ஜம்மு, காஷ்மீர் ஒன்றிய பிரதேசத்தின் அடுத்த முதலமைச்சர் ஓமர் அப்துல்லா என்று தேசிய மாநாட்டு கட்சியின் தலைமை இன்று (அக்டோபர் 8) அறிவித்துள்ளது
90 சட்டமன்றத் தொகுதிகள் உள்ள ஜம்மு காஷ்மீரில், ஆட்சி அமைக்க 46 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்கிற நிலையில், தேசிய மாநாடு – காங்கிரஸ் கூட்டணி 47 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த நிலையில், கந்தர்பால் மற்றும் பட்காம் தொகுதிகளில் போட்டியிட்ட தேசிய மாநாடு கட்சியின் துணைத் தலைவரும் அக்கட்சித் தலைவரான ஃபரூக் அப்துல்லாவின் மகனுமான ஓமர் அப்துல்லா, இரண்டு தொகுதிகளிலுமே வெற்றிபெற்றுள்ளார். பட்காம்மில் 18,485 வாக்குகள் வித்தியாசத்திலும், கந்தர்பால் தொகுதியில் 10,574 வாக்குகள் வித்தியாசத்திலும் அவர் வெற்றிபெற்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து அவர்தான் ஜம்மு காஷ்மீரின் அடுத்த முதல்வர் என்று தேசிய மாநாடு கட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு முன் இவர் 2009 – 2015 காலகட்டத்தில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவி வகித்தார்.
இதற்கிடையில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் மொஹமத் யூசுஃப் தாரிகாமி குல்காம் தொகுதியில் 7,838 வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். அவர் தொடர்ந்து ஐந்தாவது முறையாக இந்த தொகுதியில் வெற்றிபெற்றுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் ஒன்றிய பிரதேசத்தின் பாஜக தலைவரான ரவீந்தர் ரைனா, தேசிய மாநாடு கட்சியின் சுரிந்தர் குமார் சௌதரியிடம் 7,819 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இதனையடுத்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்த வெற்றியின் மூலம் 10 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய மாநாடு கட்சி ஜம்மு காஷ்மீரில் ஆட்சியமைக்கவுள்ளது.
–அப்துல் ரஹ்மான்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
மழை காலத்தில் மின் தடைகள் : அமைச்சர் செந்தில் பாலாஜி போட்ட உத்தரவு!
டிரைவருக்கு சம்பளம் கொடுக்க கூட வழியில்லாமல் அமிதாப் தவித்தார் – ரஜினிகாந்த் சொன்ன தகவல்கள்!
பதவி பறிப்பு கவலையில்லை : தளவாய் சுந்தரம்