எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ‘இந்தியா’ வின் மூன்றாவது கூட்டம் மும்பையில் தொடங்கிய அதே ஆகஸ்டு 31 ஆம் தேதிதான், ‘செப்டம்பர் 18 முதல் 22 வரை நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடர்’ என்ற அறிவிப்பை மோடி அரசு வெளியிட்டது. உடனே மும்பை இந்தியா அணி கூட்டத்தின் மீதான ஊடகப் பார்வை, சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடர் ஏன் என்ற விவாதத்தின் பக்கம் சென்றது.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முழக்கத்தை மசோதாவாக மாற்ற ஒன்றிய அரசு முனைந்திருப்பதாகவும், அதற்காகவே இந்த சிறப்புக் கூட்டத் தொடர் என்றும் செய்திகள் கசிந்தன. அதை உறுதிப்படுத்துவது போல முன்னாள் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் தலைமையில் ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி ஆராய குழு அமைத்துள்ளது அரசு.
இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு அதிமுக முழு ஆதரவு அளிக்கும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி. இப்போதல்ல, 2021 சட்டமன்றத் தேர்தல் முடிந்த நிலையிலேயே இந்த விவகாரத்தில் நம்பிக்கையாக இருந்தார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுகவின் சட்டமன்ற கட்சித் தலைவராக கடந்த 2021 மே 10 ஆம் தேதி அக்கட்சியின் அப்போதைய இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது தனக்கு நெருக்கமான சில அதிமுக எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகளிடம் உற்சாகமாக சில செய்திகளை எடப்பாடி பழனிசாமி பகிர்ந்துகொண்டார்.
அப்போது நிர்வாகிகளிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “நாம் பெற்ற வெற்றி சாதாரணமானதல்ல. அம்மா இல்லாமல் மூன்றாவது முறை ஆட்சியைக் கேட்டு தேர்தலை சந்தித்த நாம், 66 இடங்களைப் பெற்றுள்ளோம். கூட்டணிக் கட்சிகளுக்கும் வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளோம். எனவே இது நமக்கு வெற்றிதான். எனவே யாரும் சோர்ந்துவிடாதீர்கள். மற்ற கூட்டணிக் கட்சித் தலைவர்களிடமும் பேசினேன்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு டெல்லியில் முக்கியமானவர்களிடம் பேசினேன். பாஜகவுக்கு நான்கு இடங்கள் பெற்றது அதிலும் குமரியைத் தாண்டி அவர்கள் சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றது அக்கட்சியின் மேலிடத்துக்கு சந்தோஷம்தான். ஏற்கனவே ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. கொரோனா எல்லாம் முடிந்த பிறகு மத்திய அரசு ஒருவேளை அந்தத் திட்டத்தை தனது பெரும்பான்மை பலம் மூலம் கொண்டு வரும் சூழல் உள்ளதாக ஒரு தகவல் வருகிறது.
அப்படிக் கொண்டுவந்தால், வரும் மக்களவைத் தேர்தலோடு தமிழகம் உட்பட எல்லா மாநிலங்களுக்கும் சட்டமன்றத் தேர்தல் கூட வர வாய்ப்பிருக்கிறது. இதுபற்றிய முக்கிய ஆலோசனை டெல்லியில் இப்போது நடந்து வருகிறது. எனவே தேர்தல் முடிந்துவிட்டதே என்று சும்மா இருந்துவிடாதீர்கள். மத்திய அரசு அப்படி ஒரு முடிவெடுத்தால் அடுத்த மூன்று வருடங்களில் மக்களவைத் தேர்தலோடு சட்டமன்றத் தேர்தலும் வர வாய்ப்புள்ளது’ என்று பேசினார் எடப்பாடி.
இதை 2021 மே 11 ஆம் தேதி மின்னம்பலத்தில், ‘அடுத்த சட்டமன்றத் தேர்தல் எடப்பாடி மெகா வியூகம்’ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்தோம்.
அடுத்தடுத்து பல பத்திரிகையாளர் சந்திப்புகளிலும், பொதுக்கூட்டங்களிலும் இதை வெளிப்படையாகவே கூறினார் எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில்தான் இன்று (செப்டம்பர் 1) ஆதரித்து அறிக்கையும் வெளியிட்டுள்ளார் எடப்பாடி பழனிசாமி.
அதிமுக நிர்வாகிகளிடம் இதுகுறித்து பேசும்போது, “திமுகவின் 28 மாத கால ஆட்சியின் மீதான அதிருப்தியை வைத்து பாஜகவின் கூட்டணியையும் வைத்து சட்டமன்றத் தேர்தலில் அறுவடை செய்யலாம் என்று கணக்குப் போடுகிறார் எடப்பாடி பழனிசாமி. இந்த ஒரு விஷயத்தை டெல்லி பாஜக மேலிடம் கடந்த சட்டமன்றத் தேர்தலில் இருந்தே எடப்பாடிக்குள் விதைத்து வளர வைத்துள்ளது” என்கிறார்கள்.
திமுக தரப்பில் நாம் இதுகுறித்து பேசியபோது, “ஏற்கனவே 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக கடுமையாக நெருக்கடியை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால்தான் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு உள்ளிட்ட அதிரடி ஆபரேஷன்களை நடத்தி வருகிறார். இந்த நிலையில் திமுக ஆட்சி கலைக்கப்பட்டு ஒரே நாடு தேர்தல் என்ற அடிப்படையில் மக்களை, சட்டமன்றம் என இரு தேர்தலும் நடத்தப்பட்டால் 2021 ல் விட்ட இடங்களையும் சேர்த்துப் பிடித்து -திமுக மீண்டும் வலிமையாக ஆட்சி அமைக்கும்” என்கிறார்கள்.
சட்ட ரீதியாக ஒரே நாடு ஒரே தேர்தல் இவ்வளவு குறுகிய காலத்துக்குள் சாத்தியம் இல்லை என்றாலும்… மோடி அரசின் செயல்பாடுகள் அடுத்தடுத்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
–வேந்தன்
ரஜினியை தொடர்ந்து நெல்சனை சர்ப்ரைஸ் செய்த கலாநிதி மாறன்
’இந்தியா’ கூட்டணியின் இணை ஒருங்கிணைப்பாளர் யாரு?: அப்டேட் குமாரு!