ஆன்லைன் ரம்மி தற்கொலைகளுக்கு ஆளுநரே பொறுப்பு: அன்புமணி

அரசியல்

“ஆன்லைன் ரம்மி காரணமாக தற்கொலை செய்தோருக்கு ஆளுநரே பொறுப்பு ஏற்க வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

தென் மாவட்ட பாமக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மதுரையில் நடந்தது. இதில் பங்கேற்க  வந்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மதுரை வந்தார்.

விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம், “தென்மாவட்டங்கள் வளர்ச்சி பெறாமல் உள்ளது. கருணாநிதி, ஜெயலலிதா ஆட்சியில் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டாலும், வளர்ச்சி ஏற்படவில்லை.

மத்திய, மாநில அரசுகள் இணைந்து தென் தமிழகத்தை வளர்ச்சி பெற தென் மண்டல தொழில் ஆணையம் தொடங்க வேண்டும். ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை முதன்மைச் செயலாளராக நியமிக்க வேண்டும்.

எய்ம்ஸ் மருத்துவமனை 2015இல் அறிவித்து நிறுத்தப்பட்டது. பின்னர் 2019இல் ஜப்பான் ஜெய்கா நிறுவன நிதி உதவியுடன் கட்டி முடிக்க வேண்டும் என ஒப்பந்தம் செய்தாலும், இன்று வரை நிதி ஒதுக்கவில்லை.

மத்திய அரசு அதற்கான நிதியை மதுரை எய்ம்ஸுக்கு ஒதுக்கீடு செய்து மூன்று ஆண்டில் கட்டி முடிக்க வேண்டும்.

பாஜக ஆளும் மாநிலத்துக்கு மத்திய அரசு எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிதி ஒதுக்கீடு செய்தது போன்று மதுரைக்கு நிதி ஒதுக்க வேண்டும். ஏற்கனவே 2008 – 2009லும் எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டு நிதி ஒதுக்கியும், அதுவும் நிறுத்தப்பட்டது” என்று பேசியவர்,

“ஆன்லைன் ரம்மி என்பது தமிழக அரசுக்கும், ஆளுநருக்கும் போட்டியாக இருக்கும் ஒரு பிரச்சினை. இவ்விளையாட்டால் தமிழகத்தில் நூற்றுக்கு மேற்பட்டோர் தற்கொலை செய்துள்ளனர்.

இதை தடுக்க கடந்த ஆட்சியில் பாமக போராட்டம் நடத்தியதால், அன்றைய முதல்வர் கே.பழனிச்சாமி ஆன்லைன் விளையாட்டுக்கு தடை விதித்து சட்டம் கொண்டு வந்தார்.

திமுகவிடம் பல முறை கோரிக்கை விடுத்த நிலையில், அவசர சட்டம் கொண்டு வந்தனர். ஆனாலும், ஆளுநர் கையெழுத்திட மறுப்பு ஏன் என புரியவில்லை.

தற்கொலை செய்தோருக்கு ஆளுநரே பொறுப்பு ஏற்க வேண்டும். கஞ்சா, போதைப் பொருட்கள் விற்பனை தடுக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திமுக ஆட்சிக்கு நான் மதிப்பெண் அளிக்க முடியாது. ஆனால், அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டும்.

நீர் மேலாண்மை திட்டங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்க வேண்டும். நாங்கள் பரபரப்பு அரசியல் நடத்தவில்லை. நாகரிகம், தமிழக வளர்ச்சிக்கான அரசியல் செய்கிறோம். மூன்று மாதத்தில் மட்டும் தமிழக அரசு ரூ. 53,000 கோடி கடன் வாங்கியுள்ளது.

சாராயத்தை மட்டுமே நம்பி ஆட்சி நடத்துகின்றனர். இதுதான் திராவிட மாடல் அரசு. பாஜக மாநிலத் தலைவர் இன்னும் போலீஸ் அதிகாரியாகவே செயல்படுகிறார்” என்று அவர் கூறினார்.

-ராஜ்

80 லட்சம் பார்வைகளை கடந்த வாரிசு!

கிச்சன் கீர்த்தனா : இன்ஸ்டன்ட் தேங்காய் லட்டு

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *