ஆன்லைன் ரம்மி தடைச்சட்ட நிரந்தர மசோதா தொடர்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை நாளை(டிசம்பர் 1) சந்திக்கிறார் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி.
ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யவும், ஆன்லைன் விளையாட்டை ஒழுங்குபடுத்தவும், கடந்த அக்டோபர் மாதம் சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி அவசரத் தடைச்சட்டம் கொண்டு வரப்பட்டது.
இது பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநரும் ஒப்புதல் அளித்தார்.
இதையடுத்து அது நிரந்தர சட்ட மசோதாவாக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநரின் ஒப்புதலுக்காக கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி தமிழக அரசு அனுப்பிவைத்தது.
ஆனால் அவசர சட்டத்தைப் போன்று ஆன்லைன் தடை நிரந்தர சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் தரவில்லை.
மேலும் நவம்பர் 27ஆம் தேதியுடன் அவசர தடைச் சட்டம் காலாவதி ஆகிவிடும் என்ற சூழலில், ஆளுநர் நவம்பர் 24ஆம் தேதி இதுகுறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
சட்ட மசோதா மற்றும் தண்டனைகள் தொடர்பான விபரங்கள் கேட்கப்பட்டது. தமிழக அரசும் அடுத்த 24 மணி நேரத்துக்குள் அதுகுறித்து விளக்கக் கடிதத்தை அனுப்பி வைத்தது.
ஆனாலும் ஆளுநரிடம் இருந்து ஒப்புதல் கிடைக்கவில்லை. சட்ட மசோதா குறித்து நேரில் விளக்கம் அளிக்கவும், தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். ஆனால், அவரைச் சந்திக்கவும் ஆளுநர் நேரம் ஒதுக்கவில்லை.
இந்தநிலையில்தான் நாளை(டிசம்பர் 1) காலை 11 மணிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதியை சந்திக்க நேரம் ஒதுக்கியிருக்கிறார் ஆளுநர்.
சந்திப்பின்போது, சரியான விளக்கம் கொடுத்தபிறகு ஆன்லைன் ரம்மி தடை நிரந்தர சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பாரா இல்லையா என்பது தெரிய வரும் என்கிறார்கள் கோட்டை வட்டாரத்தில்.
கலை.ரா
“சாலைகளுக்காக நிலங்களை கையகப்படுத்திதான் ஆகவேண்டும்” –அமைச்சர் எ.வ.வேலு
மழையை எதிர்பார்த்து மிரட்டிய நியூசிலாந்து… தொடரை இழந்தது இந்தியா