அ. குமரேசன்
ஒரு நாகரிகம் கருதி விளக்கங்களை ஒப்புக்கொள்வதாக வைத்துக்கொள்வோம். தமிழ் வாழ்த்துப் பாடலில் “திராவிட நல் திருநாடு” என்ற வரி விடுபட்டது ஆளுநருக்குத் தொடர்பில்லை என்று அவரது செயலர் எக்ஸ் தளத்தில் விளக்கம் வெளியிட்டுள்ளார்.
நிகழ்ச்சியில் பாடுகிறபோது கவனப் பிசகாக அந்த வரி விடுபட்டுவிட்டது எனக்கூறி தூர்தர்ஷன் நிர்வாகம் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. (அந்த அறிக்கை தேதியோ கையெழுத்தோ இல்லாமல் வந்திருப்பதாக ‘தினமணி’ செய்தி கூறுகிறது. தமிழ்ச்சமூகத்திடம் கோரும் மன்னிப்பை விடவும், ஆளுநரைக் காப்பாற்றும் பதற்றமே மேலோங்கியுள்ளது என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. நிர்வாகம் இதற்கெல்லாம் விளக்கம் அளிக்கிறதா என்று பார்ப்போம்.)
அந்த வரி பாடப்படாதற்குத் தமிழகத்தில் பேரலையாகக் கண்டனம் எழுந்தது. முதலமைச்சர் அது தமிழகத்தின் சட்டத்தை மீறும் செயல் என்று கண்டித்ததுடன், ஆளுநரை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பல்வேறு இயக்கங்களும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கின்றன.
இந்த எதிர்ப்புக்கு ஒரு வரலாறு இருக்கிறது. அண்மைக் காலத்தில் தொடர்ச்சியாக நடந்து வந்துள்ள நிகழ்வுகளோடு அந்த வரலாறு இணைந்திருக்கிறது. திராவிடம் என்ற கோட்பாட்டின் மீது அசூயை, மக்களைப் பாகுபடுத்தும் சனாதானத்தை நாட்டின் பாரம்பரியம் என்று நிறுவ முயலும் வன்மம், இன்று இந்தித் திணிப்போடு கலந்திருக்கும் மதவாத அரசியல், தமிழ் மண்ணில் இந்தக் கருத்துகளை வேரூன்றச் செய்வதற்கு அதிகாரப் பின்னணியோடு செய்யப்படும் முயற்சிகள் எல்லாமே ஒன்றோடொன்று பிணைந்திருக்கின்றன. அதன் தொடர்ச்சியாகவே திரும்பத் திரும்ப ஏதேனும் சர்ச்சைகள் கிளப்பப்படுகின்றன.
தமிழ்ப்பாடலின் சிறப்பு
கவனச் சிதறலால் ஏற்பட்ட பிழை என்று அறிக்கையில் கூறப்பட்டிருப்பதை ஏற்க இயலுமா? தமிழ்ப்பாடல்களில் சிறப்பே, அவற்றின் எதுகை மோனை அழகோடு பாடிப் பழகிவிட்டால், தூக்கத்திலிருந்து திடீரென எழுப்பிப் பாடச் சொன்னால் கூட எந்த வரியும் விட்டுப்போகாமல் பாட முடியும் என்பதுதான். எப்போதோ கேட்டு ரசித்து மறந்துபோன ஒரு பாடலை இப்போது கேட்கிறபோது நம் உதடுகள் சேர்ந்து பிழையின்றிப் பாடுவது இந்தச் சிறப்பினால்தான்.
தமிழ் வாழ்த்துப் பாடலையே எடுத்துக்கொள்வோமே. “நீராரும் கடலுடுத்த” என்று பாடத் தொடங்கிவிட்டால் அடுத்து “நிலமடந்தைக் கெழிலொழுகும்” என்று பின்தொடர்ந்து வந்துவிடும். அதற்கடுத்த வரியாக “சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்“ என்று வரிசைக்கு வரும். அதைத் தொடர்ந்து “தெக்கணமும் அதில் சிறந்த திராவிட நல் திருநாடும்” என நாக்கு தானே அசைந்துவிடும். “தக்க சிறு பிறை நுதலும் தணித்த நறுந் திலகமுமே, அத்திலக வாசனை போல் அனைத்துலகும் இன்பமுற, எத்திசையும் புகழ் மணக்க இருந்த பெரும் தமிழணங்கே, தமிழணங்கே, உன் சீரிளமைத் திறம் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமே, வாழ்த்துதுமே, வாழ்த்துதுமே!,” என்ற வரிகள் இதோ வந்துவிட்டோம் என்று சேர்ந்துகொள்ளும். எதுகை மோனை இலக்கணத்தோடு இயற்றப்படும் எந்த மொழிப் பாடலுக்கும் இதே திறன் உண்டு.
ஆகவே, பாடலை மனப்பாடம் செய்து பாடுகிறபோது இந்த வரி மட்டும் கவனச் சிதறலில் விடுபட்டுவிட்டது என்று விளக்கமளிப்பதை எப்படி நம்புவது? நிர்வாகத்திற்கு எங்கேயிருந்து எப்படிப்பட்ட நிர்ப்பந்தம் வந்ததோ என்று தேநீர்க்கடையில் கூட வாடிக்கையாளர்கள் பேசுவதைக் கேட்க முடிந்தது.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகம் 1967ல் முதன் முறையாக ஆட்சிக்கு வந்திருந்த நிலையில் அரசு நிகழ்ச்சிகளிலும் பள்ளிகள் கல்லூரிகளிலும் பாடவென்று முதலமைச்சர் அண்ணாவால் இந்தப் பாடல் தேர்வு செய்யப்பட்டிருந்தது. திடீரென 1969ல் அவர் காலமாகிவிட, பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்ற கலைஞர் அரசால் 1970ல் மாநில அரசின் பாடலாக அறிவிக்கப்பட்டது.
மூலப்பாடலில் “ஆரியம் போல் உலக வழக்கொழிந்து சிதையா உன்” என்ற ஒரு வரி இருந்தது. மற்ற மொழிகளை ஏன் சாட வேண்டும் என்ற உயரிய சிந்தனையோடு அதுவும், வேறு சில வரிகளும் நீக்கப்பட்டு தமிழை வாழ்த்தும் வரி எடுத்துக் கொள்ளப்பட்டு தற்போதைய தமிழ்வாழ்த்துப் பாடல் முடிவானது. இப்படி சில வரிகள் கவனச்சிதறலாக அல்லாமல் திட்டமிட்டே நீக்கப்பட்டாலும் முழுமையான பொருளைப் புரிந்துகொண்டு தமிழைப் போற்றிடும் வகையில் பாடலை எழுதியிருந்தார் மனோன்மணியம் சுந்தரனார்.
குறிப்பிட்ட வரி வேண்டாம் என தள்ளப்பட்டதில் இருந்த பெருந்தன்மையும், பிற மொழிகளை மதிக்கும் பண்பும், திராவிடத்தையும் தமிழையும் தள்ள முயல்கிறவர்களுக்கு இல்லையே ஏன்? தேசியவாதம் பேசுகிறவர்கள் இந்தியா என்று வந்த பிறகு (அவர்களது பாஷையில் சொல்வதானால் பாரதம் என்று வந்த பிறகு) திராவிட நாடு என்று ஏன் பிரித்துச் சொல்ல வேண்டும் என்று கேட்கிறார்கள்
.விவாதங்களின்போது, “தேசத்தின் வரைபடத்தில் திராவிடம் என்ற ஏரியா எங்கே இருக்கிறது,” என்றும் கேட்கிறார்கள். பிரிவினை கூடாது என்ற நல்ல நோக்கத்திலா இப்படிக் கேட்கிறார்கள்? திராவிடம் என்ற சொல்லில் உள்ள சித்தாந்தத்தையும் அரசியலையும் வரலாற்றையும் ஏற்க மறுக்கிற குறுகிய எண்ணத்தில்தான் இவ்வாறு கேட்கப்படுகிறது.
