ராஜன் குறை
மக்களாட்சியில் ஆட்சி என்பது மக்களின் சுயாட்சியாகும். மக்கள் தேர்தலில் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகள் மக்கள் சார்பாகவே, மக்களின் பெயராலேயே ஆட்சி புரிகிறார்கள். அவர்களுக்கு, மக்களுக்கு தீங்கு பயக்கும் எந்த ஒரு செயல்பாட்டையும் தடை செய்யவும், மக்களை பாதுகாக்கவும் உரிமையும், கடமையும் உள்ளது.
இந்திய மாநிலங்களைத்தான் ஆங்கிலத்தில் ஸ்டேட் அதாவது அரசு என்று நமது அரசியலமைப்பு சட்டம் அழைக்கிறது. ஒன்றிய அரசாங்கம் என்பது அத்தகைய அரசுகளின் ஒன்றிய அரசாங்கமே; அதாவது யூனியன் கவர்ன்மெண்ட் என்று அழைக்கப்படுவது.
மாநிலங்களில் மக்கள் பிரதிநிதிகளின் மன்றம் சட்டமன்றம், ஆங்கிலத்தில் லெஜிஸ்லேட்டிவ் அசெம்பிளி, லெஜிஸ்லேட்சர் (Legislative Assembly, Legislature) என்றுதான் அழைக்கப்படுகிறது. அதன் பொருள் மக்களுக்குத் தேவையான சட்டங்களை இயற்றும் இறையாண்மை பெற்றது மாநில சட்டமன்றம் என்பதுதான்.
மாநிலத்தில் பல அப்பாவி மக்கள் ஆன்லைன் ரம்மி என்ற செல்பேசி செயலி மூலம் விளையாடும் கொடூர சூதாட்டத்தில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஆண்கள், பெண்கள், இளம் வயதினர், நடுத்தர வயதினர் என்று பல தரப்பட்டவர்களும் இந்த மாயவலையில் சிக்குண்டு தங்களை மாய்த்துக்கொள்ளும் நிலைக்குச் செல்கிறார்கள். மக்களின் அரசு அவர்களை மாளவிட்டு வேடிக்கை பார்க்க முடியுமா?
எனவேதான் ஆட்சியின் மாட்சிமையைக் காக்க ஆன்லைன் ரம்மி என்ற சூதாட்டத்தைத் தடை செய்து சட்டம் இயற்றுகிறது அரசு. அதையும் அ.இ.அ.தி.மு.க போல தான்தோன்றித்தனமாக செய்யவில்லை. ஓய்வு பெற்ற நீதியரசர் சந்துரு அவர்கள் தலைமையில் ஒரு குழு அமைத்து, தீர விசாரித்து, சட்ட நுணுக்கங்களைக் கருத்தில் கொண்டு விரிவான பரிந்துரை கொடுத்த பின்னரே, சட்டமொன்றை இயற்றுகிறது.
நீதியரசர் சந்துரு பொது நலன் கருதியே வழக்கறிஞரானவர்; நீதியரசர் ஆனவர். மாநில மக்களின் ஏகோபித்த நன்மதிப்பை பெற்றவர். அவருடைய தலைமையில் அமைந்த ஆய்வுக்குழு பரிந்துரைக்கும்படி சட்டமியற்றுவது மாநில அரசின் இறையாண்மையின் வெளிப்பாடு; அதன் உரிமை, கடமை.

ஆட்சிக்கு இடையூறாகும் ஆளுநர்
அரசியலமைப்பு சட்டப்படி, மாநில சட்டமன்றம் இயற்றும் சட்டங்களை மாநில ஆளுநரே ஒப்புதல் அளித்து சட்டமாக்க வேண்டும். அந்தக் குறியீட்டு செயல்பாடு ஒன்றிய அரசாங்கத்தைப் பொறுத்தவரை குடியரசுத் தலைவருக்கும், மாநில அரசைப் பொறுத்தவரை ஆளுநருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
அந்தக் குறியீட்டு செயல்பாட்டுக்கு மதிப்பளிக்க சில உரிமைகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவர்கள் அந்தச் சட்டம் அரசியலமைப்பு சட்டத்துடன் கடுமையாக முரண்படுகிறதா, குறிப்பாக அரசியலமைப்பு சட்டத்தின் தரிசனத்துக்கு விரோதமாக உள்ளதா என்பதை பரிசீலிக்க வேண்டும்.
