one country one election Rajan Kurai

ஒரே நாடு ஒரே தேர்தல்: அபத்தமான முழக்கம், ஆபத்தான சிந்தனை

அரசியல் சிறப்புக் கட்டுரை

ராஜன் குறை

ஆங்கிலத்தில் “One Nation, One Election” என்று வழங்கப்படும் ஒரு முழக்கம், தமிழில் “ஒரே நாடு, ஒரே தேர்தல்” என்று வழங்கப்படுகிறது. ஆங்கிலத்திலும் சரி, தமிழிலும் சரி இது ஓர் அபத்தமான முழக்கமாகும். காரணம் ஆங்கிலத்தில் நேஷன் எனப்படும் தேசத்துக்கோ, அல்லது நாட்டுக்கோ தேர்தல்கள் நடைபெறுவதில்லை. தேர்தல்கள் அரசை, அரசு இயந்திரத்தை, யார் ஆள்வது, நிர்வகிப்பது – அதாவது ஆட்சி செய்வது என்பதைத் தீர்மானிக்கவே நடக்கின்றன. எனவே, சரியாகச் சொன்னால், இந்த முழக்கம் “One State, One Election” என்றுதான் இருக்க வேண்டும். தமிழில் “ஒரே அரசு, ஒரே  தேர்தல்” என்று வழங்கப்பட வேண்டும். பிரச்சினை என்னவென்றால், அப்படி ஆசைப்பட்டாலும் வெளிப்படையாகச் சொல்ல முடியாது.

ஏனெனில், இந்தியாவில் 28 ஸ்டேட்ஸ், அதாவது அரசுகள் உள்ளன. அதைத்தவிர ஓர் ஒன்றிய அரசாங்கம் உள்ளது. ஒவ்வொரு ஸ்டேட்டுக்கும் ஓர் அரசாங்கத்தை அமைக்க தேர்தலைத் தனியாகத்தான் நடத்த வேண்டும். ஒன்றிய அரசாங்கத்தை ஆட்சி செய்யவும் ஒரு தேர்தல் மூலம் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எனவே 29 தேர்தல்கள் நடத்தப்படத்தான் வேண்டும். பிறகெப்படி அதை ஒரே தேர்தல், ஒன் எலெக்‌ஷன் என்று கூற முடியும்?

ஆங்கில ஏடுகளில் என்ன விளக்கத்தை எழுதுகிறார்கள் என்றால் Simultaneous elections, அதாவது ஒரே நேரத்தில் தேர்தல் என்று எழுதுகிறார்கள். இது சரியான விளக்கம். அதாவது, 28 அரசுகளுக்கும், ஒன்றிய அரசாங்கத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல். இத்தனை அரசுகளுக்கும் ஒரே தேர்தல் என்பது சாத்தியமே இல்லை என்பதால் ஒரே நேரத்தில் தேர்தல் என்பதைத்தான் ஒரே தேர்தல் என்று பிழையாக முழக்கமிடுகிறார்கள் என்று நாம் முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழில் நாம் இந்திய அரசுகளை மாநில அரசுகள் என்று கூறுகிறோம். ஆனால் யூனியன் கவர்ன்மென்ட் என்பதையும் பல நேரங்களில் ஒன்றிய அரசு என்று கூறிவிடுகிறோம். அப்படியல்ல. அது ஒன்றிய அரசாங்கம் மட்டுமேதான். ஆங்கிலத்தில் State Government, Union Government – அதாவது மாநில அரசாங்கம், ஒன்றிய அரசாங்கம் என்றுதான் வழங்கப்படுகிறது. Union State என்று கூற முடியாது. ஆனால் United State, Federal State என்று கூறலாம். ஒருங்கிணைக்கப்பட்ட அரசு,  கூட்டாட்சி அரசு என்று கூறலாம். ஆனால் இந்திய அரசியலமைப்பு அவ்வாறு கூறவில்லை. ஒன்றிய அரசாங்கம் என்றுதான் கூறுகிறது. ஏனெனில் இந்த யூனியன், அதாவது ஒன்றியம், அதன் அங்கங்களுக்கு முன்பே உருவானது என்று கருதப்படுகிறது.  அங்கேதான் இந்திய கூட்டாட்சியின் உள்முரண் உருவாகிறது.

அரசு என்றால் என்ன?

சரி, இது என்ன வெறும் வார்த்தை தொடர்பான பிரச்சினையா என்றால் அப்படிக் கூறிவிட முடியாது. மாநில அரசுகளுக்கும், ஒன்றிய அரசாங்கத்துக்குமான அதிகாரப் பகிர்வு பட்டியல் முக்கியமானது. அதில் முக்கியமாக நாம் ஒன்றை காண்கிறோம். அது என்னவென்றால் சட்டம் ஒழுங்கு என்பது மாநில அரசிடம்தான் உள்ளது. அடுத்து, நில உரிமை மாநில அரசிடம்தான் உள்ளது. ஒன்றிய அரசாங்கத்துக்கென்று நிலம் கிடையாது. அதனால்தான் எந்த மாநிலத்திலும் அடங்காத சில பகுதிகளை Union Territory, ஒன்றிய பிரதேசம் என்று அழைக்கிறார்கள். ஆனால் அவற்றிலும் சட்டமன்றங்கள் ஏற்பட்டு, அவை மாநில உரிமைகளைக் கோருவது தொடர்ந்து நடந்து வருகிறது. புதுச்சேரி மாநில அந்தஸ்து கோருகிறது.

தில்லி பிரச்சினை மிகவும் தீவிரமானது. அது மாநிலம் என்றே கூறப்பட்டுவிட்டது. ஆனால் சட்டம், ஒழுங்கு அதன் கையில் இல்லை. அது ஒன்றிய பிரதேசமாகவும் இல்லாமல், மாநிலமாகவும் இல்லாமல் இரண்டும் கெட்டானாக இருக்கிறது. தில்லியுடன் ஒப்பிட்டால், பிற மாநில அரசுகளை ஏன் அரசுகள் என்று கூறுகிறோம் என்பது விளங்கும். சட்டம் ஒழுங்கு, நிலம் என்பவை மட்டுமன்றி, கல்வி, சுகாதாரம், தொழில், வர்த்தகம், விவசாயம் என பல்வேறு துறைகளிலும் மாநில அரசின் அதிகாரங்கள் கணிசமானவை. சிலவற்றில் முழு அதிகாரமும், சிலவற்றில் ஒன்றியத்துடன் பகிர்தலும் உள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் இவ்வாறான பகிர்தல் செய்யப்பட்டது பிற உலக நாடுகளிலிருந்து மாறுபட்ட ஒரு வித்தியாசமான கலவை அமைப்பாகும். ஒன்றிய அரசுக்கு, ஒரு கூட்டாட்சி அரசுக்கு உள்ளதைவிட கூடுதல் அதிகாரங்கள் உள்ளன. அதனால் நடைமுறையில் மாநிலங்களிலிருந்து அதிகாரங்களை ஒன்றியம் கையகப்படுத்தும் சாத்தியம் நிலவிவருகிறது.

இந்த அதிகாரப் பகிர்வில் உள்ள நெகிழ்வான தன்மைகளால் அரசியல் இயக்கத்தில் மையத்தில் அதிகாரத்தைக் குவிக்கும் மையநாட்ட விசையும் (Centripetal force), மாநிலங்கள் அதிகாரங்களைக் கோரும் மையவிலக்கு விசையும் (Centrifugal force) இந்திய முரண் அரசியலைக் கட்டமைக்கும் ஆற்றலுடன் விளங்குகின்றன.

உதாரணமாக கோவிட் தொற்று காலத்தில் ஒன்றிய அரசு தடாலடியாக அதிகாரங்களைக் கையிலெடுத்துக் கொண்டதைப் பார்த்தோம். ஒட்டுமொத்த தேசத்தையும் திடீரென  பொது ஊரடங்கில் உறைய வைக்கும் முடிவை ஒன்றிய அரசு எடுத்தது. இதனால்  பணியிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நடந்தே ஊர் திரும்பும் அவலக்காட்சிகளைப் பார்த்தோம். ஆனால், முதல் முறை இப்படி செய்த ஒன்றிய அரசு, அதன்பின் ஏனோ மாநில அரசே பார்த்து முடிவு செய்யட்டும் என்று கூறிவிட்டது.

உலகில் கொரோனோ தொற்றுக்குத் தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டபின், தமிழ்நாட்டு அரசு அதுவே நேரடியாக தடுப்பூசியைக் கொள்முதல் செய்ய முனைந்தது. ஆனால், ஒன்றிய அரசு தலையிட்டு அனுமதி மறுத்துவிட்டது. ஒன்றிய அரசுதான் மொத்தமாகக் கொள்முதல் செய்து மாநிலங்களுக்குத் தரும் என்று கூறிவிட்டது. இது மாநிலங்களிடையே பாரபட்சம் காட்டப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளுக்கு இடமளித்தது.    

தேசிய அரசியலில் மேல்தட்டினரும், சாமானியர்களும்…

இந்த மையநாட்ட விசை, மையவிலக்கு விசைகளின் முக்கியமான வெளிப்பாடு மாநிலக் கட்சிகளின் தோற்றமாகும். இதன் வரலாறு மிகவும் நுட்பமானதும், சுவாரஸ்யமானதுமாகும். இன்றைய நிலையில் அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய, புரிந்துகொள்ள வேண்டிய வரலாறு இது.  இந்தியாவோ, பாரதமோ எப்படிக் கூறினாலும் அந்த நிலப்பரப்பு ஒரு துணைக்கண்டமாக அறியப்பட்டதேயன்றி எந்த காலத்திலும் ஒரே நாடாகவோ, ஒரே அரசாகவோ இருந்ததில்லை என்பது அனைவரும் அறிந்ததே.

முதல்முறையாக இந்திய மக்கள் தங்களை பொதுவாக இந்தியர் என்று அரசியல் ரீதியாக அழைத்துக்கொண்ட தருணம் இந்திய தேசிய காங்கிரஸ் என்ற அமைப்பின் தொடக்கத்தில்தான் நிகழ்ந்தது. ஆலன் அக்டேவியன் ஹ்யூம் என்ற பிரிட்டிஷ்காரரே இதற்கு 1885ஆம் ஆண்டு வித்திட்டவர். பெரும்பாலும் பல்கலைக்கழக, கல்லூரிகளைச் சேர்ந்தவர்கள், படித்தவர்கள், வக்கீல்கள், பிரமுகர்கள் என குடிமைச் சமூக அமைப்பாகவே இந்த அமைப்பு தோன்றியது. இவர்களது தேசியக் கற்பனை குடிமைச் சமூகக் கற்பனை. அது என்னவென்றால், பிரிட்டிஷ் அரசிடம் பேச்சுவார்த்தை மூலம், கோரிக்கைகள் மூலம் சுயாட்சி உரிமைகள் பெறுவது.  

இதற்கு மாறாக மராத்திய, வங்காளி பார்ப்பனரிடையே ஓர் இறையாண்மை தேசிய கற்பனை இருந்தது. அது என்னவென்றால் ஆயுதக் கிளர்ச்சி மூலம், வன்முறையில் பிரிட்டிஷ்காரர்களை வென்று தேசத்தை விடுதலை செய்வது என்பதாகும். இதன் விளைவாக பல தனிநபர் கொலைகள், தீவிரவாதச் செயல்கள் நடந்தேறின. வெகுமக்கள் கிளர்ச்சிகளும் பல நேரங்களில் ஆங்கில ஆட்சியின் அடக்குமுறைக்கு எதிராக நிகழ்ந்தாலும், அவற்றுக்கும் இந்தப் படித்த, பார்ப்பன சமூகத்தினரின் தீவிரவாத நோக்குக்கும் வேறுபாடு உண்டு.

இந்த நிலையில்தான் மகாத்மா காந்தியின் வருகை ஒரு புதிய திசையை உருவாக்கியது. அது என்னவென்றால் அவர் அகிம்சையை, வன்முறையற்ற போராட்டத்தை வெகுமக்கள் ஈடுபாட்டுடன் முன்னெடுக்க முனைந்தார். பல்வேறு இந்திய மொழிகளிலும் தோன்றிய பல வெகுஜன ஏடுகள் காந்தியை மகாத்மாவாக, கடவுளராக மக்களிடையே பிரச்சாரம் செய்து அவருக்கு பெரும் வெகுமக்கள் செல்வாக்கை ஈட்டித் தந்தன.  

காந்தி குடிமைச்சமூக அரசியலுக்கு வெகுமக்கள் ஆதரவை ஈட்டித்தருவதில் வெற்றி பெற்றார். அதனால் இறையாண்மை தீவிரவாத சிந்தனை ஓரம் கட்டப்பட்டு, குடிமைச் சமூக அரசியல் முதன்மையடைந்து, நாட்டின் விடுதலையில் முக்கிய பங்கு வகித்தது. அதனால்தான் குடிமைச் சமூக அரசியலே தேசிய அரசியலாக இருந்தது. இன்று வரை ஆங்கில மொழி ஊடகங்களும், அறிவு ஜீவிகளும் இந்த அரசியலையே நம்புகிறார்கள்.  

