ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் ஒருநாளைக்கு ரூபாய் 10 கோடி வரை வருமானம் ஈட்டுவதாக தகவல் சொல்லப்படுகிறது.
ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யவும், ஆன்லைன் விளையாட்டை ஒழுங்குபடுத்தவும், கடந்த அக்டோபர் 19ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
அதில் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களுக்கு சிறைத் தண்டனை, அபராதம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மசோதாவில் இடம் பெற்றுள்ளன.
இந்த மசோதா பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
ஒப்புதல் கிடைத்ததும் அவசர சட்டமாக அமல்படுத்தப்படும் என்ற நிலையில் மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்துவிட்டதாக தகவல் வெளியானது. அந்த தகவலை மறுத்த ஆளுநர், மசோதாவுக்கு இன்னும் ஒப்புதல் அளிக்க வில்லை என்று கூறினார்.
இந்தச் சூழலில், மசோதாவின் காலம் வரும் 27ஆம் தேதியுடன் நிறைவடைய உள்ள நிலையில், ஆன்லைன் ரம்மி தடை செய்யும் மசோதா குறித்து விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி, நேற்று (நவம்பர் 24) தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்த நிலையில், தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி தடைக்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டும் இன்னும் பலர் அதில் மூழ்கி பணத்தை இழந்துவருகின்றனர். அதிலும், ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் தமிழகத்தைக் குறிவைத்து பல கோடி ரூபாயை அள்ளிவருகின்றன.
இதுகுறித்து திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முருகானந்தம் அவர்களிடம் பேசினோம். ”இதில், ஆன்லைன் ரம்மி சர்க்கிள் என்பது மெயின். இதுதவிர ஏ23 (ace2three), ஜங்கிள் ரம்மி, ரம்மி கல்சர் ஆகியனவும் உள்ளன.
இவைதான் ரம்மியின் பெரிய கம்பெனிகள். ஆன்லைன் ரம்மியின் ஆப் ஒன்றாக இருந்தாலும், வருமானத்தைப் பெறுவதற்காகவே மூன்று பெயர்களில் அக்கவுண்ட் வைத்துள்ளனர். பிளே கேம்ஸ், ரம்மி சர்க்கிள் என்ற பெயர்களில் கணக்குகள் வைத்து பணம் பிடிக்கப்படுகிறது.
வருமானவரித் துறையை ஏமாற்றுவதற்காகத்தான் அவர்கள் பல பெயர்களில் அக்கவுன்ட் வைத்துள்ளனர். தமிழகத்தில் சட்டசபையில் மசோதா தாக்கல் செய்தபிறகு, இவ்விளையாட்டு விளம்பரங்களில் தமிழக அரசு தடை குறித்த அறிவிப்புகள் வைக்கப்பட்டுள்ளன.
ஆனாலும், இதில் போனஸ் தருவதாகக் கூறி ரம்மி நிறுவனங்கள் ஒரு மோகத்தை ஏற்படுத்தி அவர்களை மீண்டும் விளையாட வைத்துள்ளன. தற்போது வரை ஒரு ஆப்பில் மட்டும் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் விளையாடி வருகின்றனர்.
அப்படியென்றால், இது சம்பந்தமான ஆப்களில் ஒருநாளைக்கு குறைந்தபட்சம் 30 லட்சம் பேர் விளையாடி வருகின்றனர். இதன்மூலம் ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் ஒருநாளைக்கு, 10 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டுகின்றன.

இதன்மூலம் அந்த நிறுவனங்கள் ஒரு மாதத்துக்கு 500 அல்லது 1000 கோடி ரூபாயை ஈட்டிவிடுகின்றன. ஏன், 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்குக்கூட வருமானத்தை ஈட்ட முடியும். இதில் விளையாடும் ஒருவர் மட்டுமே பணத்தை எடுக்கும் நிலையில், மற்றவர்கள் பணத்தை இழந்து வெளியேறுகின்றனர்.
காரணம், அதற்கான தொழில்நுட்பத்தை அவர்கள் வடிவமைத்துள்ளனர். இது தெரியாமல் விளையாடும் நபர்கள் ஏமாந்து பணத்தை இழக்கின்றனர். குறிப்பாக ஒரே நேரத்தில் ஆறு பேர் தொடர்ந்து விளையாடும்போது, ஆன்லைன் ரம்மி நிறுவனம் அவர்கள் வைத்திருக்கும் மொத்த பணத்தில் 15 சதவிகித பணத்தை கொஞ்ச கொஞ்சமாய் பிடித்தே அனைத்தையும் காலி செய்துவிடும்.
15 சதவிகித பணத்தாலேயே ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றன. இது தெரியாமல் விட்டதை பிடிக்கும் நோக்கில் அவர்கள் தொடர்ந்து கடன் வாங்கியாவது விளையாடுவர். இப்படி ஆன்லைன் ரம்மி விளையாடுவதில் தமிழகத்தில்தான் அதிகம் பேர் இருக்கின்றனர். அடுத்து கேரளாவும், ஆந்திராவும் உள்ளன. தெலுங்கானாவில் தடை செய்யப்பட்டிருப்பதால் அங்கு விளையாட முடியாது.
இந்த ஆன்லைன் ரம்மியைப் பொறுத்தவரை, அதில் எப்படி விளையாடுவது என்பது குறித்து ஒருவர் தெரிந்துகொள்வதற்கு முன்னேயே, அவர் பல லட்ச ரூபாயை இழந்துவிடுகிறார்.
ஒருவர் வெளியில் விளையாடி ஒரு மணி நேரத்தில் இழக்கும் தொகையை, ஆன்லைன் ரம்மி மூலம் 10 நிமிடத்தில் இழக்கிறார். அதற்குக் காரணம், அவர்களை அதிலிருந்து வெளியே விடாமல் டிராப் அல்லது மூவ் போன்ற ஆப்ஷன்களைக் கொடுத்து அதிலேயே வைத்திருக்கும்.

இரண்டாவது, அவர்கள் கட்டும் தொகைக்கு ஏற்ப போனஸைக் கொடுத்து வெளியில் விடாமல் வைத்திருப்பர். அதுவும், நம்முடைய முழுத் தொகையை இழந்ததற்குப் பிறகுதான் வைத்து விளையாட முடியும். இதில் பெரும்பாலும் விளையாடும் நபர்கள் ஆசையினால், பெரிய தொகையைக் கட்டி விளையாடி பணத்தை இழக்கின்றனர்.
இதில் பிளேயர்ஸ் டு பிளேயர்ஸ் விளையாடும்போதே கம்பெனிதான் ஜெயிக்கும். என்றாலும் ஒரு சில நேரங்களில் கம்பெனி பிளேயர்ஸை உருவாக்கி அதன்மூலமும் பணத்தை அள்ளிவிடுவர்” என்றார்.
இது ஒருபுறமிருக்க, மறுபுறம் இதன்மூலம் மாதம் பல ஆயிரம் கோடி வருவாயை எடுத்துவரும் ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள், அந்த தொகையில் பாதியை, மேல்மட்டத்திற்குக் கொடுப்பதாக தகவல் சொல்லப்படுகிறது.
இதனாலேயே இந்தச் சட்டத்துக்கான ஒப்புதல் இழுத்தடிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. வெளியில் ரம்மி விளையாடுபவர்களை விரட்டிப் பிடிக்கும் போலீசார், ஏசி அறையில் அமர்ந்து எத்தனையோ கோடிகளை தினம் அள்ளிவரும் இதுபோன்ற நிறுவனங்களுக்கு இடமளிப்பது ஏனோ?
ஜெ.பிரகாஷ்
Comments are closed.