ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பான தமிழக அரசின் தடைச்சட்டத்தை ரத்து செய்த உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை (செப்டம்பர் 9) விசாரணைக்கு வர உள்ளது.
ஆன்லைன் ரம்மியால் தமிழகத்தில் அண்மைக்காலமாக உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. நன்கு படித்தவர்கள், அரசு வேலையில் இருப்பவர்களே இந்த ரம்மியால் உயிரை மாய்த்துக் கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மக்களை பாதிக்கும் இதுபோன்ற விளையாட்டுகளுக்கு தடை விதித்து கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் 21-ந் தேதி தமிழக அரசு சட்டம் இயற்றியது.
ஆனால் இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜங்லி கேம்ஸ், பிளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தன. இதனை விசாரித்த நீதிமன்றம், தமிழக அரசு கொண்டு வந்துள்ள இந்த சட்டம், அரசியல் சாசனத்துக்கு விரோதமானது எனவும், போதுமான காரணங்களை விளக்காமல் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி கடந்த ஆண்டு இந்த சட்டத்தை ரத்து செய்தது.
மேலும், உரிய விதிகளுடன் புதிய சட்டம் கொண்டுவர அரசுக்கு எந்த தடையும் இல்லை எனவும் தீர்ப்பளித்தது. இதை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் தமிழக அரசின் சட்டத்தை முறையாக பரிசீலிக்காமலே உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளதாக தெரிவித்தது.
எனவே, ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடை சட்டத்தை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆன்லைன் ரம்மி தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நாளை(செப்டம்பர் 9)விசாரணைக்கு வர இருக்கிறது.
கலை.ரா