அரசியல் முக்கோணம்: தேசிய குடிமைச் சமூக அரசியல், மாநில வெகுஜன முரண் அரசியல், தேசிய இறையாண்மை பாசிச அரசியல்

காங்கிரஸின் குடிமைச்சமூக அரசியல், அதற்குப் பின்புலமாக காந்தியின் வெகுஜன ஈர்ப்பு அரசியலுக்கு மாற்றாக தமிழ்நாட்டில்தான் திராவிட பண்பாட்டு விழிப்புணர்வு, சமஸ்கிருத, பார்ப்பனீய எதிர்ப்பு சிந்தனை மரபுகள், பார்ப்பனரல்லாதோர் இயக்கம் ஆகியவற்றின் தொடச்சியாக சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகியவை ஒரு வெகுஜன முரண் அரசியலை கட்டமைத்தன. இதன் காரணமாக இந்தியக் குடியரசு உதயமாவதற்கு சில மாதங்களுக்கு முன்னதாகவே திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிவிட்டது.

நாளாவட்டத்தில், தேர்தல்கள் நடக்க, நடக்க, அனைத்து மாநிலங்களிலும் வெகுஜன பங்கேற்பு பல்வேறு முரண் அரசியல் வடிவங்களை உருவாக்கியது. இது காங்கிரஸ் என்ற தேசியக் கட்சிக்குள்ளேயே பல முரண்களை உருவாக்கிக் கொண்டு இருந்தது. மாநிலங்களில் அரசியல் உணர்வு மாநில மொழியிலேயே வடிவம் பெற்றதால், தேசிய அளவிலான ஆங்கில மொழி குடிமைச் சமூக அரசியலுக்கு மாநில முரண் அரசியலை கையாள்வது சவாலாக இருந்தது.

ஒரு கூட்டுக் குடும்பத்தில் சிறுவர்களாக பத்து, பதினைந்து பேர் இருக்கும்போது இணைந்து செயல்படுவது சிக்கலாக இருக்காது. அனைவரும் வளர்ந்து பெரியவர்களாகிவிட்டால் நிச்சயம் அவர்கள் சுயேச்சையாக இருக்கவே விரும்புவார்கள். குடும்ப சொத்து, வருமானத்தைப் பகிர்ந்துகொண்டாலும், அவரவர்கள் தனித்தனியாக சமைத்துச் சாப்பிடவும், அவர்கள் பிள்ளைகளை அவரவர் விருப்பம்போல வளர்க்கவுமே விரும்புவார்கள்.

அதுபோல தேர்தல்கள் மூலம் மக்களாட்சி அணி சேர்க்கைகள் பெருகியபோது, சாமானியர்களின் பங்கேற்பு அதிகரித்தபோது, மாநில முரண் அரசியல்களே தேர்தல்களை தீர்மானிக்கும் ஆற்றலைப் பெற்றன. இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி காலத்தில் காங்கிரஸ் இந்த மாநில அரசியல் தனித்துவங்களைக் கட்டுப்படுத்த முனைந்தாலும், அதன் பின்னர் காங்கிரஸ் கட்சி பல மாநிலக் கட்சிகளின் தோற்றுவாயாக மாறவே செய்தது. மண்டல் கமிஷன் பரிந்துரைகள் நடைமுறைக்கு வந்தவுடன், பிற்படுத்தப்பட்டோரின் அரசியல் அணி சேர்க்கை, தலித் அணி சேர்க்கைகள் ஆகியவை மாநில அரசியலை பெருமளவு முதன்மைப்படுத்தின.

one country one election Rajan Kurai

எழுந்தது இறுதி முரண்பாடு: பார்ப்பனீய இறையாண்மைவாத அரசியல்

காங்கிரஸின் (குடிமைச்சமூக அரசியல்+வெகுஜன ஈர்ப்பு அரசியல்) சமன்பாட்டினால் ஓரம் கட்டப்பட்டிருந்த பார்ப்பனீய இறையாண்மைவாத அரசியல், மாநில முரண் அரசியல் எழுச்சியால் காங்கிரஸ் பலவீனப்பட்டபோது, புதிய தேசபக்தி சொல்லாடலை, வல்லரசு சொல்லாடலைக் கட்டவிழ்த்துவிட்டு பாரதீய ஜனதா கட்சியாக அரசியல் எழுச்சி கண்டது. மாநில பிற்படுத்தப்பட்டோர் முரண் அரசியல் எழுச்சியைக் கண்டு அஞ்சிய குடிமைச் சமூகம், மத்தியதர, உயர் மத்தியதர வர்க்கம் பாஜக பின்னால் பதுங்கியது. சர்வதேச அளவில் உருவான இஸ்லாமிய தீவிரவாதம், அதன்மீதான விலக்கத்தைப் பயன்படுத்தி இந்து மத அடையாளவாதம், ராமர் கோயில், இந்துத்துவம் என தன் பழைய கருத்தியல் ஆயுதங்களை சாணை பிடித்துக் கூர்தீட்டி, வலதுசாரி முதலீட்டிய சக்திகளின் ஆசியுடன் ஆட்சியைப் பிடித்தது பாரதீய ஜனதா கட்சி.

