ராஜன் குறை
பல்வேறு நேரங்களில் துல்லியமற்ற மொழி பயன்பாடு பேச்சில் பல குழப்பங்களை ஏற்படுத்துகின்றன. சமீபத்தில் விவாதிக்கப்படும் “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்ற கருத்தாக்கம் அப்படிப்பட்ட தீவிரமான குழப்பத்தை ஏற்படுத்தும் ஒரு சொல்லாக்கம்.
தேர்தல் என்பது என்னவென்றால் மக்கள் தாங்களே தங்களை ஆண்டுகொள்ளும் பொருட்டு அரசை நிர்வகிக்க பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதுதான். எனவே ஒவ்வோர் அரசையும் நிர்வகிக்க தனித்தனியான தேர்தல்கள்தான் நடத்தப்பட வேண்டும் என்பது தெளிவு.
இந்திய கூட்டாட்சி குடியரசில் இருபத்தெட்டு அரசுகள் உள்ளன. அவற்றைத் தவிர முழுமையான அரசத்தன்மை (Statehood) இல்லாத எட்டு ஒன்றிய ஆட்சிப் பிரதேசங்களின் அரசாங்கங்கள் உள்ளன. முழுமையான அரசுகளின் சுயாட்சி உரிமைகளுக்கும், ஒன்றிய ஆட்சிப் பகுதி அரசாங்கங்களின் சுயாட்சி உரிமைகளுக்கும் வேறுபாடுகள் இருக்கும்.
உதாரணமாக புதுச்சேரி அரசுக்கும், தமிழ்நாட்டு அரசுக்கும் சுயாட்சி உரிமைகளில் உள்ள வித்தியாசங்களை சொல்லலாம். சமீபத்தில் ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தின் அரசத்தன்மை நீக்கப்பட்டு அது ஒன்றிய ஆட்சிப் பிரதேசமாக மாற்றப்பட்டதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்த இருபத்தெட்டு அரசுகளுக்கும் சரி, ஒன்றிய ஆட்சிப் பிரதேச அரசாங்கங்களுக்கும் சரி… தனித்தனியாக தேர்தல்களை நடத்தியாக வேண்டும். இதைத்தவிர இந்திய ஒன்றிய அரசாங்கத்தின் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலையும் தனியாக நடத்த வேண்டும். அவற்றையெல்லாம் எப்படி ஒரே தேர்தலாக மாற்ற முடியும்? அது சாத்தியமேயில்லை.
மாறாக “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்ற கருத்தின் வாயிலாக என்ன கூறப்படுகிறது? இந்த எல்லா தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்தலாம் என்று கூறப்படுகிறது. அதாவது இந்திய ஒன்றிய அரசின் மக்களவைக்கும், இருபத்தெட்டு மாநில அரசுகளுக்கும், எட்டு ஒன்றிய ஆட்சிப் பிரதேச அரசாங்கங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த வேண்டும், தனித்தனியாக நடத்தக் கூடாது என்று கூறப்படுகிறது. ஒரே நேரத்தில், அதாவது இருபத்தெட்டு மா நில அரசுகள் + எட்டு ஒன்றிய ஆட்சிப் பிரதேச அரசாங்கங்கள் + ஓர் ஒன்றிய அரசு மக்களவை ஆகிய அனைத்து தேர்தல்களையும் ஒரு சேர நடத்த வேண்டும் என்பதுதான் திட்டம்.
அரசுகளின் சுயாட்சித்தன்மை என்னவாகும்?
ஆங்கிலத்தில் ஸ்டேட் (State) என்றால் அரசு என்று பொருள். இந்திய அரசியலமைப்பு சட்டம் அவ்வகையான அரசுக்கான அங்கீகாரத்தை அளிக்கிறது. தமிழ்நாடு அரசு என்பது அவ்வாறு சுயாட்சி உரிமைகள் பெற்ற அரசாகும்.
தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசுடன் அதிகாரங்களை பகிர்ந்து கொள்கிறது. உதாரணமாக நில உரிமையைத் தீர்மானிக்கும் அதிகாரம் மாநில அரசிடமே உள்ளது. சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் அதிகாரம் மாநில அரசிடமே உள்ளது.
அரசியலமைப்பு சட்டம் இந்த அரசுகளின் ஒன்றியத்தை இந்திய ஒன்றிய அரசாங்கம் என்று கூறுகிறது (Union Government of India). ஆனால் பேசும்போது, எழுதும்போது இந்திய அரசு என்று கூறுகிறோம். ஆனால் இந்திய குடியரசு என்பது ஒற்றை அரசல்ல; ஒன்றிய அரசுதான். அதில் இருபத்தெட்டு சுயாட்சி அரசுகளும், எட்டு ஒன்றியப் பிரதேச அரசாங்கங்களும் உள்ளன, ஓர் ஒன்றிய அரசும் உள்ளன.
