காங்கிரஸ் கட்சியில் ஒருவருக்கு ஒரு பதவி என்பது காங்கிரஸ் தலைவர் பதவியிலும் பின்பற்றப்படும் என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் வயநாடு எம்.பியுமான ராகுல் காந்தி கூறியுள்ளார்.
அக்டோபர் 17 ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெறும் என அக்கட்சியின் தேர்தல் குழு தலைவர் மதுசுதன் மிஸ்திரி இன்று (செப்டம்பர் 21) அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
அக்டோபர் 19 ஆம் தேதி டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அன்றைய தேதியே கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பதும் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் ,திக்விஜய் சிங், மணீஷ் திவாரி ஆகியோர் போட்டியிட வாய்ப்பு இருக்கிறது.
இந்நிலையில், கேரளாவில் ஒற்றுமை நடைப் பயணம் மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் தேர்தல் குறித்து போட்டியாளர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் இன்று (செப்டம்பர் 22 ) பேசியதாவது: ‘உதய்பூர் மாநாட்டில் நாம் ஒரு உறுதிமொழி எடுத்துக்கொண்டோம். அது கடைபிடிக்கப்படும்.
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிடக் கூடியவர்களுக்கு எனது அறிவுரை என்னவென்றால் நீங்கள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பதவியை பெற உள்ளீர்கள்.
இது ஒரு கட்சிப் பதவி மட்டுமல்ல, இது ஒரு சித்தாந்தப் பதவியாகும். இது இந்தியாவின் ஒரு நம்பிக்கை அமைப்பு மற்றும் நாட்டின் தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கிறது’ என்றார்.
உதய்பூர் மாநாட்டில் ஒருவருக்கு ஒரு பதவிதான் என்று முடிவு செய்யப்பட்டதைத்தான் ராகுல் காந்தி குறிப்பிடுகிறார் என்று காங்கிரஸ் கட்சிக்குள் விவாதங்கள் நடந்து வருகின்றன.
காங்கிரஸ் தலைவர் பதவிக்குப் போட்டியிட உள்ளதாகக் கூறப்படும் அசோக் கெலாட், ராஜஸ்தான் முதல்வர் பதவியை கைவிட மறுப்பதாகக் கூறப்படும் நிலையில், ராகுல் காந்தி, அசோக் கெலாட்டுக்கு மறைமுகமாக பதில் அளித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
மு.வா.ஜெகதீஸ் குமார்