ஆளுக்கு ஒரு கார்… அறிவாலயம் போகணும் வாங்க… பொன்முடி அதிரடி உத்தரவு!

Published On:

| By Aara

விழுப்புரம் தெற்கு மாவட்டத்தில் இருந்து விழுப்புரம், வானூர் ஆகிய தொகுதிகளை உள்ளடக்கி விழுப்புரம் மத்திய மாவட்டமாக அறிவித்து அதன் மாவட்ட பொறுப்பாளராக டாக்டர் லட்சுமணனை நியமித்தார் திமுக தலைவர் ஸ்டாலின். car per person ponmudi

கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி வெளியான இந்த அறிவிப்புக்கு எதிராக திமுக துணை பொதுச்செயலாளரும் அமைச்சருமான பொன்முடி கடுமையாக ரியாக்ட் செய்து வருகிறார்.

விழுப்புரம், வானூர், விக்கிரவாண்டி, திருக்கோவலூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகள் அடங்கிய விழுப்புரம் தெற்கு மாவட்டம் பொன்முடியின் மகன் முன்னாள் எம்பி டாக்டர் கௌதம சிகாமணி கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால், அதிலிருந்து மாவட்ட தலைநகரான கலைஞர் அறிவாலயம் அடங்கிய விழுப்புரம், வானூர் ஆகிய தொகுதிகளை பறித்துக் கொண்டதால் பொன்முடி ஆவேசம் அடைந்துள்ளார்.

இது குறித்து நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து தனது வேதனையை ஆதங்கத்தை தெரிவித்தவர் உடனடியாக புறப்பட்டு விழுப்புரம் வந்து விட்டார். இன்று (பிப்ரவரி 15) மாலை நான்கு மணிக்கு புதிய மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் லட்சுமணன் விழுப்புரத்துக்கு வருகிற நிலையில்…

இதுவரை இருந்த விழுப்புரம் தெற்கு மாவட்ட நிர்வாகிகள் யாரும் லட்சுமணனை வரவேற்க செல்லக்கூடாது என உத்தரவிட்டுள்ளார் பொன்முடி.

அது மட்டுமல்ல, இன்று காலை முதல் பொன்முடியின் உதவியாளர் இளந்திரையன், விழுப்புரம், வானூர், விக்கிரவாண்டி, திருக்கோவிலூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட ஒன்றிய, நகர செயலாளர்கள், மாநகர நிர்வாகிகள், திமுகவின் உள்ளாட்சி தலைவர்கள் ஆகிய ஒவ்வொருவருக்கும் போன் போட்டு..

‘விழுப்புரத்தை அமைச்சரிடம் இருந்து பறித்து செல்ல விடக்கூடாது. எனவே நீங்க ஒவ்வொருத்தரும் ஆதரவாளர்களோடு கார்களில் அறிவாலயம் நோக்கி புறப்படணும். பகல் விழுப்புரத்திலிருந்து கிளம்பிடனும்’ என்று இன்று காலை முதல் ஃபோன் பேசி வருகிறார். car per person ponmudi

இதனால் விழுப்புரம் மாவட்ட திமுகவில் அடுத்து என்ன நடக்குமோ என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share