அப்படி இருந்தால் தனது ஒப்புதலின்மையைக் கூறியோ, விளக்கம் கேட்டோ திருப்பி அனுப்பலாம். ஆனால் சட்டமன்றமோ, நாடாளுமன்றோ அந்த சட்டத்தை மீண்டும் நிறைவேற்றி அனுப்பினால் ஒப்புதல் அளிக்கத்தான் வேண்டும்.
ஆளுநரைப் பொறுத்தவரை அவருக்குத் தவிர்க்க முடியாத ஐயங்கள் இருந்தால் அந்த சட்டத்தை குடியரசு தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பலாம் என்ற ஒரு சாத்தியமும் இருக்கிறது. ஆனால் இதற்கெல்லாம் போதுமான காரணங்கள் இருக்க வேண்டும்.
சாதாரணமான எளிய சட்டச் சிக்கல்களை காரணம் காட்டியெல்லாம் ஒப்புதல் அளிக்க மறுக்கவோ, தாமதிக்கவோ செய்வது மக்களின் இறையாண்மையை மதிக்காமல் இருப்பதையே குறிக்கும். அப்படி நிறைவேற்றப்படும் சட்ட த்தில் சில சிக்கல்கள் இருக்குமானால், அது குறித்து வழக்குகள் தொடுக்கப்பட்டால் நீதிமன்றங்கள் அவற்றை பரிசீலித்து தக்க தீர்ப்பினை வழங்கும்.
இறையாண்மையின் இரண்டு வடிவங்கள் மக்களின் சுயாட்சி என்பதும், சட்டத்தின் ஆட்சி என்பதும். சட்டமன்றம் சுயாட்சியின் குரல்; நீதிமன்றம் சட்டத்தின் ஆட்சியின் குரல். இரண்டுக்கும் இடையே சட்டத்தை ஆராயவும், மனம் போன போக்கில் தாமதப்படுத்தவும், குறுக்குச் சால் ஓட்டவும் ஆளுநர் யார் என்பதே நம்முன் உள்ள கேள்வி.
ஆன்லைன் ரம்மியை தடை செய்வது என்ன அரசியலமைப்பு சட்டத்தையே சீர்குலைத்து விடுமா என்ன? இது போன்ற எத்தனையோ அம்சங்களில் அரசியலமைப்பு சட்டமே மாற்றப்பட்டுள்ளதை அறிவோம். உதாரணமாக, ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்ததை, ஒன்றிய அரசு தனிச்சட்டம் இயற்றி அகற்றவில்லையா?
அதை எப்படிச் செய்ய முடிந்தது? அடிப்படையில் அந்தப் பிரச்சினை அரசியலமைப்பு சார்ந்த பிரச்சினையல்ல. மாடுகள் ஜல்லிக்கட்டு விளையாட்டில் துன்புறுத்தப்படுகின்றனவா என்ற கேள்விதான் பிரச்சினை. இதில் மரபு சார்ந்த, மக்கள் விருப்பம் சார்ந்த உரிமைக்குப் பாதுகாப்பளிக்க அரசுக்கு இறையாண்மை இருக்கிறது. அதை உச்ச நீதிமன்றம் மறுதலிக்க அரசியலமைப்பு சட்டத்தில் இடமில்லை.
அது போல எத்தனையோ சட்டங்களை சட்டமன்றங்களும், நாடாளுமன்றங்களும், உச்ச நீதிமன்றங்களும் மாற்றியுள்ளன, நீக்கியுள்ளன, புதிய விளக்கங்கள் அளித்துள்ளன.
நீதியின் தத்துவமும், வரலாறும், நடைமுறையும் தெரிந்த யாரும் பிரச்சினை சட்டமன்றத்தின் இறையாண்மைக்கும், நீதிமன்றத்தின் இறையாண்மைக்கு இடையிலானது, அதில் குறுக்கே புக ஆளுநருக்கு எந்த வேலையும் இல்லை என்பதை தெளிவாக உணர்வார்கள். அவருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது ஒரு குறியீட்டளவிலான பணிதானே தவிர, அவர் ஆட்சியாளரும் இல்லை, நீதியரசரும் இல்லை.
