ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம்: கடந்து வந்த பாதை!

Published On:

| By Kavi

ஆன்லைன் ரம்மி தடை சட்டத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார். தொடர்ந்து ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்டங்களால் தமிழகத்தில் இதுவரை கிட்டத்தட்ட 50 பேர் உயிரிழந்திருக்கின்றனர். ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகளில் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்கலாம் என அந்தந்த நிறுவனங்கள் குறுஞ்செய்திகளை அனுப்பும். விளையாடாதவர்களுக்கு கூட இதுபோன்ற குறுஞ்செய்திகள் வரும்.

வெல்கம் போனஸ், லட்சக்கணக்கில் பரிசு தொகை கிடைக்கும் என்று கூறி அந்த நிறுவனங்களின் லிங்க்குகளுடன் குறுஞ்செய்தி வரும். இப்படி ஆசை காட்டுவதால் பலரும் இதனை டவுன்லோட் செய்து விளையாடி வந்தனர். பணம் கிடைக்கும் என்ற ஆசையில் வட்டிக்கு கடன் வாங்கியும், அதை சூதாட்ட செயலிகளில் செலுத்தி விளையாடி வந்தனர்.

ஆனால், ஆன்லைன் நிறுவனங்கள் அனுப்பிய படி பணம் வராது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், மறுபக்கம் இந்த விளையாட்டுக்காக வாங்கிய கடன் நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தில் தற்கொலை செய்துகொள்வோரின் எண்ணிக்கை அதிகரித்தது.

இதனால் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்டங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்தன.

online gaming ban tamilnadu

முதல் தடை சட்டம்

அதன்படி கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 21ஆம் தேதி ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதித்து அப்போதைய அதிமுக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தது.
இதையடுத்து 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டது.

இதனிடையே ஆன்லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து 2020ம் ஆண்டு நவம்பர் 21ம் தேதி தமிழக அரசு இயற்றிய சட்டத்துக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் உள்ளிட்ட நிறுவனங்கள் வழக்குத் தொடர்ந்தன.

இந்த வழக்கை கடந்த 2021 ஆகஸ்ட் 3ஆம் தேதி விசாரித்த நீதிமன்றம், ஆன்லைன் விளையாட்டுகளுக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க முடியாது என்றும் புதிய சட்டம் கொண்டு வர தமிழக அரசுக்கு எந்த தடையும் இல்லை என உத்தரவிட்டு, தமிழக அரசு இயற்றிய சட்டத்தை ரத்து செய்தது.

online gaming ban tamilnadu

இந்தசூழலில் 2022 ஜூன் 10 ஆம் தேதி, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் ஏற்படக் கூடிய நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட ஆபத்தை விளைவிக்கும் தன்மையைக் கண்டறிய குழு அமைக்கப்பட்டது.

இந்தகுழு 2022 ஜூன் 28ஆம் தேதி, 71 பக்கங்கள் கொண்ட அறிக்கையை தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் ஒப்படைத்தது.

தொடர்ந்து 2022 செப்டம்பர் 26ஆம் தேதி ஆன்லைன் சூதாட்ட அவசர தடை சட்டத்துக்கு தமிழ்நாடு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதற்கு 2022 அக்டோபர் 1ஆம் தேதி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்தார்.

இந்த அவசர சட்டம் 2022 அக்டோபர் 3ஆம் தேதி அரசிதழில் வெளியிடப்பட்டது.
இதையடுத்து தமிழக சட்டப்பேரவையில் 2022 அக்டோபர் 19ஆம் தேதி ஆன்லைன் சூதாட்டத்துக்கு தடை விதிக்க மசோதா நிறைவேற்றப்பட்டது. இது ஆளுநரின் ஒப்புதலுக்காக 2022 அக்டோபர் 26ஆம் தேதி அனுப்பி வைக்கப்பட்டது.

அதுபோன்று அக்டோபர் 1ஆம் தேதி ஆளுநர் ஒப்புதல் கொடுத்த அவசர சட்டம் 2022 நவம்பர் 27 அன்று காலாவதியானது.

தொடர்ந்து சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்குமாறு சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கடந்த டிசம்பர் 2ஆம் தேதி ஆளுநரை சந்தித்து வலியுறுத்தினார்.

அதைத்தொடர்ந்து ஆன்லைன் கேம் நிறுவன நிர்வாகிகள் ஆளுநர் ஆர்.என்.ரவியை டிசம்பர் 5ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், கடந்த மார்ச் 8 ஆம் தேதி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார். இப்படி சட்டம் இயற்ற தமிழக சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை என கூறினார்.

2023 மார்ச் 9 ஆம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் மீண்டும் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை நிறைவேற்றி அனுப்ப முடிவெடுக்கப்பட்டது. அதன்படி மார்ச் 3ஆம் தேதி மசோதா நிறைவேற்றப்பட்டு மார்ச் 24 ஆம் தேதி ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் குரூப் 1 மாணவர்களிடையே உரையாடிய ஆளுநர் ரவி, ஒரு மசோதா வெகு நாட்களாக கிடப்பில் இருந்தால் அது நிராகரிக்கப்பட்டதாகவே பொருள் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 10) தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வந்தார்.
மசோதாக்களுக்கு அனுமதி வழங்க ஆளுநருக்கு உரிய காலக்கெடுவை மத்திய அரசு நியமிக்க வேண்டும் என்ற அந்த தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைப்பட்டது.

இப்படி தீர்மானம் கொண்டு வரப்பட்ட சில மணி நேரங்களிலேயே ஆளுநர் ஆர்.என்.ரவி ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் அளித்தார்.
இந்நிலையில், ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் இன்று (ஏப்ரல் 11) அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இனி தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை விளையாடினால் சிறை, அபராதம் உள்ளிட்ட தண்டனைகள் விதிக்கப்படும்.

online gaming ban tamilnadu

தண்டனை விவரம்

ஆன்லைன் சூதாட்ட விளையாட்டில் ஈடுபட்டால் 3 மாதம் சிறை, அல்லது ரூ. 5000 அபராதம் விதிக்கப்படும். அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

சூதாட்டத்தை விளம்பரம் செய்தால் ஒரு ஆண்டு சிறை, ரூ.3 லட்சம் அல்லது ரூ. 5 லட்சம் அபராதம் அல்லது 2ம் சேர்த்து விதிக்கப்படும்

சூதாட்ட விளையாட்டுகளை வழங்குவோருக்கு 3 ஆண்டு சிறை அல்லது ரூ.10 லட்சம் அபராதம் அல்லது 2ம் சேர்த்து விதிக்கப்படும். அதே நிறுவனம் மீண்டும் தவறு இழைத்தால் 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், மற்றும் ரூ. 20 லட்சம் அபராதமும் விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

பிரியா

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி: உச்ச நீதிமன்றம்!

இரட்டை சகோதரிகள்… குழம்பி போன குழந்தை: க்யூட் வீடியோ!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share