ஆன்லைன் ரம்மி தடைச்சட்டத்தில் உள்ள சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொண்டு ஒப்புதல் அளிப்பதாக ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்தார் என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற விளையாட்டுகளை தடை செய்யும் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் பெறுவது தொடர்பாக அமைச்சர் ரகுபதி, தமிழக ஆளுநர் ஆர். என். ரவியை கிண்டி ஆளுநர் மாளிகையில் இன்று (டிசம்பர் 1) சந்தித்தார்.
அவருடன் உள்துறை மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் சென்றிருந்தனர். சுமார் அரைமணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது.
பின்னர் வெளியில் வந்து செய்தியாளர்களை சந்தித்த ரகுபதி, “ராஜ்பவனில் ஆளுநரை சந்தித்து பேசினோம்.
இணையவழி ரம்மி, போக்கர் போன்ற சூதாட்டங்களை தடை செய்வதற்காகவும், ஒழுங்குமுறைப்படுத்துவதற்காகவும், தமிழக அரசால் இயற்றப்பட்டிருக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பது பற்றி ஆளுநர் ஆர். என். ரவி அனுப்பியிருந்த கேள்விகளுக்கு பதிலளித்திருந்தோம்.
இன்றைக்கு ஆளுநரிடத்தில் அரைமணி நேரம் அதுபற்றிய விளக்கங்களை தந்திருக்கிறோம்.
ஆளுநரும், அந்த மசோதா என்னுடைய பரிசீலனையில் இருக்கிறது. இன்னும் சில சந்தேகங்கள் இருக்கிறது. அதை தெளிவுப்படுத்திக் கொண்டு ஒப்புதல் தருகிறேன்.
முதலமைச்சரிடம் சொல்லுங்கள் விரைந்து முடிவெடுக்கிறேன் என்று சொல்லியிருக்கிறார். அவசர சட்டத்திற்கும், நிரந்தர சட்டத்திற்கும் வித்தியாசங்கள் இல்லை.
அவசர சட்டம் இயற்றப்பட்டபோது ஆன்லைன் ரம்மியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17, தற்போது அதன் எண்ணிக்கை 25.
நேரடியாக ரம்மி விளையாடுபவர்கள் உயிரை மாய்த்துக் கொண்டதாக எந்த தகவலும் இல்லை. எனவே ஆன்லைன் ரம்மி தடை செய்யப்படவேண்டும்.
அதனால் 25 உயிர்களை இழந்திருக்கிறோம். அதற்காக வல்லுநர் குழு அளித்த அறிக்கையையும் ஆளுநரிடம் அளித்திருக்கிறோம்.
ஆன்லைன் ரம்மியில் பல மோசடிகள் நடந்து மக்களின் பணத்தை எளிதாகப் பறித்துவிடுவார்கள் என்று சொல்லியிருக்கிறோம்.
உதாரணத்துக்கு பல குறுந்தகவல்கள் வருகின்றன. உங்களது கணக்கில் ரூ.8000 செலுத்தியிருக்கிறோம்.
விளையாட வாருங்கள் என்று தகவல்கள் வருகிறது. அதைப்பார்த்து விளையாடச் செல்பவர்கள், பணத்தை இழப்பதுடன் உயிரையும் மாய்த்துக் கொள்கிறார்கள் என்று தெளிவாக சொல்லியிருக்கிறோம்” என்றார்.
இதுவரை ஆளுநர் ஒப்புதல் அளிக்காத மசோதாக்கள் எத்தனை என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ரகுபதி, “இதுவரை 21 மசோதாக்கள் ஒப்புதல் அளிக்காமல் நிலுவையில் இருக்கின்றன.
மசோதாவுக்கு ஒப்புதல் அளிப்பதற்கு ஆளுநருக்கு எந்த கால நிர்ணயமும் இல்லை. எனவே கால நிர்ணயம் செய்யும்படி சொல்ல முடியாது. இதற்காக அரசியல் சட்டத்தில் திருத்தங்கள் செய்தால் நன்றாக இருக்கும்” என்றார்.
கலை.ரா
ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம்: எதிர்ப்புக்கு பணிந்த ஆளுநர்!
காசி தமிழ் சங்கமம்: அரசு விழாவா… அரசியலா?