ஆளுநருக்கு ஆதரவாகப் பேசுபவர்கள் ஆன்லைன் ரம்மியைத் தடை செய்வதில் ஒரு சட்டச் சிக்கல் இருக்கிறது என்கிறார்கள். அந்தச் சிக்கல் எதுவாக இருந்தாலும் அதைப் பற்றி கவலைப்பட வேண்டியது ஆளுநர் அல்ல, அந்தப் பணியை செய்ய நீதிமன்றங்கள் உள்ளன, நீதிமன்றத்தில் தன் சட்ட த்துக்காக வாதாட மாநில அரசு தயாராக உள்ளது. ஆனாலும் ஆளுநர் ஆதரவாளர்களான மாநில உரிமை மறுப்பாளர்கள் கூறும் அந்த மாயாவாத சிக்கல் என்ன என்பதை நாம் தெரிந்து கொள்வதில் தவறில்லை.

ஆட்டமா, சூதாட்டமா?
பொதுவாக விளையாட்டு என்பது வெற்றி, தோல்வி என்ற விளைவுகளுக்கு அப்பாற்பட்டு இன்பத்தை அளிப்பது. அதனால்தான் நாம் ஓர் உறவுச்சிக்கல் வந்தால் “நான் விளையாட்டுக்குத்தான் சொன்னேன். நீங்கள் வருந்த வேண்டாம்” என்று சொல்கிறோம். ஆங்கிலத்தில் பெருந்தன்மையுடன் பழகுபவர்களை ஸ்போர்டிவ் பெர்சன் (Sportive Person) என்று சொல்வோம்.
இரண்டாவதாக, விளையாட்டு என்பது மனதை ஒருமுகப்படுத்தி, உடலை பயிற்றுவித்து திறனை வளர்த்துக்கொள்ளும் பயிற்சி என்பதால் அது மனிதர்களின் ஆற்றல்களை விகசிக்கச் செய்வது என்ற ஒரு மதிப்பும் இருக்கிறது.
ஆனால் ஒருவர் பணத்தைக் கட்டி, கட்டிய பணத்தை விட அதிகமாக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஓர் ஆட்டத்தில் இறங்கினால் அங்கு பணமே முக்கிய நோக்கமாகிறது. அது விபரீதமான விளைவுகளைக் கொண்டதாகவும் உள்ளது. அதனால் அது சூது கலந்த ஆட்டம், சூதாட்டம் என்று அறியப்படுகிறது.
ஆனால் பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்தே உலகின் பல நாடுகளில் ஒரு விநோதமான பார்வை நீதியியலில் உருவாகியுள்ளது. அது என்னவென்றால், ஒருவர் பணம் கட்டி ஆடினாலும், அவர் தன் திறமையைப் பயன்படுத்தி அதிக பணம் ஈட்ட விளையாடினால் அது சூதாட்டமல்ல என்பதுதான்.
இந்தியாவிலும் உச்ச நீதிமன்றம் இந்த வேறுபாட்டை பல தீர்ப்புகளில் அங்கீகரித்துள்ளது. அதாவது பெருமளவில் அதிர்ஷ்டத்தை நம்பி பணம் கட்டி ஆடினால் அது சூதாட்டம்; ஆனால் கணிசமாக திறமையும் அந்த விளையாட்டுக்குத் தேவைப்பட்டால் அது பரிசுக்கான விளையாட்டுதானே தவிர சூதாட்டமல்ல என்பதே அந்த வேறுபாடு.
சூதாட்டத்தை தடை செய்யலாம்; ஆனால் திறன் அடிப்படையில் பணம் கட்டி, அதிக பணத்தை பரிசாகப் பெறும் விளையாட்டைத் தடை செய்வது மக்களின் சுதந்திரத்தில் தலையிடுவது என்பதே வாதம்.
குதிரைப் பந்தயத்தில் பலர் பெருமளவு பணம் கட்டி பொருளை இழப்பார்கள். செல்வந்தர்கள் வறியவர்கள் ஆகியுள்ளார்கள். ஆனால் கூட அது சூதாட்டமல்ல என்று நீதிமன்றம் கூறியுள்ளது. காரணம், குதிரையும், அதை ஓட்டும் ஜாக்கியும் பயிற்சி மற்றும் திறமையின் அடிப்படையிலேயே ரேசில் பங்கேற்கிறார்கள்.
