ஆளுநரிடம் காத்திருக்கும் மசோதாக்கள் – கட்டாயப்படுத்த முடியாது : அமைச்சர்!

அரசியல்

தமிழக ஆளுநரிடம் 20 மசோதாக்கள் நிலுவையில் உள்ளதாகவும் ஆன்லைன் சூதாட்ட தடுப்பு சட்டத்திற்கு ஆளுநர் விளக்கம் கேட்கவில்லை என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

சட்ட கல்வி தரவரிசை பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு மாணவர் சேர்க்கை அனுமதி கடிதத்தை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமை செயலகத்தில் இன்று (நவம்பர் 10) வழங்கினார்.

இட ஒதுக்கீடு தேவையில்லை

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், ”இந்த சேர்க்கையில், உயர்சாதி ஏழைகளுக்கான 10 சதவீத இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படுமா” என்று கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்குப் பதிலளித்த அமைச்சர், “அனைத்துக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் வரும் 12 ஆம் தேதி அன்று கூட்டவிருக்கிறார்கள்.

அந்த கூட்டத்தில் 10 சதவீத இட ஒதுக்கீடு மீது மறுசீராய்வு மனுத் தாக்கல் செய்யலாமா? என்று ஆலோசிக்கப்பட்டு, அனைத்து கட்சியின் ஆதரவோடும் தமிழக மக்களின் ஆதரவோடும் 10 சதவீதம் இட ஒதுக்கீடு தேவையில்லை என்று தொடர்ந்து தமிழக அரசு வலியுறுத்தும்” என்றார்.

ஆளுநர் விளக்கம் கேட்கவில்லை

தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை அவசரச் சட்டம் தொடர்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் ஆணையம் எப்போது அமைக்கப்படும் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர்,

ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் தொடர்பான சட்ட மசோதா, ஆளுநரின் ஒப்புதலைப் பெற்று இன்னும் வரவில்லை. ஆளுநரின் ஒப்புதல் வந்தவுடன் ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் ஆணையம் அமைக்கப்படும்.

ஏற்கெனவே கொண்டுவரப்பட்ட அவசரச் சட்டத்தின் ஷரத்துகள்தான் தற்போது அனுப்பியுள்ள அவசரச் சட்டத்திலும் இடம்பெற்றுள்ளன. புதிதாக எதுவும் இல்லை.

இந்த மசோதாவிற்கு ஆளுநரிடம் இருந்து விளக்கம் எதுவும் கேட்கப்படவில்லை. ஒருவேளை விளக்கம் எதுவும் கேட்கப்பட்டால், விளக்கம் அளிக்கவும் தயாராக இருக்கிறோம்.

ஆளுநரிடம் 20 சட்ட மசோதாக்கள் நிலுவையில் உள்ளன. இதில் சில மசோதாக்களுக்கு விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. அதற்கு விளக்கமும் அளித்துள்ளோம். ஆனால் ஆளுநரைக் கையெழுத்திடச் சொல்லிக் கட்டாயப்படுத்த முடியாது” என்று கூறினார்.

மோனிஷா

“நாங்க வந்துட்டோம்… நீங்க எப்படி?”: அக்தர்

வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.