கோட்பாட்டுப் பரிணாமம்
ஆம், திராவிடம் என்பது வரலாற்றில் நிலப்பகுதியைக் குறிப்பிடுவதாகவும் அங்கு வாழ்ந்த மக்களை (அவர்கள் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம் என்று வேவ்வேறு மொழிகள் பேசினாலும்) அடையாளப்படுத்துவதாகவும் இருந்திருக்கிறது.
சுயமரியாதை, சாதி மறுப்பு, சமூகநீதி, பெண்ணுரிமை, பகுத்தறிவு ஆகிய இலக்குகளுக்கான இயக்கங்களோடு இணைந்தது அந்தச் சொல். வரலாற்றின் இன்றைய வளர்ச்சி நிலையில், திராவிடம் என்ற சொல் நிலப்பரப்பையல்ல, இன அடையாளத்தை மட்டுமல்ல ஒரு மாற்றத்தை முன்னிலைப்படுத்தும் கருத்தியலாகப் பரிணமித்திருக்கிறது. அரசியல் களத்தில் மாநில சுயாட்சி, மாநில மொழிகளின் உரிமை, பெண்களின் எழுச்சிக்கான முனைப்புகள், அனைவருக்குமான கல்வி, அரசின் மதச்சார்பின்மை, மக்களின் நல்லிணக்கம், பண்பாட்டுப் பாதுகாப்பு, கருத்துச் சுதந்திரம் ஆகியவற்றை அடையாளப்படுத்தும் சொல்லாக உருவெடுத்திருக்கிறது.
அந்தக் காரணத்திற்காகத்தான், திமுக-வுடன் பல்வேறு நிலைப்பாடுகளில் கருத்து வேறுபாடுகள் உள்ள கட்சிகளும், இந்தப் பிரச்சினையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எழுப்பிய கண்டனத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுக்கின்றன. அதிமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்திருப்பதில் திராவிடத்தின் இன்றைய கருத்தியலோடு உள்ள உடன்பாட்டிற்கு மையமான இடமிருக்கிறது.
திராவிடம் என்ற சொல் எதையெல்லாம் அடையாளப்படுத்துகிறது என்ற அதே காரணத்திற்காகத்தான், அதன் மீதான பகைமை கட்டமைக்கப்படுகிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் உள்ளிட்ட ஒற்றை ஆதிக்க மோகத்திற்கும், அதை நோக்கிய இந்தித் திணிப்பு நடவடிக்கைகளுக்கும், அதற்கான தளமாக்கப்படும் மதவாத அரசியலுக்கும், அதிகாரக் குவிப்புகளுக்கும் எதிரான பொருளைக் கொண்டிருப்பதால்தான் திராவிடத்தின் மீது வெறுப்பு உமிழப்படுகிறது.
அந்த ஆதிக்க நோக்கத்திற்கு ஒரு நெடுங்காலப் பயணம் இருந்து வந்திருப்பதால் இன்றைய தாக்குதல்களைத் தற்செயலானதாகப் பார்க்க முடியவில்லை. இந்தி மாதம் கொண்டாடிய தூர்தர்ஷன் நிறுவனத்தின் சின்னம் கடந்த ஏப்ரல் மாதத்தில் சிவப்பு நிறத்திலிருந்து காவி நிறத்திற்கு மாற்றப்பட்டதை நினைவுகூர்ந்தால் தற்செயல்களின் தொடர்ச்சி புரியும்.
இப்படிப்பட்ட தற்செயல்கள் இத்தோடு நிற்கப்போவதில்லை. எதிர்த்துக் கேட்டுத் தடுக்கும் மக்களின் விழிப்பும் இத்தோடு நின்றுவிடாது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
நெல்லை: நீட் கோச்சிங் சென்டரில் மாணவர்களுக்கு அடி, உதை… சமூக நலத்துறை விசாரணை!
உங்கள் நாட்டுக்கு போங்கள்… தமிழரிடம் கனடிய பெண் இனவெறி பேச்சு!