அவர்கள் மீது பணம் கட்டுபவர்களும் அந்தக் குதிரைகளின் பிறப்பு, வரலாறு, ஜாக்கிகளின் திறமை இன்னபிற அம்சங்களைக் குறித்த அறிவின் மூலமாகவே பந்தயம் கட்டுகிறார்கள். அதனால் அது திறன் சார்ந்த விளையாட்டுத்தான் என்பதே இந்த விநோதமான வாதம்.
அதே போல மூணு சீட்டு என்ற விளையாட்டில் ஒருவருக்குக் கிடைக்கும் சீட்டுகளின் மதிப்பே வெற்றி தோல்வியை முடிவு செய்கிறது. அவர் அந்த சீட்டுகளை மாற்ற வாய்ப்பு கிடையாது. அதனால் அது அதிர்ஷ்டத்தை மட்டுமே நம்பிய சூதாட்டம். தடை செய்யலாம்.
ரம்மி என்று வந்தால் ஒருவர் தனக்குக் கிடைக்கும் சீட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். பிற ஆட்டக்காரர்களின் முடிவுகளை கவனமாக கருத்தில் கொண்டு தன் கையில் இருக்கும் சீட்டுக்களை செட் சேர்த்து வெற்றி பெறலாம் என்பதால் இதில் திறமைக்கு கணிசமான பங்கு இருக்கிறது என நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன.

ரம்மி என்பது சூதாட்டமே!
ரம்மி விளையாட்டில் திறமைக்குச் சற்றே வேலையிருக்கிறது என்பது உண்மைதான். ஆனால், இறுதி முடிவில் அதிர்ஷ்டத்துக்கே அதிக பங்கு உள்ளது. இது ரம்மி ஆடும் அனைவருக்கும் தெரிந்த உண்மைதான்.
இந்தப் பிரச்சினையை நாம் வேறொரு கோணத்தில் அணுகலாம். செஸ் விளையாட்டிலோ, டென்னிஸ் விளையாட்டிலோ, கிரிக்கெட் விளையாட்டிலோ திறமை என்பது முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் தங்கள் திறமையை வளர்த்துக்கொள்பவர்கள் மிகப்பெரிய சாம்பியன்களாக அறியப்பட்டு பல ஆண்டுகள் தொடர்ந்து பட்டங்களை வெல்கிறார்கள்.
செஸ் என்றால் விஸ்வநாதன் ஆனந்த், டென்னிஸ் என்றால் சானியா மிர்ஸா, கிரிக்கெட் என்றால் சச்சின் டெண்டுல்கர், தோனி என்று தொடர்ந்து வெற்றியை குவிக்கும் வீரர்கள், வரலாற்று சாதனையாளர்கள் உள்ளார்கள். டென்னிஸ் விளையாட்டை யாரும் சில நாட்கள் பயிற்சி செய்துவிட்டு ரஃபேல் நாடாலை வென்றுவிட முடியாது.
அது போல தமிழ்நாடு ரம்மி சாம்பியன், இந்திய ரம்மி சாம்பியன், உலக ரம்மி சாம்பியன் என்று யாராவது இருக்கிறார்களா? அவர்களை சுலபத்தில் வெல்லமுடியாத திறமையாளர்கள் என்று கூற முடியுமா? முப்பதாண்டுகள் ரம்மி விளையாடுபவரை, மூன்று நாட்கள் பயிற்சி பெற்ற ஒருவர் கூட வென்றுவிட முடியுமே? அப்போது அங்கே திறமைக்கு மதிப்பென்ன இருக்கிறது? அதிர்ஷ்டம்தானே தீர்மானிக்கிறது?
ரம்மி விளையாட்டில் திறமைக்குப் பங்கிருக்கிறது. ஆனால், அது ஆட்டத்தின் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் இடத்தில் இல்லை. நாம் சட்ட த்தை கவனமாக புரிந்துகொண்டால், திறமை வெற்றி தோல்வியை கணிசமாகத் தீர்மானிக்காத ஓர் ஆட்டத்தை ஒருவர் பணம் கட்டி விளையாடினால் அது சூதாட்டமே என்பதை உணரலாம்.
