மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்குத் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று(செப்டம்பர் 19 ) எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களுக்குச் சட்டமன்றம், நாடாளுமன்றம், நகராட்சிகள், பஞ்சாயத்து என அனைத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையில் மத்தியில் ஆளும் பாஜக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது.
இதற்காகக் கடந்த ஆண்டு, முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாகத் தேசிய மற்றும் மாநிலக் கட்சிகளின் பிரதிநிதிகள், சட்ட வல்லுநர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரிடம் இருந்து இக்குழு ஆலோசனை கேட்டது.
இதைத் தொடர்ந்து 18,626 பக்கங்கள் கொண்ட அறிக்கையைக் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் கடந்த மார்ச் மாதம் ராம் நாத் கோவிந்த் தலைமையிலான குழு சமர்ப்பித்தது.
இந்த நிலையில் நேற்று கூடிய மத்திய அமைச்சரவை, ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஒப்புதல் அளித்தது. மத்திய அரசின் இந்த முடிவுக்கு பல்வேறு எதிர்க்கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
அதில் “ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் என்பது இந்தியாவின் பல்வேறுபட்ட தேர்தல் முறையின் சிக்கல்களைப் புறக்கணித்து, கூட்டாட்சித் தன்மையைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் ஒரு நடைமுறைச் சாத்தியமற்ற கருத்தாகும்.
இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்துக்குள்ளும் தேர்தல் சுழற்சிகள், பிரச்சினைகள், நிர்வாக முன்னுரிமைகள் வேறுபடும். அதனால் இந்த திட்டத்தைச் செயல்படுத்துவது சாத்தியமற்றது. இந்த திட்டத்தை அமல்படுத்த மாநில அரசுகளின் இயல்பான நிர்வாகம் சீர்குலைக்கப்படும்.
பாஜகவின் இறுமாப்பைத் திருப்திபடுத்தத்தான் இந்த திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களால் இந்த திட்டத்தை ஒருபோதும் அமல்படுத்த முடியாது.
இந்தியாவின் ஜனநாயகத்தை ஒரு கட்சியின் பேராசைக்கு ஏற்ப வளைக்க முடியாது. இந்த திசைதிருப்பல் தந்திரங்களில் பாஜக தனது சக்தியை வீணாக்காமல், வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு மற்றும் மாநிலங்களுக்கு வளங்களை சரி சமமாக விநியோகித்தல் போன்ற பிரச்சினைகளை மத்திய அரசு தீர்க்க வேண்டும்.” என்று முதலமைச்சர ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
போக்சோவில் ஜானி மாஸ்டர் அதிரடி கைது… ஜீரோ எப்ஐஆர் பதிவு செய்த பின்னணி!
’சென்னையில் மழை இருக்கு… ஆனால்’ : தமிழ்நாடு வெதர்மேன் வைத்த ட்விஸ்ட்!