ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா மக்களவையில் இன்று (டிசம்பர் 17) அறிமுகம் செய்யப்பட்ட நிலையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை இன்று அறிமுகம் செய்தார்.
எப்படி கொண்டு வருகிறீர்கள்?
மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.பி. டி.ஆர். பாலு பேசுகையில், “ஒரே நாடு, ஒரே தேர்தல் முறை கூட்டாட்சிக்கு எதிரானது. ஜனநாயகத்தை அழிப்பது போல இம்மசோதா உள்ளது. மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கூட இல்லாமல் எப்படி இம்மசோதாவை இங்கு கொண்டுவருகிறீர்கள்? இம்மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்ப வேண்டும்” என தெரிவித்தார்.
மாநில அரசு மத்திய அரசின் அடிமையில்லை!
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி கூறுகையில், “தற்போது முன்மொழியப்பட்ட ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பையே பாதிக்கிறது. அது மாநில அரசு ஒன்றும் மத்திய அரசின் அடிமையில்லை. இதனால் மாநில சட்டமன்றத்தின் சுயாட்சி பறிக்கப்படுகிறது” என தெரிவித்தார்.
அரசியலமைப்பு மீதான தாக்குதல்!
காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி கூறுகையில், ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாட்டின் மீதான தாக்குதல். மக்களவையின் பதவிக்காலத்திற்கு ஏற்றவாறு மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலத்தை மாற்றியமைக்க முடியாது. இதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
அவர்களை விட இங்கு கற்றவர்கள் யாரும் இல்லை!
சமாஜ்வாடி கட்சி எம்.பி தர்மேந்திர யாதவ், “அரசியலமைப்புச் சட்டத்தின் 129வது திருத்தச் சட்டத்தை நான் எதிர்க்கிறேன். இதன்மூலம் அரசியலமைப்பின் அடிப்படை உணர்வு மற்றும் அடிப்படை கட்டமைப்பு முடிவுக்கு கொண்டு வரப்படும். பாஜகவின் சர்வதிகாரத்தை கொண்டு வரும். நான் காங்கிரஸின் மணீஷ் திவாரி கருத்துடன் எனது கட்சி சார்பாக உடன்படுகிறேன். நமது அரசியலமைப்பை உருவாக்கியவர்களை விட இங்கு கற்றவர்கள் யாரும் இல்லை என்று சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. இந்த அவையில் கூட, கற்றவர்கள் யாரும் இல்லை, இதைச் சொல்ல எனக்கு எந்த தயக்கமும் இல்லை” என்று தெரிவித்தார்.
அதிகாரத்தை மையப்படுத்துவதற்கான முயற்சி!
சரத் பவார் ஆதரவு என்.சி.பி எம்.பி சுப்ரியா சுலே பேசுகையில், “ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா கூட்டாட்சி மற்றும் அரசியலமைப்பை தாக்கி, அதிகாரத்தை மையப்படுத்துவதற்கான முயற்சி. இந்த மசோதாவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் அல்லது மசோதாவை கூடுதல் ஆலோசனைக்காக நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு அனுப்ப வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.
கூட்டாட்சியின் மீதான நேரடி தாக்குதல்!
சிவசேனா (UBT) தலைவர் அனில் தேசாய், “‘ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை அறிமுகப்படுத்துவதை நான் எதிர்க்கிறேன். இந்திய குடியரசு என்பது மாநிலங்களின் ஒன்றியம். ஆனால் இந்த மசோதா நிறைவேறினால் அது கூட்டாட்சியின் மீதான நேரடி தாக்குதலாக இருக்கும்” என தெரிவித்தார்.
சிவசேனா (உத்தவ் தாக்கரே ஆதரவு) எம்.பி பிரியங்கா சதுர்வேதி ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா கூட்டாட்சி மற்றும் அரசியலமைப்பை சிதைத்து அதிகாரத்தை மையப்படுத்துவதற்கான முயற்சி. இது அரசியலமைப்பிற்கு எதிரானது மற்றும் தவறானது. அரசியலமைப்புச் சட்டத்தை இவ்வாறு தாக்குவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது” என்று அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவிற்கு எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
5 கி.மீ தொலைவு ஓட்டம்… 30 விநாடியால்… ஆயுதப்படை போலீஸ் எடுத்த முடிவு!