ஆட்கள் ஆடும் ரம்மியும், ஆன்லைன் ரம்மியும்
அடுத்த கட்டமாக நாம் கவனிக்க வேண்டிய பிரச்சினை, ஆட்கள் நேரில் அமர்ந்து, தங்கள் கையில் சீட்டுக்களைப் பிடித்துக் கொண்டு ஆடும் ரம்மி ஆட்டத்துக்கும், ஆன்லைன் ரம்மிக்கும் உள்ள வேறுபாடு. ஆன்லைன் ரம்மி என்பது ஆப் எனப்படும் செயலியில் உள்ள கணினி நிரல் அதன் அல்காரிதம் ஆகியவற்றால் இயக்கப்படுவது.
ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோருக்குத் தெரியும். அதில் அல்காரிதம் எனப்படுவது என்ன வித்தையெல்லாம் செய்கிறது என்று. நாம் ஒரு பொருளை பற்றி குறிப்பிட்டால், அது தொடர்பான விளம்பரங்களை நமக்குத் தொடர்ந்து காட்டும். ஒருவர் செல்பேசியில் ஒரு பொருளைக் குறித்துப் பேசினால்கூட அந்தப் பொருளுக்கான விளம்பரங்கள் ஃபேஸ்புக் பக்கத்தில் தோன்ற தொடங்குகிறது எனப் பலரும் கூறுகின்றனர். அந்த அளவு அல்காரிதம் நுட்பமாகச் செயல்படுகிறது.
இப்படியான ஒரு மென்பொருள் யுகத்தில், கணினியுடன் பணம் கட்டி ரம்மி ஆடுவது என்பது தற்கொலையில் சென்று முடிவதில் வியப்பென்ன இருக்க முடியும்? அந்த கணினி நிரல்கள், அல்காரிதம், ஆடுபவர்களை தோற்கடிக்கும்படியே உருவாக்கப்பட்டிருக்காது, இயக்கப்படாது என்று எப்படிக் கூற முடியும்?
ஆன்லைன் ரம்மியால் இத்தனை பேர் தற்கொலை செய்து கொண்டார்கள் என்ற சோகக் கதைகளை நாள்தோறும் பார்க்கிறோம். நான் ஆன்லைன் ரம்மி விளையாடி கார் வாங்கினேன், வீடு வாங்கினேன் என்று யாரேனும் கூறுகிறார்களா? அப்படி பொருள் ஈட்டுவது சாத்தியமா?
எந்த அளவு சாமர்த்தியசாலியானாலும் குறைந்த அளவில் பணம் சம்பாதிக்கலாம். ஆனால், சறுக்கினால் பெரும் பொருள் இழப்பு நேரும் என்பதுதானே ஆன்லைன் ரம்மியின் நியதியாக இருக்கிறது? ஆன்லைன் ரம்மி நடத்துபவர்கள் யார்? இவர்கள் மக்களுக்கெல்லாம் கூடுதல் வருவாய் கிடைக்க வேண்டும் என்ற சேவை நோக்குடனா நடத்துகிறார்கள்? அப்பாவிகளின் ரத்தத்தை உறிஞ்சும் லாப வெறியுடன் அல்லவா நட த்துகிறார்கள்?
ஆங்கிலத்தில் Justice as fairness என்பார்கள். நியாயம் எதுவோ அதுவே நீதி எனலாம். அப்பாவி மக்களை ஆன்லைன் ரம்மி என்ற அரக்கனிடமிருந்து காப்பதே அரசின் கடமை, நீதியின் கடமை. அரசும், நீதிமன்றமும் கடமையைச் செய்ய வழிவிட்டு ஒதுங்கி நிற்பதே மனசாட்சியுள்ள ஆளுநர் செய்ய வேண்டியது.
ஒன்றிய அரசும் மாநில அரசின் சட்டத்தைக் காத்து நிற்பதே அறம். மக்களின் உயிர்களை பணயம் வைத்து அரசியல் செய்வது அறமல்ல. மாநில மக்கள் வாக்களித்துதான் ஒன்றிய அரசும் உருவாகிறது என்பதை மறந்துவிடக் கூடாது. கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு என்பார்கள். ஆன்லைன் ரம்மி மக்களுக்குத் தீங்கானது என்பது கண்கூடு.
கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com
தன்பாலின திருமணத்தை சட்டபூர்வமாக அங்கீகரிக்க முடியாது: காரணம் என்ன?
சச்சினுக்கு அடுத்து கோலி தான்!