டிஜிட்டல் திண்ணை: ஓபிஎஸ்.சுக்கு வேலுமணியின் ஒற்றை நிபந்தனை! அதிமுக முக்குலத்துப் புள்ளிகளின் ரகசிய உரையாடல்!

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் சசிகலாவின் நெல்லை பயணம் தொடர்பான செய்திகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.

அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் சில அழைப்புகளை அட்டெண்ட் செய்து பேசிவிட்டு மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.

“வருகிற ஆகஸ்டு 16 ஆம் தேதி அதிமுகவின் அவசர செயற்குழுக் கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்கான வியூகங்கள் விவாதிக்கப்பட இருக்கின்றன. அந்த வியூகங்களில் முதன்மையானதாக ஓபிஎஸ், சசிகலா ஆகியோரை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பது பற்றிய விவாதமும் இருக்கும் என்கிறார்கள் அதிமுகவின் அதிகாரபூர்வ நிர்வாகிகளே.

ஏற்கனவே முன்னாள் அமைச்சரும், தலைமை கழக செயலாளருமான எஸ்.பி. வேலுமணி அதிமுகவுக்குள் மீண்டும் ஓ.பன்னீரை கொண்டுவருவதற்கான செயல்திட்டங்களில் ஈடுபட்டிருக்கும் செய்தி மின்னம்பலம் டிஜிட்டல் திண்ணையில் வெளியானது.

அதிமுகவில்  உடைந்திருக்கிறது என்ற பொதுமக்களின் அபிப்ராயத்தை மாற்ற வேண்டுமென்றால் பன்னீரை மீண்டும் சேர்த்தாக வேண்டும் என்ற கருத்தில் சீனியர் அதிமுக நிர்வாகிகள் உடன்படுகின்றனர். ஆனால் கே.பி. முனுசாமி, ஜெயக்குமார் போன்ற சிலர்தான் பன்னீரை உள்ளே சேர்க்க இன்று வரை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

பன்னீர்செல்வம் கடந்த எம்பி தேர்தலிலேயே நிறைய செலவழித்துவிட்டார். இப்போது தெம்பான தனி ஆவர்த்தனம் வாசிக்கும் அளவுக்கு அவரிடம் பொருளாதார ரீதியான பலம் இல்லை. இந்த நிலையில்தான் வேலுமணி தரப்பில் இருந்து பன்னீருக்கு ஒரே ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது, ‘நீங்கள் அதிமுகவில் சேர்வதற்கு எவ்வித நிபந்தனையும் விதிக்கக் கூடாது. நீங்கள் வந்த பிறகு மற்றதை நாங்கள் பார்த்துக்குறோம்’ என்பதுதான் அந்த ஒற்றை நிபந்தனை. இதுகுறித்து பன்னீரிடம் இருந்து வேலுமணிக்கு பதில் வரவில்லை என்பதுதான் ஆகஸ்டு 12 ஆம் தேதி நிலைமை.

அதே நேரம் அதிமுகவின் முக்குலத்துப் புள்ளிகளிடம் அதிகாரபூர்வமற்ற வகையில் செயற்குழுவை ஒட்டி உரையாடல்கள் நடந்துவருகின்றன. அதாவது பன்னீரின் வலதுகரமாக இருக்கும் வைத்திலிங்கம் தரப்பில் இருந்து அதிமுகவின் இப்போதைய நிர்வாகிகளாக இருக்கும் ஓ.எஸ். மணியன், காமராஜ், செல்லூர் ராஜூ, புதுக்கோட்டை விஜயபாஸ்கர் உள்ளிட்டோரிடம் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.

செயற்குழு கூட்டத்தில் அதிமுகவின் ஒற்றுமை பற்றி வலியுறுத்துமாறு அவர்களிடம் வைத்திலிங்கம் தரப்பினர் கேட்டு வருகிறார்கள். இதேபோல மன்னார்குடி திவாகரனின் மகன் ஜெய் ஆனந்ந்தும் கூட தென் மாவட்ட அதிமுக நிர்வாகிகளை தொடர்புகொண்டு ரொம்ப பவ்யமாகவும், பணிவாகவும் பேசி வருகிறார். வருகிற 16 ஆம் தேதி அவசர செயற்குழு கூட்டத்தில் ஒன்றுபட்ட அதிமுக என்ற விவகாரத்தை வலிமையாக எடுத்து வைத்து எடப்பாடியின் பிடிவாதத்தை தளர வைக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் பிளான்.

மேலும், ‘அதிமுக ஒன்றாக இல்லை என்ற நிலையில்தான் பாஜக நம்மை சீண்டிப் பார்க்கிறது. நாம் எல்லாரும் ஒன்றாகிவிட்டால் பாஜகவை கழற்றிவிடலாம்.  பாமக, தேமுதிக, புதிய தமிழகம் என ஏற்கனவே கூட்டணியில் இருந்த கட்சிகளை எல்லாம் சேர்த்து வலிமையான கூட்டணியை உருவாக்கலாம். இன்று நாம் இத்தனை பிரிவாக இருப்பதற்கு அடிப்படைக் காரணம் பாஜகதான். எனவே நாம் ஒற்றுமையாக இருந்து 2026 இல் ஆட்சியை பிடிக்க வேண்டும். அதற்கு இதுவே தருணம்’ என்றெல்லாம் அவர்கள் விவாதித்திருக்கிறார்கள்.

புதுக்கோட்டை விஜயபாஸ்கரிடம் இதுபற்றி வைத்திலிங்கம் தரப்பினர் பேசியபோது, ‘அதிமுக பலமாக இருக்கறதுதான் எல்லாருக்கும் நல்லது. இல்லேன்னா பிசினசை பார்க்க போக வேண்டியதுதான்’ என்று விரக்தியாக சொல்லியிருக்கிறார் விஜயபாஸ்கர்.

ஆனால் இந்த தனிப்பட்ட உரையாடல்கள் எல்லாம் அதிமுகவின் அவசர செயற்குழுவில் விவாதங்களாக மாறுமா என்பதுதான் முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியாக இருக்கிறது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

ஆணவப் படுகொலையை ஆதரித்து பேசிய ரஞ்சித் : விசிக புகார்!

சவுக்கு சங்கர் மீது மீண்டும் பாய்ந்தது குண்டர் சட்டம்!

+1
0
+1
2
+1
0
+1
2
+1
2
+1
0
+1
0

1 thought on “டிஜிட்டல் திண்ணை: ஓபிஎஸ்.சுக்கு வேலுமணியின் ஒற்றை நிபந்தனை! அதிமுக முக்குலத்துப் புள்ளிகளின் ரகசிய உரையாடல்!

  1. ஒரு காலத்துல சசிகலா, அவங்க உறவினர்கள் இருக்கற மன்னார்குடி தெரு வாசலிலேயே காரை விட்டு இறங்கி (மா.செ., மந்திரி யாரா இருந்தாலும்) நடந்து அவங்க வீட்டு வாசல்ல நின்னு அவங்க உள்ள வா என சொன்னப்புறம் உள்ள நுழைந்து உடனே உக்காராம நின்னுகிட்டே பேசிட்டு வந்த நிகழ்ச்சி எல்லார் மனசுலயும் ரீவைண்ட் காட்சி மாதிரி ஓடாமயா இருக்கும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *