அடிப்படை உறுப்பினர்களை விட பொதுக்குழு உறுப்பினர்களே மேலானவர்கள் என்ற வாதத்தை ஏற்க முடியாது என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பு நீதிமன்றத்தில் வாதிட்டது.
தனி நீதிபதி தீர்ப்பு தவறானது
அதிமுக பொதுக்குழு செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று (ஆகஸ்ட் 25) விசாரணை நடைபெற்றது.
எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தனி நீதிபதியின் தீர்ப்பு முற்றிலும் தவறானது என்று வாதிட்டனர்.
2539 பொதுக்குழு உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டே பொதுக்குழு நடந்ததாகவும், கட்சியின் உச்சபட்ச அதிகாரம் அவர்களுக்கே உண்டு என்றும் வாதிட்டனர்.
அடிப்படை உறுப்பினர்களே மேலானவர்கள்
அதன்பிறகு வாதத்தை தொடங்கிய ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார், “அடிப்படை உறுப்பினர்களால் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்படும் ஒரே கட்சி அதிமுக தான்.
அடிப்படை உறுப்பினர்களை விட பொதுக்குழு உறுப்பினர்களே மேலானவர்கள் என்ற வாதத்தை ஏற்க முடியாது. இது சம்பந்தமான விதியை கொண்டு வருவதில் எம்.ஜி.ஆர். உறுதியாக இருந்தார்.
தலைமைக் கழகத்தின் பெயரில் தான் பொதுக்குழுவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டதே தவிர, ஒருங்கிணைப்பாளரோ அல்லது இணை ஒருங்கிணைப்பாளரோ அனுப்பவில்லை.
பதவிகள் காலியாகவில்லை
பொதுக்குழு கூட்டம் முறைப்படி கூட்டப்படவில்லை. சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகளால் தகுதி நீக்கம் ஆகியிருந்தால் அப்போது பதவிகள் காலியானதாக கூறலாம்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். பொதுக்குழுவில் ஒப்புதல் பெறாவிட்டால் பதவிகள் காலியாகி விடும் என கட்சி விதிகளில் கூறப்படவில்லை. கட்சி விதிகளில் திருத்தம் செய்ய ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு தான் அதிகாரம் உள்ளது.
மாவட்ட செயலாளர்கள் தான் ஒற்றைத் தலைமை கோரியதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. அதனால்தான் எந்த புள்ளி விவரமும் இல்லை என தனி நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
பொதுக்குழு நோட்டீஸ் செல்லாது
கட்சி துவங்கிய 1972ல் பொதுச்செயலாளரை அடிப்படை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை மாற்ற முடியாது என விதி உள்ளது.
ஆனால் 2017ல் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் உருவாக்கப்பட்ட போது இரு பதவிகளும் பொதுக்குழு உறுப்பினர்களால் தேர்வு செய்யும் வகையில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
அதன் பிறகு 2021 டிசம்பரில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்களை அடிப்படை உறுப்பினர்கள் தேர்வு செய்யும் வகையில் செயற்குழுவில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
கட்சி விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே பொதுக்குழுவை கூட்ட முடியும் என்பதால் ஜூலை 11 கூட்டத்துக்கு அனுப்பிய நோட்டீஸ் செல்லாது” என்று வாதிட்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் ஆகியோர், “இரு தரப்பு வழக்கறிஞர்களும் தங்களது எழுத்துபூர்வமான வாதங்களை நாளை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று கூறி தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தனர்.
கலை.ரா
அதிமுக பொதுக்குழு வழக்கு: எடப்பாடி – பன்னீர் காரசார வாதம் – முழு விவரம்!