தேனி மக்களவை தொகுதியில் 2019 தேர்தலில் ஓ.பி.ரவீந்திரநாத் பெற்ற வெற்றியை, வாக்காளர் மிலானி தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் செல்லாது என்று ஜூலை 6 ஆம் தேதி தீர்ப்பளித்தது சென்னை உயர் நீதிமன்றம்.
இந்தத் தீர்ப்புக்கு எதிராக ஓ.பி.ரவீந்திரநாத் செய்த மேல் முறையீட்டை இன்று ( ஆகஸ்டு 4) விசாரித்த உச்ச நீதிமன்றம், வழக்கை அக்டோபர் 4 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து அதுவரை சென்னை உயர் நீதிமன்றத் தீர்ப்பை நிறுத்தி வைத்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் இன்று என்ன நடந்தது என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் விசாரித்தோம்.
தீர்ப்பை எதிர்த்து ஓ.பி.ரவீந்திரநாத் மேல் முறையீடு செய்வதற்கு வசதியாக உயர் நீதிமன்றமே தீர்ப்பை 30 நாட்களுக்கு ஒத்தி வைத்தது. அதன்படி ஆகஸ்டு 4ஆம் தேதியோடு மேல்முறையீட்டுக்கான அவகாசம் முடிகிறது.
இதற்கிடையே ரவீந்திரநாத் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டது. ஆனால் அந்த மனு ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை பட்டியலிடப்படவில்லை. ஆகஸ்ட் 1 ஆம் தேதி ரவீந்திரநாத் சார்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கேட்டன் பால் உச்ச நீதிமன்ற பதிவாளருக்கு ஒரு வேண்டுகோள் கடிதம் எழுதினார்.
அதில், ரவீந்திரநாத்தின் மனுவை விரைவில் பட்டியலிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதன் பின் ஆகஸ்டு 2 ஆம் தேதி தலைமை நீதிபதியிடமும், ரவீந்திரநாத் சார்பில் மென்ஷன் செய்தார்கள். அவர் அதை ஏற்கவில்லை என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர்கள் மூலம், ‘ரவீந்திரநாத்தின் மேல் முறையீட்டை ஆகஸ்டு 4 ஆம் தேதிக்குள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாத பட்சத்தில் அவரது எம்பி பதவி காலாவதியாகிவிடக் கூடும்’ என்று மீண்டும் உச்சநீதிமன்ற தலைமை பதிவாளர் முன்னிலையில் வேண்டுகோள் வைக்கப்பட்டது.
இதற்காக மூத்த வழக்கறிஞர்கள் பலத்த முயற்சி செய்திருக்கிறார்கள்.
இதையடுத்து ஆகஸ்டு 4 ஆம் தேதி (இன்று) உச்சநீதிமன்றத்தில் கோர்ட் ஹால் 5 ல் நீதிபதிகள் சூரிய காந்த், திபாங்கர் தத்தா அமர்வில் 43 ஆவது வழக்காக இந்த வழக்கு பட்டியலிடப்பட்டடது.
ரவீந்திரநாத் சார்பில் மூத்த வழக்கறிஞர்களான கே.கே. வேணுகோபால்(முன்னாள் அட்டார்னி ஜெனரல்), கபில் சிபல் (முன்னாள் சட்ட அமைச்சர் ) மற்றும் ஜெயந்த் பூஷன் (சாந்தி பூஷன் பேரன்) என்று உச்ச நீதிமன்றத்தில் மிகுந்த பெயர் பெற்ற மூத்த வழக்கறிஞர்கள் அவருக்காக வாதாட தயார் நிலையில் இருந்தார்கள்.
வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது முன்னாள் அட்டார்னி ஜெனரல் மூத்த வழக்றிஞர் கே. கே. வேணுகோபால் ரவீந்திரநாத்துக்காக தனது வாதத்தை தொடங்கியதும் மற்ற மூத்த வழக்கறிஞர்கள் அமைதியாக வழக்கினை கவனித்து வந்தார்கள். இதில் மூத்த வழக்கறிஞர்களான கபில் சிபல் மற்றும் வேணுகோபால் வீடியோ கான்ஃபரன்சில் காத்திருந்தனர். ஜெயந்த் பூஷன் மூத்த வழக்கறிஞர் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார்.
அதாவது ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேணுகோபால் வாதிடுவதில் தடங்கல் ஏற்பட்டால், அதனை சரி செய்வதற்காகவும், அப்படி ஒருவேளை வேணுகோபால் வாதாடுவதில் சிக்கல் என்றால் கூட… வாதாடுவதற்காக மூத்த வழக்கறிஞர் ஜெயந்த் பூஷன் நீதிமன்றத்தில் தயாராக இருந்தார்.
