அதிமுக சார்பாக ஓபிஎஸ்சுக்கு அனுமதியா? எடப்பாடி வெளிநடப்பு!

Published On:

| By Selvam

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா குறித்து கருத்து தெரிவிப்பதற்காக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சபாநாயகர் அப்பாவு அனுமதி வழங்கியதால் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை சட்டமன்றத்தில் இன்று (மார்ச் 23) முதல்வர் ஸ்டாலின் மீண்டும் தாக்கல் செய்தார்.

மசோதா தாக்கல் செய்யப்பட்ட பிறகு அனைத்து கட்சிகளின் சார்பில் கருத்துக்கள் கேட்கப்பட்டது.

அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவை வரவேற்பதாக பேசினார்.

அவர் பேசிய பிறகு ஓ.பன்னீர் செல்வம், “அதிமுக சார்பில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவிற்கு ஆதரவு தெரிவிக்கிறேன்” என்று கூறினார்.

இதனை தொடர்ந்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஓ.பன்னீர் செல்வம் பேசியதற்கு எதிராக அவையில் அமளியில் ஈடுபட்டனர்.

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பேசியபோது, “ஒரு கட்சிக்கு ஒருவர் மட்டுமே பேச அனுமதி வழங்கியுள்ள நிலையில், அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் ஆன்லைன் தடை சட்ட மசோதா குறித்து பேசிவிட்டார்.

வேறு ஒருவரை பேச அனுமதித்தது வேண்டுமென்றே குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியாகும்” என்று தெரிவித்தார்.

முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் ஓ.பன்னீர் செல்வம் பேச அனுமதித்ததாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.

சபாநாயகர் கருத்தை ஏற்காத அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டு வெளிநடப்பு செய்தனர்.

செல்வம்

மீண்டும் 44 ஆயிரத்தைக் கடந்த தங்கம் விலை!

அண்ணாமலை அவசர டெல்லி பயணம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share