இந்திய அரசுகள் எல்லாம் நிர்வாக அமைப்புகள்தான். அவற்றுக்கு சுயாட்சி உரிமைகள் கிடையாது என்று பாமரத்தனமாக சிலர் நினைக்கிறார்கள். அரசியலமைப்பு சட்டம் அப்படி நினைக்கவில்லை.
உதாரணமாக ஒன்றிய அரசை நிர்வகிப்பதற்கு இரண்டு அவைகளை ஏற்படுத்தியுள்ளது அரசியலமைப்பு சட்டம். ஒன்று இந்தியில் லோக் சபா எனப்படும் மக்களவை. இதற்கு இந்திய குடிமக்கள் வாக்களித்து பிரதிநிதிகளை அனுப்புவார்கள். மற்றொன்று இந்தியில் ராஜ்ய சபா எனப்படும் மாநிலங்களவை. இதற்கான உறுப்பினர்களை மாநில சட்டமன்ற உறுப்பினர்களே தேர்ந்தெடுத்து அனுப்புவார்கள். ஆங்கிலத்தில் இது கவுன்சில் ஆஃப் ஸ்டேட்ஸ் (Council of States) என்று அழைக்கப்படுகிறது.
இந்திய மாநில அரசுகளுக்கு சுயாட்சி உரிமை இல்லையென்றால் எதற்காக நாடாளுமன்றத்தில் இரண்டு அவைகள்? எதற்காக மாநிலங்களவை? எனவே இந்திய குடியரசு என்பது இருபத்தெட்டு அரசுகளின் கூட்டாட்சி என்பது தெள்ளத்தெளிவான அரசியலமைப்பு ஆகும்.
அரசின் உரிமை: விரும்பியபோது தேர்தல் நடத்திக்கொள்ளலாம்!
மக்களாட்சியில் அரசு என்பது மக்களின் சுயாட்சி என்று பார்த்தோம். அந்த அரசுக்கு இரண்டு அங்கங்கள். ஓர் அங்கம் அரசுப் பணியாளர்கள், அதிகாரிகள். இரண்டாவது அங்கம் அந்த அரசு இயந்திரத்தை நிர்வகிக்கும் மக்கள் பிரதிநிதிகள். அதனால்தான் அவர்களை அரசாங்கம் என்று அழைக்கிறோம்.
ஒரு மாநில அரசில், மக்கள் தேர்ந்தெடுத்த அரசாங்கம் பெரும்பான்மையான மக்கள் பிரதிநிதிகள் ஆதரவை இழக்கலாம் அல்லது அது விரும்பும் சட்டங்களை இயற்ற சட்டமன்றத்தில் போதுமான மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவு கிடைக்காமல் போகலாம். அத்தகைய சூழ் நிலையில், மந்திரிசபை பதவி விலகுவதற்கும், சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு மீண்டும் தேர்தலைச் சந்திப்பதற்கும் உரிமை இருக்கிறது. இந்த உரிமை மக்களின் சுயாட்சி உரிமை.
எல்லா அரசுகளுக்கும் ஒரே நேரத்தில்தான் தேர்தல் நடத்த வேண்டும் என்றால் இந்த சுயாட்சி உரிமை பறிபோய்விடும். ஒரு மாநிலத்து மக்கள் மீண்டும் ஒட்டுமொத்தமாக நாட்டின் அத்தனை அரசுகளுக்கும், அரசாங்கங்களுக்கும் தேர்தல் வரும் வரை காத்திருக்க வேண்டும் என்றால் அவர்கள் சுயாட்சிக்கு என்ன பொருள்?
தேர்தல் நடந்து இரண்டாண்டுகளில் மாநில அரசாங்கம் பெரும்பான்மை சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை இழக்கிறது என்று வைத்துக்கொள்வோம். வேறு எந்த கட்சிக்கும் பெரும்பான்மை ஆதரவு இல்லை. அப்படியென்றால் மீதம் மூன்று ஆண்டுகள் யார் ஆட்சி செய்வது? பெரும்பான்மை இழந்த அரசாங்கம் ஆட்சி செய்வது மக்களாட்சி ஆகாது. ஒன்றிய அரசாங்கமே ஆள்வது என்பது மாநில மக்களின் சுயாட்சிக்கு எதிரானது.
இதைச் சரியாக சிந்தித்துப் பார்த்தால், ஒவ்வொரு மாநில அரசுக்கும் தேவையானபோது தேர்தல் நட த்துவது என்பது அந்த அரசின் பிரிக்க முடியாத உரிமை (Inalieanable right) என்பது தெளிவாகும். ஓர் அரசுக்கான தேர்தலை மற்றோர் அரசு அல்லது அரசாங்கத்தின் தேர்தலுடன் பிணைப்பது என்பது அந்த மக்களின் உரிமையைப் பறிப்பது என்றே பொருள்படும்.
இது அரசியலமைப்பு சட்டத்தின் தரிசனத்துக்கு முற்றிலும் முரணானது. கூட்டாட்சி தத்துவத்தைக் குழி தோண்டிப் புதைப்பது. எனவே மக்களாட்சியில் நம்பிக்கையுள்ள அனைவரும் ‘’ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்ற சிந்தனையை எதிர்ப்பது இன்றியமையாத தேவை எனலாம். எனவேதான் திராவிட முன்னேற்றக் கழகம் இந்த எண்ணத்தை கடுமையாக எதிர்த்துள்ளது.
தேசம் என்றால் என்ன? அரசு என்றால் என்ன?
சமகால உலகில் தேசம் என்பது திட்டவட்டமான எல்லைகளைக் கொண்ட நிலவியல் பகுதியாகும். இந்த எல்லைகளை வேறு நாடுகளின் ஆக்கிரமிப்பிலிருந்து காப்பதற்கு ராணுவம் தேவைப்படுகிறது. இப்படி அண்டை நாடுகளிலிருந்து தன் உரிமையைக் காத்துக்கொள்வதையே முக்கியமாக இறையாண்மை என்று அழைக்கிறோம்.
தேசம் என்பது பிற தேசங்களுடன் உறவு கொள்ளும், பிற தேசங்களிடமிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ளும் நிலவியல் பகுதி, அதன் இறையாண்மை என்று புரிந்துகொள்வதே பொருத்தம்.
அரசு என்பது என்னவென்றால் மக்களின் சுயாட்சி உரிமைகள் என்பதாகும். அதாவது மக்கள் தங்களை தாங்களே ஆண்டுகொள்ளும் நிலையான சுயாட்சி உரிமை. சுயாட்சி உரிமை கொண்ட மக்கள் தொகுதியின் அடையாளமே அரசு.
இருபத்தெட்டு அரசுகளாக சுயாட்சி உரிமைகொண்ட மக்கள் தொகுதிகள், ஒரே தேசமாக இந்தியக் குடியரசில் இணைந்து இறையாண்மை பெற்று விளங்குகிறார்கள். அதனால்தான் இவர்கள் குடியுரிமை என்பது இந்தியக் குடியுரிமையாகவே விளங்குகிறது.
இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கிய இந்த முறை, பல்வேறு குழப்பங்களையும், நடைமுறை சிக்கல்களையும் தோற்றுவித்தாலும் தீர்க்கதரிசனம் மிக்கது. இந்திய நாட்டின் சுயாட்சி, இறையாண்மை ஆகியவை குறித்த முன்னெடுப்புகளை ஆங்கிலம் படித்தவர்களே செய்தாலும், அனைத்து மக்களுக்குமான அரசியலமைப்பை உருவாக்க வேண்டிய தேவையை அம்பேத்கர் உள்ளிட்ட மேதைகள் உணர்ந்தார்கள்.
இருபத்தெட்டு இந்திய அரசுகளும் இறையாண்மை பெற்ற தேசங்களாக இருந்தால், எல்லைத் தகராறுகளும், ராணுவங்களும், போர்களும் அனைவரின் வளர்ச்சியையும், நல்வாழ்வையும் பாழாக்கும் சாத்தியங்கள் அதிகம்.
அதே நேரம், மொத்த இந்தியக் குடியரசும் ஒரே அரசாக இருந்தால், பல்வேறு மொழிகள் பேசும் மக்களெல்லாம் ஒரே சுயாட்சி அமைப்பை உருவாக்குவது சாத்தியமேயில்லை. ஒருவருக்கொருவர் பேசுவதே புரியாமல் எப்படி ஒரே மக்கள் தொகுதியாக மாற முடியும்? எனவே சுயாட்சி அரசுகள் என்பது மாநிலங்களாக இருப்பதே சாத்தியம்.
மாநில சுயாட்சியே தேசத்தின் உயிர்
மனித உடலையே ஓர் உருவகமாக எடுத்துக்கொள்வோம். உடலின் உறுப்புகள் அனைத்தும் ஒன்றுபட்டு இயங்க உயிர் அவசியம். அந்த உயிரை உத்தரவாதம் செய்வது ரத்த ஓட்டத்தை உறுதி செய்யும் இதயம். என்னதான் உடலின் இயக்கத்தையெல்லாம் மூளை கட்டுப்படுத்தினாலும், ரத்த ஓட்டம் இல்லாமல் மூளையே வேலை செய்யாது.