கே. கே. வேணுகோபால் தனது வாதங்களை வீடியோ கான்பிரன்சில் எடுத்து வைக்கும் போது, ஒரு முறை அவருடைய ஆடியோ வேலை செய்யாததால், அதற்கு உதவி செய்யும் வகையில் மூத்த வழக்கறிஞர் ஜெயந்த் பூஷன் அதனை நீதிமன்றத்திடம் எடுத்துக் கூறினார். பிறகு வேணுகோபாலின் வாதத்தை கேட்கும் அளவிற்கு ஆடியோவை சரி செய்து கொள்ள சொன்னார்.
இப்படியாக ரவீந்திரநாத் தனது மேல்முறையீட்டு மனுவினை நடத்துவதற்கு மிகவும் கவனமாக விரிவான ஏற்பாடு செய்திருந்தார். சிறு சிக்கல் ஏற்பட்டாலும் பறிபோவது எம்.பி. பதவி என்பதால்தான் இவ்வளவு ஏற்பாடுகள்.
கே.கே. வேணுகோபால் பத்து நிமிடம் வாதாடினார். அவர் “ஓ.பி.ரவீந்திரநாத் மீது எந்த ஊழல் புகாரும் இல்லை. ஊழல் புகாரின் அடிப்படையின் சென்னை உயர் நீதிமன்றம் தண்டிக்கவில்லை.
மனுவில் மனுதாரர் கூறாத வாதங்களை விசாரணையின்போது வைத்திருக்கிறார். மேலும் தேர்தல் மனுவில் ரவீந்திரநாத் தெரிவித்த தனது சொத்து விவரங்களை குறிப்பாக தனது கம்பெனியின் பங்கு விவரங்களையும் பங்கு விற்பனை செய்தவர்களையும் தவறாக கணக்கில் கொண்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
பொதுவாக இந்த மேல்முறையீட்டு மனு சட்டப்படி அனுமதிக்கப்படுவது, என்றாலும் இந்த மனுவின் மீது அவசியம் இடைக்கால தடை உத்தரவு கொடுக்க வேண்டும். இல்லையென்றால் ரவீந்திரநாத் எம்.பி.யாக தொடர முடியாது என்பதால் இந்த நீதிமன்றம் இந்த வாதங்களின் அடிப்படையில் இடைக்கால தடை கொடுக்க வேண்டும்” என்று வாதிட்டார்.
இந்த வழக்கில் கேவியட் மனு செய்திருந்த தேனி திமுக மாவட்டச் செயலாளர் தங்கத் தமிழ்செல்வன் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் நீரஜ் கிஷன் கவுல், “நாங்கள் உயர் நீதிமன்றத்தில் தெரிவித்த வாதங்களுக்கு தகுந்த ஆதாரங்கள் இருக்கின்றன. ரவீந்திரநாத் தனக்கு எதிரான வாதங்களை முழுமையாக மறுக்க முடியவில்லை.
மேலும் அவரே விரும்பி தானாக முன்வந்து அவர் தன்னுடைய வருமானவரி கணக்குகள் மற்றும் தனது தம்பியின் கணக்குகள் ஆகியவற்றின் மூலம் தாக்கல் செய்த ஆதாரங்களின் அடிப்படையில் நீதிமன்றம் கூடுதலாக சில தகவல்களை அதாவது அவர் பெற்ற சம்பளம், வட்டியாக பெற்ற வருமானம், கூட்டு நிறுவனங்கள் மூலம் பெற்ற வருமானம், வீட்டுக் கடன் மற்றும் தன் தம்பிக்கு கொடுக்க வேண்டிய கடன் போன்ற விஷயங்களை தனது வேட்புமனுவில் மறைத்து உள்ளதை நீதிமன்றம் கணக்கில் எடுத்துக் கொண்டு தீர்ப்பளித்தது.
அந்தத் தீர்ப்பு முறையானது தான். ஆகவே இந்த மனுவின் மீது இடைக்கால தடை கொடுக்கக் கூடாது. ஏனென்றால் இவர் மக்களை ஏமாற்றி தனது வேட்பு மனுவை சாதுரியமாக ஏற்றுக் கொள்ளும்படி செய்ததால் இந்த வழக்கு இடைக்கால தடைவிதிப்பதற்கு ஏற்றதல்ல” என்று வாதாடினார்.
