ஆன்லைன் சூதாட்டத் தடை காலாவதியாகி இருப்பதால், தமிழக அரசு அடுத்தகட்ட நடவடிக்கையாக என்ன செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் நிலவியுள்ளது.
ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யவும், ஆன்லைன் விளையாட்டை ஒழுங்குபடுத்தவும், கடந்த அக்டோபர் 19ம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி தடை மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதா, பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
இந்த அவரச சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியும் அப்போது ஒப்புதல் அளித்தார். இதனையடுத்து தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டங்களான ரம்மி, போக்கர் விளையாட்டுகள் தடை செய்யப்பட்டன.
அதேநேரத்தில் தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு மாற்றாக நிரந்தர சட்ட மசோதா, சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதை, ஆளுநரின் ஒப்புதலுக்காக கடந்த அக்டோபர் மாதம் 28ஆம் தேதி தமிழக அரசு அனுப்பிவைத்தது. அவசர சட்டத்தைப் போன்று இந்த நிரந்தர சட்ட மசோதாவுக்கும் ஆளுநர் அனுமதி தருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், அது நடைபெறவில்லை.
நவம்பர் 27ஆம் தேதியுடன், அதாவது நேற்றுடன் இந்த தடைச் சட்டம் காலாவதி ஆகிவிடும் என்ற சூழலில், ஆளுநர் நவம்பர் 24ஆம் தேதி இதுகுறித்து விளக்கம் கேட்டு தமிழக அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
தமிழக அரசும் அடுத்த 24 மணி நேரத்துக்குள் அதுகுறித்து விளக்கக் கடிதத்தை அனுப்பிவைத்தது. இதுகுறித்து நேரில் விளக்கம் அளிக்கவும், தமிழக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டிருந்தார். ஆனால், அவரைச் சந்திக்கவும் ஆளுநர் நேரம் ஒதுக்கவில்லை; நிரந்தர சட்ட மசோதாவுக்கும் ஒப்புதல் அளிக்கவில்லை.
இதையடுத்து, அந்தச் சட்டம் நேற்றுடன் (நவம்பர் 27) காலாவதியானது. கடந்த அக்டோபர் 16-ஆம் தேதி சட்டப்பேரவை கூடியது என்பதால், அந்த நாளில் இருந்து 6 வாரங்களில் அவசர சட்டம் தானாகவே காலாவதியாகிவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சட்டம் காலாவதியானதற்கு ஆளுநரின் ஒப்புதல் கிடைக்காததே காரணம் எனப் பலரும் தற்போது கருத்து தெரிவித்து வரும் நிலையில், பல ஆயிரம் கோடி வருவாயை எடுத்துவரும் ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள், அந்த தொகையில் பாதியை, மேல்மட்டத்திற்குக் கொடுப்பதாகவும், இதனாலேயே இந்தச் சட்டத்துக்கான ஒப்புதல் இழுத்தடிக்கப்படுவதாகவும் சமூக ஆர்வலர்கள் ஏற்கெனவே கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக நம் மின்னம்பலத்தில், ’ஆன்லைன் ரம்மி-தினம் தினம் 10 கோடி: கவர்னர் தள்ளும் மர்மம்’ எனும் தலைப்பில் கடந்த நவம்பர் 25ஆம் தேதி கட்டுரை வெளியிட்டிருந்தோம்.
ஆன்லைன் சூதாட்டத் தடை மசோதாவில் ஆளுநரின் செயல் குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நேற்று (நவம்பர் 27) நாகையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, ”தமிழக அரசு அவசர சட்டம் கொண்டு வந்தும் தமிழக ஆளுநர் அலட்சியம் காட்டுவது நியாயமானது அல்ல. தமிழ்நாட்டில் ஆளுநர் அரசியல் செய்யாமல் தமிழ்நாட்டின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும்.
ஆளுநரும், தமிழக முதல்வரும் ஈகோ இல்லாமல் செயல்பட வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்தில் இதுவரை தமிழகத்தில் 82 பேர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளனர். இந்த விஷயத்தில் தமிழகத்தில் இனி ஒரு உயிர் போனாலும் அதற்கு ஆளுநரே காரணம்” எனக் கூறினார்.
இந்த நிலையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் வசித்துவந்த ஒடிசாவைச் சேர்ந்த ஸ்ரீதனா மாஞ்சி என்ற பெண், ஆன்லைன் ரம்மியில் ரூ. 70 ஆயிரம் வரை இழந்ததையடுத்து, மன உளைச்சலில் கடந்த நவம்பர் 26ஆம் தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், ஆன்லைன் சூதாட்ட நிரந்தர தடைச் சட்டத்துக்கு தமிழக அரசு விளக்கம் அளித்தும் அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காதது தமிழக மக்களிடையே மிகுந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது. மேலும், நிலுவையில் இருக்கும் மசோதாவுக்கு ஆளுநர் விரைவில் ஒப்புதல் வழங்குவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அதேநேரத்தில், ஆன்லைன் சூதாட்டத் தடை காலாவதியாகி இருப்பதால், தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டம் மீண்டும் முழுவீச்சில் தொடங்கிவிடும் என்ற அச்சமும் நிலவியுள்ளது.
இதனை அடுத்து, ஆன்லைன் சூதாட்டத் தடை காலாவதியாகி இருப்பதால், தமிழக அரசு அடுத்தகட்ட நடவடிக்கையாக என்ன செய்யப்போகிறது என்ற எதிர்பார்ப்பு தமிழக மக்களிடம் நிலவியுள்ளது.
ஜெ.பிரகாஷ்
இரண்டு வயது குழந்தையை கொன்ற தந்தை சொன்ன அதிர்ச்சி தகவல்!
பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தனது அழகினை மேம்படுத்திய 5 இந்திய நடிகைகள் இவங்க தானா!