுமான கழிவறைகளை ஏற்படுத்தாமல் வெறுமனே சுத்தமாய் இரு எனக் கத்துவதிலோ, அவர்களை அசுத்தமானவர்களாகச் சித்திரிப்பதிலோ அர்த்தமேதும் இல்லை.

இன்னும் அரசுப் பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களில்கூட அப்படியான கட்டமைப்புகள் போதுமான அளவு ஏற்படுத்தப்படவில்லை. அப்படியே இருந்தாலும் சுத்தமாகப் பராமரித்து நிர்வகிப்பதில்லை. அங்கு வந்து அரசு ஊழிய எஜமானர்களின் கடைக்கண் பார்வைக்குக் கால்கடுக்க காத்திருப்பவர்கள் பொதுவெளியில் போகாமல் வேறெங்கு போவார்கள்.

அரசிடம் வேலைசெய்பவருக்கும், அரசு நிர்வாகத்தை நாடி வருபவருக்குமே இந்த நிலை என்றால் தனியார் துறைகளில் இதுகுறித்து சொல்லத் தேவையில்லை. அதேபோல பொதுக் கழிப்பறைகள் என்றாலே மனதில் தோன்றுவது அந்தப் பகுதியில் வீசும் துர்நாற்றமும் ஐந்து ரூபாய் காசு கொடுத்துவிட்டு உள்ளே சென்றாலும் அங்கே கால்வைக்க கூசும் சூழலும்தான். ஆனால், சுங்கச்சாவடிக்கு அருகில் இருந்த ஒரு பொதுக் கழிப்பறை அப்படியான துர்நாற்றமின்றி தரை அவ்வளவு சுத்தமாக இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இதற்கு கட்டடம் புதிது, வேலை செய்பவரின் தன்மை ஆகிய காரணங்களை எல்லாம் தாண்டி வேறு சில காரணிகள் கண்களில் பட்டது.

1. கழிவறை வாயில்வரை சாலை போடப்பட்டு இடையில் மண்தரை இல்லாமல் இருந்தது.

2. காரில் இருந்து இறங்கிச் செல்பவர்களின் காலணிகளில் அதிகம் மண் ஒட்டாமல் இருந்தது.

3. காரை நிறுத்திவிட்டு சென்று கழிவறையைப் பயன்படுத்தும் பயனாளிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தது.

ஒரு சிறு, நடுத்தர நகரத்தின் பேருந்து நிலைய கட்டணக் கழிவறையை எடுத்துக் கொள்வோமானால் அதன் சுற்றுப்புறச் சூழல், பயனாளிகளின் எண்ணிக்கை, அவர்களின் காலணிகளின் நிலை… இதற்கு நேர்மாறாக இருக்கும்.

சாலையை மண்தரை விழுங்க எத்தனித்துக் கொண்டிருக்கும். கடைக்கும் சாலைக்கும் இடையில் இருக்கும் அந்த மண்தரையை விழுங்க அங்கிருக்கும் கடைக்காரர்கள் கடின முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பார்கள். இருசக்கர வாகன ஓட்டிகள் இவர்களுடன் வண்டியை நிறுத்த மல்லுக்கட்டிக் கொண்டிருப்பார்கள்.

மக்கள் இவற்றை எல்லாம் கடந்து தாவிச்சென்று கொண்டிருப்பார்கள். வழியில்லாத கடுப்பில் உடலின் ஒட்டுமொத்த ரத்த நாளங்களும் உடைந்துவிடும் அளவுக்கு அதிர்வெண்ணைக் கொண்ட ஒலிப்பானில் வைத்த கையை எடுக்காமல் ஒலியை எழுப்பும் மற்ற வாகன ஓட்டிகள் மண்ணை வாரியிறைத்து புழுதியைக் கிளப்பி சாபம்விட்டுக் கொண்டிருப்பார்கள்.

அங்கு நின்று சிறிது நேரம் பேசினால் பத்து மில்லிகிராம் அளவுக்கு மண் வாயிற்குள் செல்வது உறுதி. நம் வாயைப்போல அங்கிருக்கும் கழிவுநீரும், மழைநீரும் செல்ல கட்டப்பட்ட கால்வாயும் மண்ணாலும் குப்பையாலும் நிரம்பி வழியும்.

மழை பெய்தால் மழைநீர் தேங்கி அந்த பகுதியே சேரும் சகதியுமாகக் காட்சியளிக்கும். மக்கள் இதன்வழியாக அங்கிருக்கும் கழிவறைக்குச் சென்றால் அதன் நிலை என்னவாக இருக்கும். அங்கிருக்கும் சிறிய, பெரிய அங்காடிகள், உணவகங்கள், துணிக்கடைகள் என எதிலும் பெரும்பாலும் கழிப்பறை வசதி இருக்காது.

அவ்வளவு மக்களும் வேறுவழியின்றி ஒரே இடத்துக்குச் செல்ல வேண்டும் அல்லது பொதுவெளியில் கழிக்க வேண்டும். அங்கே கழிப்பறையில் ஊற்ற, கைகழுவ என எல்லா நீர் பயன்பாட்டுக்கும் டப்பாக்கள்தான்.

அதனால் தரை எப்போதும் ஈரமாகவே இருக்கும். இதில் அழுக்கான காலணியுடன் சென்றால் அந்த கழிப்பறையும், தரையும் பளபளக்கவா செய்யும். பற்றாக்குறைக்கு இந்த கழிவுநீரும் அந்த தூர்ந்துபோன கால்வாயில் செல்லாமல் அங்கேயே தேங்கி நிற்கும். பிறகென்ன அந்தப் பகுதியே “நறுமணம்” கமழும். இதை அப்படியே அரசுப் பள்ளிக்கோ, அரசு அலுவலகத்துக்கோ, மற்ற பொதுவிடங்களுக்கோ  நீட்டித்தால் நிலைமையில் பெரிய அளவு வேறுபாடு இருக்காது.

ஆக… 

1. மக்களின் எண்ணிக்கைக்கும் தேவைக்கும் ஏற்ப போதுமான அளவு கழிப்பறைகளை ஏற்படுத்த வேண்டியிருக்கிறது. 

2. அவற்றை சுத்தமாக பராமரிக்க அதன் உள்கட்டமைப்பை நமது சூழலுக்கு ஏற்ப வடிவமைக்க வேண்டியிருக்கிறது. 

3. நமது கழிவுநீர் கால்வாய், சாலைகள் உள்ளிட்ட அதன் சுற்றுப்புற கட்டமைப்பை மேம்படுத்த வேண்டியிருக்கிறது.

இந்த மூன்றையும் எப்படி நடைமுறை சாத்தியமாக்குவது?

அடுத்த பதிப்பில் பார்க்கலாம்…

பகுதி 1

கட்டுரையாளர் குறிப்பு

Open defecation and free toilets2
பாஸ்கர் செல்வராஜ்,

தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் – அரசியல் – பூகோள அரசியல் – சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்.

திறந்தவெளி கழிப்பிடப் பிரச்சினையின் பரிமாணங்கள்: பகுதி 1

வேலைவாய்ப்பு : அண்ணா பல்கலையில் பணி!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *