சட்டமன்ற தீர்மானம் எதிரொலி: ஆன்லைன் சூதாட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல்!

Published On:

| By Jegadeesh

பல்வேறு சர்ச்சைகளை தாண்டி ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு இன்று ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

ஆன்லைன் சூதாட்டத்தால் பலர் தற்கொலை செய்த நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா சட்டசபையில் 2022 அக்டோபர் 19 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அக்டோபர் 26 ஆம் தேதி அனுப்பப்பட்டது.

மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி சுமார் நான்கு மாதங்கள் கழித்து 2023 மார்ச் 6 ஆம் தேதி திருப்பி அனுப்பினார்.

2-வது முறையாக கடந்த மார்ச் 23 ஆம் தேதி அதே ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா மீண்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. அந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக காத்திருந்தது.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு ஆளுநர் மாளிகையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பேசிய ஆர்.என்.ரவி,

“ஆளுநரால் ஒரு மசோதா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றால், அது நிராகரிக்கப்பட்டது என்றே அர்த்தம்” என்று கூறியிருந்தார்.

இதற்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சித்தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்தப்பின்னணியில் இன்று (ஏப்ரல் 10) காலை தமிழ்நாடு சட்டமன்றத்தில் மசோதாக்களை சட்ட விரோதமாக தாமதம் செய்யும் ஆளுநரை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்ட சில மணி நேரங்களில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

தடை செய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்டங்களில் விளையாடினால் அல்லது சூதாட்டம் நடத்தினால் 5 ஆயிரம் அபராதம் அல்லது 3 மாத சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக விதிக்க தடை சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மு.வா.ஜெகதீஸ் குமார்

சாகுந்தலம் முதல் ருத்ரன் வரை: தமிழ் புத்தாண்டு ரிலீஸ்!

ஸ்டெர்லைட் வழக்கு: மூன்று வாரங்களுக்கு ஒத்திவைப்பு!

ஆளுநர் மாளிகை செலவினங்கள்: கட்டுப்பாடுகளை கொண்டு வரும் பிடிஆர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel