காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்டுள்ள இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் இன்று ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக 150 நாட்கள் நடைபெறும் இந்த நடைபயணம் காஷ்மீரில் நிறைவு பெறுகிறது.
கடந்த 7ம் தேதி தமிழகத்தின் குமரி முனையில் இருந்து தொடங்கிய நடைபயணம் தற்போது கேரளாவின் கொல்லத்தில் தொடர்ந்து வருகிறது.
நேற்று கேரளாவின் திருவனந்தபுரம் அருகே உள்ள கல்லம்பலத்தில் இருந்து காலை 7.30 மணிக்கு ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சி தொண்டர்களுடன் தனது 8 வது நாள் நடைபயணத்தை தொடங்கினார்.
முதல் நிகழ்ச்சியாக பாதயாத்திரை குழு, சிவகிரி மடத்திற்கு சென்று சமூக சீர்திருத்த வாதியும், துறவியுமான ஸ்ரீநாரயணகுருவுக்கு மரியாதை செலுத்தினார்.
பின்னர் அங்கிருந்து கொல்லம் மாவட்ட எல்லையான கடம்பாட்டு கோணத்தை ஆயிரக்கணக்கான காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் புடைசூழ நடைபயணம் மேற்கொண்டார்.
பின்னர் மதியம் 2 மணிக்கு கொல்லம் மாவட்டத்தில் சாந்தனூர் பள்ளி மாணவர்களுடனான உரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பங்கேற்றார்.
நாட்டை பிளவுபடுத்து பாஜக, ஆர்எஸ்எஸ்!
தொடர்ந்து மாலையில் திருமுக்கு சந்திப்பில் இருந்து நடைபயணம் தொடங்கியது. இரவு 7 மணியளவில் பள்ளிமுக்கு சந்திப்பில் திரளான பொதுமக்களுக்கு இடையே நடைபெற்ற கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ”ஸ்ரீ நாராயண குரு, அய்யன்காளி, சட்டம்பி சுவாமிகள் போன்ற புகழ்பெற்ற சமூக சீர்திருத்தவாதிகளின் போதனைகளுக்கு மாறாக நாட்டில் வன்முறை, வெறுப்பு மற்றும் கோபத்தை பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பரப்பி வருகிறது.
பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் வெறுப்பை அடிப்படையாக கொண்டது. இது நாட்டைப் பிளவுபடுத்துகிறது. ஒருவரின் கருத்துக்கு மரியாதை, சகிப்புத்தன்மை, எதிரிகளிடம் கூட பாசம், அகிம்சை போன்ற இந்தியாவின் மிகப்பெரிய பலங்களை அவர்கள் பறிக்கிறார்கள்.
மகாத்மா காந்தி மிகப்பெரிய வல்லரசைத் தோற்கடிக்க அகிம்சையைப் பயன்படுத்தினார். ஆனால் இன்று பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்ஸின் சித்தாந்தத்தால் நமது நாட்டின் உண்மையான பலம் பலவீனமடைந்து வருகிறது.” என்றார்.
ஒருநாள் ஓய்வு!
ராகுல் காந்தியும், காங்கிரஸ் தலைவர்களும் கடந்த 8 நாட்களாக தொடர்ந்து நடந்து வருவதால் பலரின் கால்களில் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில் தொடந்து நடைபயணம் மேற்கொண்டுள்ள அனைவரும் ஓய்வுபெறும்படியாக இன்று ஒருநாள் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 8 நாள்களில் 150 கி.மீக்கும் மேலாக பயணம் செய்த நிலையில் தற்போது ஒருநாள் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.
நாளை வழக்கம்போல் இந்திய ஒற்றுமை நடைபயணம் கொல்லத்தில் இருந்து தொடங்கும் என்று காங்கிரஸ் கட்சி ட்விட்டர் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
மோடி -புதின் சந்திப்பு: பேசப்போவது என்ன?