ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதா கொடூரமான மசோதா என்றும் அதை முழுமையாக எதிர்ப்போம் என்றும் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் கூறியுள்ளார்.
இந்தியாவில் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவைகளுக்கு தனித்தனியாக தேர்தல் நடத்தப்படுகிறது.
ஒவ்வொரு சட்டப்பேரவை பதவி காலம் முடியும் போது அதற்கு ஏற்ப தேர்தல் நடத்தப்படும்.
இதனால் அடிக்கடி தேர்தல் நடைபெறுவதால் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை என்று கூறி மத்திய பாஜக அரசு ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டு வருகிறது.
இன்று (டிசம்பர் 12) பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
குளிர்கால கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில் அடுத்த வாரம் இந்த மசோதா மக்களவையிலும் மாநிலங்களவையிலும் தாக்கல் செய்யப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதற்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் தனது x பதிவில், “ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற கொடூரமான மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது நடைமுறைக்கு மாறானது. மற்றும் ஜனநாயக விரோத நடவடிக்கை ஆகும்.
மாநில குரல்களை ஒழித்து கூட்டாட்சி தன்மையை சிதைத்து ஆட்சியை சீர்குலைக்கும். இந்திய ஜனநாயகத்தின் மீதான இந்த தாக்குதலை முழு பலத்துடன் எதிர்ப்போம்.
எழுக… இந்தியா” என்ற பதிவிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
பிரியா
சாப்பாட்டுல அடிச்சுக்க முடியாத நகரங்கள் பட்டியல்… சென்னைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
பூண்டி ஏரியில் நீர் திறப்பு… வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு!