தமிழக சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்திற்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
கடந்த மார்ச் மாதம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி சூதாட்ட தடை மசோதா இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்ததால் அரசிதழில் வெளியிடப்பட்டு ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் ஈடுபட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும் என்ற சட்டம் அமலுக்கு வந்தது. இதனை எதிர்த்து ஆன்லைன் விளையாட்டு நிதி நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா அமர்வில் இன்று (ஏப்ரல் 27) விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி ஆஜராகி, “ரம்மி என்பது திறமையான விளையாட்டு. இதனை சூதாட்ட விளையாட்டாக கருத முடியாது. உச்சநீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் இதனை உறுதி செய்துள்ளது. நேரடியாக ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்காமல் ஆன்லைன் ரம்மிக்கு மட்டும் எப்படி தடை விதிக்கலாம். ஆன்லைன் ரம்மியை தடை செய்ய மத்திய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. மாநில அரசிற்கு அந்த அதிகாரம் இல்லை. அதனால் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவிற்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
அதற்கு நீதிபதிகள், “ரம்மி சூதாட்டத்தால் ஏற்படும் தற்கொலைகள் மற்றும் குடும்ப வறுமைகளை கவனத்தில் கொண்டு தான் தமிழக அரசு ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை அமல்படுத்தியுள்ளனர். இதில் என்ன தவறு உள்ளது. நீதிமன்றங்கள் இதில் எப்படி தலையிட முடியும். மக்களினுடைய நலனில் அக்கறை கொண்டு தான் தமிழக அரசு இந்த தடை சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் லாட்டரி, குதிரை பந்தயங்களுக்கு தடை விதித்தது போல தான் ஆன்லைன் ரம்மிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவிற்கு தடை விதிக்க முடியாது. ஜூன் 2-ஆம் வாரத்திற்கு வழக்கின் விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது” என்று தெரிவித்தனர்.
செல்வம்
அமித்ஷா மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!
திட்டங்கள் கண்காணிக்கப்பட வேண்டும்: முதல்வர் அறிவுரை!