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இரு பக்க வாதங்களையும் கேட்டு,இந்த வழக்கில் குறுகிய இடைக்கால தடை தாங்கள் விதிக்கலாம் என்று முடிவு செய்தனர். இதைக் கூறிய போது, தங்க தமிழ்ச்செல்வன் சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர், “அப்படி என்றால் மிக குறைந்த காலத்தில் இறுதி தீர்ப்பு வரும் வகையில் இரு பக்க வாதங்களையும் முறையாக கேட்பதற்கு வசதியாக ஒரு நாள் குறித்து கொடுங்கள்” என்று கோரினார்.
அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ”நீங்கள் இருவரும் விரிவாக உங்களுடைய வாதங்களை எடுத்து வையுங்கள். அதற்கு முன்பாக தங்க தமிழ்ச்செல்வன் இரண்டு வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அந்த பதில் மனு தாக்கல் செய்த இரண்டு வார காலத்திற்குள் ரவீந்திரநாத் ஏதேனும் வாதங்கள் இருந்தால் அவரும் தாக்கல் செய்யலாம். மேலும் மிலானி மற்றும் 26வது எதிர்மனுதாரர் ராஜரிஷி குருதேவ் ஆகியோருக்கு ரவீந்திரநாத் மனுக்களின் நகல்களை சார்பு செய்ய வேண்டும்” என்றும் கூறினார்கள்.
அத்துடன் தங்க தமிழ்ச்செல்வன் வழக்கறிஞரிடம், “நீங்கள் எப்போது வேண்டுமென்றாலும் இந்த வழக்கினை விசாரணைக்குக் கொண்டு வருவதற்கு மென்ஷன் செய்ய அனுமதி வழங்குகிறோம்” என்றும் கூறினார்கள்.
இதனை ஏற்றுக் கொண்ட மூத்த வழக்கறிஞர் கவுல், “இருந்தாலும் இறுதி விசாரணைக்கு குறிப்பிட்ட நாள் சொன்னால் மிகவும் வசதியாக இருக்கும். நீதிமன்றத்திற்கு தொந்தரவு ஏற்படுத்த மாட்டோம். செப்டம்பர் மாதத்திலேயே ஒரு நாள் கொடுங்கள்” என்று கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து நீதிபதிகள் தங்களது காலண்டரில் நாட்களில் சோதித்து செப்டம்பர் மாதம் முழுவதும் நிறைய வழக்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் , அக்டோபர் 4 ஆம் தேதி இந்த வழக்கை இறுதி விசாரணைக்காக எடுத்துக் கொள்வதாக கூறி அக்டோபர் 4 வரை சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்கால தடை உத்தரவு வழங்கியும் அதுவரை ரவீந்திரநாத் எம்பியாக தனது பணிகளை தொடங்கலாம் என்றும் அனுமதி வழங்கினார்கள்.
இப்படித்தான் ஓ.பி.ரவீந்திரநாத்தின் எம்.பி. பதவி அக்டோபர் மாதம் வரை தப்பித்திருக்கிறது.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் வட்டாரத்தில் நாம் பேசியபோது, ”உச்ச நீதிமன்றம் உடனடியாக இந்த மேல்முறையீட்டில் இறுதி விசாரணைக்கு நாள் குறித்து இருக்கிறது. இது ஒரு அரிதான நிகழ்வு தான். பொதுவாக உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கு இடைக்கால தடை பெற்றால் மீண்டும் அந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதற்கு ஒன்று முதல் இரண்டு ஆண்டுகள் ஆகும்.
அதுவரை அந்த வழக்கில் தாக்கல் செய்ய வேண்டிய வாதங்கள் மற்றும் ஆவணங்கள் குறித்து அதற்காக நியமிக்கப்பட்டுள்ள நீதிமன்ற பதிவாளர்களிடம் இந்த வழக்கு பட்டியலிடப்படும்.
ஆனால் இந்த நடைமுறைகளை எல்லாம் கடந்து, உச்ச நீதிமன்றமே இந்த வழக்கினை இறுதி விசாரணைக்காகவும், இறுகி தீர்ப்பு வழங்குவதற்கு வசதியாகவும் இரண்டு மாத கால அவகாசத்தில் தேதி கொடுத்திருப்பதை அரிதான நிகழ்வாகவே கவனிக்க வேண்டும்” என்று கூறினார்கள்.
-வேந்தன்
WI vs IND: திலக் வர்மா அதிரடி வீண்: இந்திய அணி தோல்வி!
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வெயில்: காரணம் என்ன?
இந்தியாவின் நம்பர் ஒன் செஸ் வீரர் குகேஷுக்கு முதல்வர் வாழ்த்து!