ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா மக்களவையில் இன்று (டிசம்பர் 17) தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, பின்னர் நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்பப்பட்டது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மசோதாவை மக்களவையில் இன்று அறிமுகம் செய்தார்.
அதன்படி மக்களவை, சட்டப்பேரவை தொடர்பாக அரசியலமைப்பு சட்ட (129-வது திருத்தம்) மசோதா 2024 மற்றும் யூனியன் பிரதேசங்கள் தொடர்பாக யூனியன் பிரதேச சட்ட (திருத்தம்) மசோதா 2024 ஆகியவற்றை அமைச்சர் மேக்வால் அறிமுகம் செய்தார்.
மசோதாவிற்கு திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கல்யாண் பானர்ஜி, காங்கிரஸ் எம்.பி மணீஷ் திவாரி, சமாஜ்வாடி கட்சி எம்.பி தர்மேந்திர யாதவ், சரத் பவார் ஆதரவு என்.சி.பி எம்.பி சுப்ரியா சுலே உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வாக்கெடுப்பில் குளறுபடி!
இதனையடுத்து மசோதாவை அவையில் தாக்கல் செய்யலாமா, வேண்டாமா என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்த மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.
அதன்படி நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக மின்னணு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. மசோதாவை தாக்கல் செய்வதற்கு ஆதரவாக 220 பேரும் எதிராக 149 பேரும் வாக்களித்தனர்.
ஆனால் மின்னணு வாக்கெடுப்பில் குளறுபடி ஏற்பட்டதாக நடைமுறைக்கு எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆட்சேபம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து காகித சீட்டு முறையில் மீண்டும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது மசோதா தாக்கலுக்கு ஆதரவாக 269 பேரும் எதிராக 198 பேரும் வாக்களித்தனர்.
இதைத் தொடர்ந்து மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதாவை அவையில் தாக்கல் செய்தார்.
ஜேபிசிக்கு அனுப்ப மோடி கூறினார் – அமித் ஷா
அப்போது பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா “ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா அமைச்சரவையில் ஒப்புதலுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, அதை விரிவான விவாதத்திற்காக நாடாளுமன்ற கூட்டுக்குழுவுக்கு அனுப்ப வேண்டும் என்று பிரதமர் மோடி கூறியிருந்தார். சட்ட அமைச்சர் அந்த மசோதாவை ஜேபிசிக்கு அனுப்ப விரும்பினால், அதன் அறிமுகம் பற்றிய விவாதம் இத்துடன் முடியும். அங்கு அனைத்து விவாதங்களையும் நடத்தலாம்” என்று தெரிவித்தார்.
இதனையடுத்து மத்திய சட்டத்துறை அமைச்சர் மேக்வால் விதி 74-ன் கீழ் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவுக்காக ஜேபிசி அமைப்பதை முன் மொழிவதாக அறிவித்தார். அமைச்சரின் பரிந்துரையை அவைத் தலைவர் ஓம் பிர்லா ஏற்றுக் கொண்டார். இதன்படி ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ மசோதா ஜேபிசி பரிசீலனைக்கு அனுப்பப்பட உள்ளது.
மசோதவை ஜேபிசிக்கு அனுப்புவது ஏன்? அங்கு என்ன நடக்கும்?
மக்களவையில் மொத்தம் 543 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை பெற 362 பேரின் ஆதரவு தேவை. ஆனால் பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தற்போது 293 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர். இதேபோல மாநிலங்களவையில் மொத்தமுள்ள 245 எம்.பி.க்களில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையை நிரூபிக்க 164 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. ஆளும் என்டிஏவுக்கு 112 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர்.
இதன் காரணமாக அனைத்து கட்சிகளிடமும் கருத்தொற்றுமையை ஏற்படுத்த 31 எம்.பி.க்களைக் கொண்ட ஜேபிசி பரிசீலனைக்கு மசோதா அனுப்பப்படுகிறது. இந்த குழு 90 நாட்களில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யும். தேவைப்பட்டால் காலக்கெடு நீட்டிக்கப்படும். ஜேபிசி பரிசீலனைக்கு பிறகு இரு அவைகளிலும் மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தப்படும்.
கிறிஸ்டோபர் ஜெமா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
”ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா அரசியலமைப்பை சிதைக்கிறது” : எதிர்க்கட்சி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு!
5 கி.மீ தொலைவு ஓட்டம்… 30 விநாடியால்… ஆயுதப்படை போலீஸ் எடுத்த முடிவு!