ஒரே நாடு ஒரே காவல்துறை சீருடை : மோடி யோசனை!

அரசியல்

நாடு முழுவதும் ஒரே நாடு ஒரே காவல்துறை சீருடை கொண்டுவருவது தொடர்பான யோசனையைப் பிரதமர் மோடி இன்று (அக்டோபர் 28) நடைபெற்ற உள்துறை அமைச்சர்கள் மாநாட்டில் முன்வைத்தார்.

ஹரியானாவின் சூரஜ்கண்டில் மாநில உள்துறை அமைச்சர்களின் 2வது நாள் மாநாடு இன்று காலை நடைபெற்றது. இதில் காணொளி காட்சி மூலம் கலந்துகொண்டு பேசினார் பிரதமர் மோடி.

ஒரே காவல்துறை சீருடை!

அப்போது நாடு முழுவதும் உள்ள காவல்துறையினரின் அடையாளம் ஒரே மாதிரியாக இருக்கலாம் என தான் கருதுவதாகத் தெரிவித்த அவர்,

“ஒரே நாடு ஒரே காவல்துறை சீருடை என்பது யோசனைதான். இது ஒரு பரிந்துரை மட்டுமே. மாநிலங்கள் மீது அதைத் திணிக்கவில்லை.

காவல்துறையினருக்கு ஒரே சீருடை என்பது 5 ஆண்டுகளிலோ, 50 ஆண்டுகளிலோ, அல்லது 100 ஆண்டுகளிலோ நடைபெறலாம்” என்று குறிப்பிட்டார்.

குற்றங்கள் மற்றும் குற்றவாளிகளைக் கண்டறிவதற்கு மாநிலங்களுக்கு இடையே ஒத்துழைப்பு அவசியம் என்று தெரிவித்த பிரதமர், சட்டம் ஒழுங்கை பராமரிப்பது மாநில அரசின் பொறுப்பு.

ஒவ்வொரு மாநிலமும் மற்ற மாநிலத்திடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும். ஒருவருக்கொருவர் உத்வேகம் பெற வேண்டும், உள்நாட்டு பாதுகாப்புக்காக ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.

குற்றங்கள் மாநிலங்களுக்கு இடையேவும், சர்வதேச அளவிலும் அரங்கேறி வருகின்றன. தொழில்நுட்பம் மூலம் குற்றவாளிகள் எல்லைக்கு அப்பால் இருந்து குற்றங்களைச் செய்து வருகின்றனர்.

எனவே, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு முக்கியமானது.

நாட்டில் சட்டம் மற்றும் ஒழுங்கை வலுப்படுத்த பல்வேறு மாநில காவல்துறையினருக்கு இடையேயான தொடர்பை உறுதி செய்ய வேண்டும். சூரஜ்கண்டில் நடைபெறும் இந்த மாநாடு கூட்டாட்சி முறைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு” என்றார்.

இணைய குற்றங்கள் குறித்து பேசிய அவர், ஆயுதங்கள், போதை பொருட்கள் கடத்தல் போன்ற குற்றங்களை தடுக்க ட்ரோன்களை நாம் பயன்படுத்தினாலும் புதிய தொழில்நுட்பங்களை நோக்கி அரசு தொடர்ந்து பயணிக்க வேண்டும்.

ஸ்மார்ட் தொழில் நுட்பத்துடன் சட்டம் ஒழுங்கு அமைப்பை மேம்படுத்த வேண்டும். இதற்கு 5ஜி தொழில்நுட்பம் பெரும் உதவியாக இருக்கும்.

5ஜி மூலம் முகத்தை அடையாளம் காணும் தொழில்நுட்பம், தானியங்கி நம்பர் பிளேட் அடையாளம் காணும் தொழில்நுட்பம், ட்ரோன் மற்றும் சிசிடிவி தொழில்நுட்பம் ஆகியவற்றில் பன்மடங்கு முன்னேற்றம் இருக்கும்.

எனவே குற்றங்களைத் தடுக்க நாம் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

போலி செய்திகளை ஆராய வேண்டும்

சட்டம் ஒழுங்கை பராமரிப்பது என்பது 24*7 நேர வேலை என்று தெரிவித்த பிரதமர் மோடி, தேவையில்லாத பழைய சட்டங்களை நீக்கி காலத்திற்கு ஏற்ற சட்டங்களை கொண்டுவருவதில் மாநில அரசுகள் முயற்சி எடுக்க வேண்டும்.

அதுபோன்று சமூக வலைதளங்களில் ஒரு செய்தியை பகிரும் போது, அதன் உண்மைத் தன்மையை ஆராய்ந்து பகுப்பாய்வு செய்து பகிர வேண்டும். இல்லையெனில் நாட்டில் ஒரு போலி செய்தி புயலை உருவாக்கிவிடும்.

கடந்த காலங்களில் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு தொடர்பாகப் பரவிய போலி செய்திகளால் நாடு ஏராளமான இழப்புகளைச் சந்தித்தது.
போலி செய்திகளைக் கண்டறிவதில் தொழில்நுட்பம் முக்கிய பங்காற்றுகின்றன” என குறிப்பிட்டார்.

நக்சல்களை வேரோடு பிடுங்கி எறிய வேண்டும்

நக்சல்களின் அனைத்து வடிவங்களையும் நாம் வேரோடு பிடுங்கி எறிய வேண்டும். அது துப்பாக்கி ஏந்தியிருந்தாலும் அல்லது பேனாவை ஏந்தியிருந்தாலும், அனைத்திற்கும் நாம் தீர்வு காண வேண்டும். இதுபோன்ற சக்திகள் இளைஞர்களை தவறாக வழிநடத்த அனுமதித்துவிடக் கூடாது. ஆனால் இவர்களுக்கு சர்வதேச அளவில் உதவிகள் கிடைக்கின்றன.

நாட்டில் கடந்த 8 ஆண்டுகளில் நக்சலைட்டுகளால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளன.
ஜம்மு காஷ்மீர் அல்லது வடகிழக்கு மாநிலங்கள் என எதுவாக இருந்தாலும் இன்று நாம் அமைதியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறோம்.

அதுபோன்று நாம் உள் கட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து துறைகளும் விரைவாக வளர்ச்சி அடையக் கவனம் செலுத்த வேண்டும்” என்று பேசினார்.

பிரியா

19% ஈரப்பத நெல் கொள்முதல் செய்ய ஒப்புதல்?

மனநல காப்பகத்தில் இணைந்த மனங்கள்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
2
+1
0
+1
0

1 thought on “ஒரே நாடு ஒரே காவல்துறை சீருடை : மோடி யோசனை!

  1. மாநிலங்களின் காவல் துறை அதிகாரமும் விரைவில் பறிபோக போகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *