“கோவை தொழிற்பூங்காவுக்கு தரிசு நிலங்கள் மட்டுமே எடுக்கப்படும்” – அரசு அறிவிப்பு!

Published On:

| By Kalai

கோவை மாவட்டத்தில் அமைய இருக்கும் தொழிற்பூங்காவுக்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படாது எனவும், மனமுவந்து நிலம் தருபவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படும் எனவும் அரசு அறிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையம், அன்னூர் ஒன்றியங்களில் உள்ள பள்ளேபாளையம், இலுப்பநத்தம், பொகளூர், குப்பனூர், அக்கரை செங்கம்பள்ளி, வடக்கலூர் உள்ளிட்ட 6 ஊராட்சிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் 3850 ஏக்கர் பரப்பளவில் டிட்கோ தொழிற்பூங்கா அமைக்க முடிவு செய்யப்பட்டது.

தொழிற்பூங்கா அமைக்க விவசாய நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்தும், தொழிற்பூங்கா அமைத்தால் சுற்றுவட்டார பகுதிகளில் மாசு ஏற்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமெனவும் கூறி அப்பகுதி விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

 இதனிடையே  விவசாய நிலங்களை கையகப்படுத்தாமல், தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான நிலங்களில் தொழிற்பூங்கா அமைக்கப்படும் என நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா தெரிவித்தார்.

இதையடுத்து அவரது கோரிக்கையை ஏற்று அரசு இன்று(டிசம்பர் 17)ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதில், “தொழில் மற்றும் கல்வித்துறைகளில் சிறந்து விளங்கும் கோயம்புத்தூர் மாவட்டத்தின் தொழில் வளர்ச்சியை மேலும் ஊக்கப்படுத்தி பல முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையம் வட்டங்களில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (டிட்கோ) மூலம் தமிழ்நாடு அரசு ஒரு தொழிற்பூங்காவை நிறுவ முடிவு எடுத்தது.

கோயம்புத்தூர் மாவட்டத்தை பொருளாதாரத்தில் மேம்பட்ட மாவட்டமாக தொடர்ந்து தக்க வைக்கவும் அதிக வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தவும் மேற்படி தொழிற்பூங்கா அமைக்க 3862 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டது.

தற்போது நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அன்னூர் மற்றும் மேட்டுப்பாளையத்தில் விவசாய நிலங்களை கையகப்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

அவரது கோரிக்கையை கருத்தில் கொண்டும், விவசாய பெருமக்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டும், தற்போது விவசாய நிலங்களை விடுத்து தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமாக உள்ள தரிசு நிலங்கள் 1630 ஏக்கர் மட்டும் தொழிற்பூங்கா அமைக்க கையகப்படுத்தப்படும்.

எந்தவித கட்டாயமும் இன்றி விவசாயிகள் மனமுவந்து கொடுக்க முன்வரும் நிலங்களுக்கு திருப்திகரமான இழப்பீடு வழங்கப்படும். விவசாயிகளின் நலனில் எப்போது அக்கறை கொண்டுள்ள தமிழ்நாடு அரசு அவர்களின் நலனுக்காக மட்டுமே செயல்படும்.

இத்தொழிற்பூங்காவில் அமையவிருக்கும் தொழிற்சாலைகள் காற்று மற்றும் நிலத்தடி நீரை மாசுபடுத்தாத தொழிற்சாலைகள் மட்டுமே அமைக்கப்படும். எனவே டிட்கோ மூலம் தனியார் நிறுவனங்களுக்கு சொந்தமான தரிசு நிலங்களில் மட்டுமே தொழிற்பூங்கா அமைக்க தற்போது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது” என்று தெரிவித்துள்ளது.

கலை.ரா

அரசு நலத்திட்டங்கள்: ஆதார் எண் கட்டாயம்!

இந்தியர்களுக்கு 15 நாட்களில் விசா: பிரிட்டிஷ் தூதர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share