காங்கிரஸின் குடிமைச்சமூக ஆதரவைக் கையகப்படுத்துவதில் பாஜக-வுக்குக் கிடைத்த வெற்றி, மாநில முரண் அரசியலை முறியடிக்க உதவவில்லை. ஆனால், நாம் மாநில முரண் அரசியல் என்று சொல்வது ஒன்றுக்கு மேற்பட்ட மாநில அணி சேர்க்கைகளைக் குறிப்பது என்பதால், சில பல மாநிலங்களில் மாநில அணி சேர்க்கைகளுடன் கூட்டுச் சேர்ந்தே ஆட்சியைப் பிடித்தது பாஜக. பீஹாரில், மகாராஷ்டிரத்தில்  மாநில சக்திகளின் உதவி அதற்கு இன்றியமையாததாக இருந்தது. அவற்றின் ஆதரவைப் பின்னால் இழந்தது. தமிழ்நாட்டில் மட்டும் அ.இ.அ.தி.மு.க-வை ஊன்றுகோலாக வைத்துள்ளது.  

தன் இந்து ராஷ்டிர பார்ப்பனீய இறையாண்மைக் கனவை அடைய, மாநில முரண் அரசியலின் வலிமை பாஜக-வுக்குப் பெரும் இடையூறாக உள்ளது. கூட்டாட்சி என்ற சொல்லே அதற்கு வேப்பங்காயாக கசப்பதற்குக் காரணம், அதற்கு குடிமைச் சமூகமும் பிடிக்காது, வெகுஜன முரண் அரசியலும் பிடிக்காது என்பதுதான். அதன் கனவு அனைத்தும் மீட்புவாத பேரரசுக் கனவுதான். அதற்காகத்தான் செங்கோலுக்கு பூஜை போட்டு நாடாளுமன்றத்தில் வைத்தது.

ஒரே நேர தேர்தல் என்பது மாநில முரண் அரசியலை பலவீனப்படுத்தவே…

தன் பேரரசுக் கனவை செயல்படுத்தும் விபரீத நோக்கமே ஒரே நேர தேர்தல் எனலாம். எப்படியாவது மாநில தேர்தல்களின் முக்கியத்துவத்தைக் குறைத்துவிட்டால், மாநில முரண் அரசியலை வலுவிழக்கச் செய்யலாம். பிற்படுத்த மக்கள், தலித் தொகுதிகள், சாமானியர்கள் அரசியல் செயலூக்கத்தை மட்டுப்படுத்திவிடலாம் என்ற பேராசை.

தன்னுடைய பிரம்மாண்டமான பணபலம், ஊடக ஆதிக்கம், பெருமுதலீட்டிய துணையுடன், ஒன்றிய  நாடாளுமன்றத் தேர்தலின் துணை நிகழ்வாக மாநிலத் தேர்தல்களை மாற்றிவிட்டால், காலப்போக்கில் மாநிலத் தேர்தல்கள் தனித்துவம் சீர்குலைந்துவிடும். அப்போது ஒற்றை தேசியத் தலைவரின் பிம்பத்தைக் காட்டி தன் பேரரசுக் கனவை நினைவாக்கிக் கொள்ளலாம் என மனப்பால் குடிக்கிறது பாஜக.

அதன் போதாத காலம் தெற்கிலிருந்து எழும் சூரியன் அதன் கனவையும், உறக்கத்தையும் கலைக்கிறது. எழுகிறது வரலாறு காணாத இந்தியா கூட்டணி

கட்டுரையாளர் குறிப்பு:

one country one election Rajan Kurai

ராஜன் குறை கிருஷ்ணன் – பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com

ஆசிய கோப்பை: இந்தியா – நேபாளம் மோதல்!

10 ஆண்டுகளாக கள்ளச்சந்தையில் மது விற்பனை – டிபன் கடை அமைத்து கொடுத்த போலீஸார்!

+1
0
+1
0
+1
0
+1
4
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *