நாடாளுமன்றத்தில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை நாளை (டிசம்பர் 16) தாக்கல் செய்யும் முடிவில் இருந்து பாஜக அரசு பின்வாங்கியுள்ளது.
காங்கிரஸ், திமுக, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
எனினும் அதனை உறுதியாக நிறைவேற்றும் முடிவில் மத்திய பாஜக அரசு உள்ளது.
நடைமுறைப்படுத்துவதற்கான சாத்திய கூறுகள் குறித்து முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழு ஆராய்ந்து தனது அறிக்கையை மத்திய அமைச்சரவை முன் தாக்கல் செய்தது.

இதனையடுத்து கடந்த 12ஆம் தேதி நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
தொடர்ந்து நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நாளை (டிசம்பர் 16) மசோதா தாக்கல் செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியானது.

இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் நாளை இந்த மசோதா தாக்கலின் போது தங்களின் கடும் எதிர்ப்பை காட்டவும் திட்டமிட்டிருந்தனர்.
நேற்றைய தினம் திங்கள்கிழமைக்கான மக்களவை நிகழ்ச்சி நிரல் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. அதில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தாக்கல் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று வெளியான நிகழ்ச்சி நிரல் பட்டியல் மறு ஆய்வு செய்யப்பட்டு தற்போது புதிய பட்டியல் வெளியானது. அதில் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தாக்கல் இடம்பெறவில்லை.
திங்கள் கிழமை தாக்கல் செய்தால் எதிர்க்கட்சிகள் இந்த வாரம், முழுவதும் அமளியில் ஈடுபடுவார்கள் என்பதால் இந்த மசோதா தாக்கல் செய்யப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
அதே வேளையில் வரும் 20ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறும் நிலையில், இந்த வாரத்திற்குள் மசோதாவை பாஜக அரசு தாக்கல் செய்யும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 நியூஸ் : அதிமுக பொதுக்குழு கூட்டம் முதல் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி வரை!
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – பிரியாணி சமைக்கப் போறீங்களா? இப்படிச் செய்து பாருங்க!