மக்களின் சுயாட்சி என்பதே நாட்டின் இதயம். மூளையோ, அது இயக்கும் கரங்களோ, கால்களோ, பிற உடல் பாகங்களோ இறையாண்மை போன்றவை. அவை உடல் புறவுலகில் செயல்படுவதைக் கட்டுப்படுத்துகின்றன. ஆனால் உடலியக்கத்தை அதற்குள்ளே சாத்தியப்படுத்துவது இதயமே.
இந்திய தேசிய குடியரசு, அதன் ராணுவம், அதன் வெளியுறவு, அதன் ரிசர்வ் வங்கி, இன்னபிற அங்கங்கள் அதன் இறையாண்மை எல்லாம் மூளை, அதன் கட்டுப்பாட்டிலுள்ள உடல் உறுப்புகள் போன்றவை.
நாட்டின் இருபத்தெட்டு சுயாட்சி அரசுகள் என்பவை இருபத்தெட்டு இதயங்கள். இந்த இதயங்களெல்லாம் சீராக இயங்கினால்தான் தேசியக் குடியரசு என்ற நாடு சிறப்பாக இயங்கும்.
பாரதீய ஜனதா கட்சியின் பிரச்சினை என்ன?
பாரதீய ஜனதா கட்சி இந்த உருவகத்தை தவறாகப் புரிந்துகொள்கிறது. இந்தியா ஒற்றை இதயம் கொண்டதாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறது. அதனால் அது அறிவை இதயமாக்கி இதயங்களின் இயக்கத்தையே பாழ்படுத்த நினைக்கிறது.
ஒன்றிய அரசிடம் எல்லா அதிகாரங்களையும் குவிக்க வேண்டும். மாநில அரசுகளின் அதிகாரங்களைப் பறித்து அவற்றை உள்ளாட்சி அமைப்புகள் போல மாற்ற வேண்டும். அப்போதுதான் பெருமுதலாளிகள் மொத்த நாட்டையும் சுரண்டிக் கொழுக்க வசதியாக இருக்கும். அம்பானி, அதானி போன்ற பெருமுதலாளிகளின் நலனே பாரதீய ஜனதா கட்சியின் நலன் என்பதால் அதற்கு மாநில அரசுகளைப் பிடிப்பதில்லை.
அதற்கு தகுந்தாற்போல அது ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் ஒரே கலாச்சாரம்தான், இந்து மத அடையாளம்தான், சமஸ்கிருத மொழிதான், ஆரிய பண்பாடுதான், சனாதன தர்மம்தான் என்று நம்புகிறது. அதனால் இருபத்தெட்டு அரசுகளின் கூட்டாட்சி இந்தியா என்றால் அதற்கு வேப்பங்காயாக கசக்கிறது. பன்மை அடையாளங்களை அழித்து ஒற்றை அடையாளத்தை நிறுவத் துடிக்கிறது.
அதன் அங்கமாகவே அது ‘’ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்ற திட்டத்தை முன்வைக்கிறது. இந்தியா இருபத்தெட்டு அரசுகளின் கூட்டாட்சி என்ற உண்மையை அது மறுதலிக்க விரும்புகிறது. தங்கள் அரசை தேவையானபோது கலைத்து, புதிய தேர்தல் நடத்திக்கொள்ளும் மாநிலத்தின் உரிமையைப் பறிப்பதென்பது மாநிலத்தின் அடையாளத்தை அழிப்பதுதானே தவிர, வேறொன்றுமில்லை.
இவர்களுடைய இந்த தவறான நோக்கு இந்திய குடியரசைப் பாழ்படுத்தி விடும் என்பதை பாஜக புரிந்துகொள்வதில்லை. பண்டித நேரு, அண்ணல் அம்பேத்கர் எனப் பல மேதைகளின் தரிசனங்கள் இந்துத்துவ சங்கிகளுக்குப் புரிவதில்லை.
அவர்களுக்குத்தான் புரியவில்லை என்றால் உலக கூட்டாட்சி குடியரசை முன்மொழிந்த அரசியல் மேதை, பேரறிஞர் அண்ணாவினை தங்கள் கட்சி பெயரில் வைத்துக்கொண்டுள்ள அ.இ.அ.தி.மு.க அணிகள் போட்டிப் போட்டுக்கொண்டு “ஒரே நாடு, ஒரே தேர்தலை” ஆதரிக்கும் அவலத்தினை என்னவென்று சொல்வது? கட்சி பெயரையாவது மாற்றிவிடுங்கள், அண்ணா பெயரை அவமானப்படுத்தாதீர்கள் என்றுதான் கூற முடியும்.
கட்டுரையாளர் குறிப்பு:
ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: [email protected]
Comments are closed.