ஓமந்தூரார் டு காவேரி:  செந்தில் பாலாஜிக்கு நடந்தது என்ன?

அரசியல்

ஜூன் 15 இரவு 9.30… சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் இருந்து ’அமைச்சர்’ செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு பாதுகாப்பு வண்டிகள் புடைசூழ  அழைத்துச் செல்லப்பட்டார்.  சென்னை உயர் நீதிமன்றம் ஜூன் 15 ஆம் தேதி இதற்கான அனுமதியளித்தவுடன் காவேரி மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டிருக்கிறார் செந்தில் பாலாஜி

ஜூன் 14 ஆம் தேதி அதிகாலை செந்தில்பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதில் இருந்து, அவர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டது வரை நடந்தது என்ன?

அணி வகுத்த அமைச்சர்கள்!

செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் கைது செய்ததும் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தகவல் கிடைத்ததும் அந்த அதிகாலையிலேயே அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு விரைந்து சென்றார்.

அவரோடு அமைச்சர்கள் எ.வ.வேலு, சேகர்பாபு, மா.சுப்பிரமணியன், ரகுபதி. கே.என்.நேரு, பொன்முடி , அன்பில்  மகேஷ், மெய்யநாதன், கீதாஜீவன் என்று ஒவ்வொரு அமைச்சராய் மருத்துவமனைக்கு படையெடுத்தனர்.  முதலமைச்சரின் மாப்பிள்ளை சபரீசனும் வந்து சென்றார்.

உதயநிதி ஸ்டாலின்  அதிகாலை வந்துவிட்டு திரும்பியவர், மீண்டும் காலையில் வந்தார். அன்று காலை 10 மணியளவில் முதலமைச்சர் ஸ்டாலின் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு வந்து செந்தில்பாலாஜியை சந்தித்துவிட்டுச் சென்றார். அதன் பிறகு மருத்துவமனையிலேயே அமைச்சர்களோடு உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். 

What happened to Senthilbalaji

இஎஸ்ஐ மருத்துவர்களின் கருத்தும் எழிலனின் பதிலும்

அடுத்து என்ன செய்யலாம் என்பது பற்றி உதயநிதி அமைச்சர்களோடு பேசிக் கொண்டிருந்தபோது  அங்கே  ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரான டாக்டர் எழிலன் சென்றிருக்கிறார்.  ‘வாங்க எம்.எல்.ஏ.’ என்று உதயநிதி கூற, ‘நான் எம்.எல்.ஏ.வா மட்டுமில்ல அவரோட (செந்தில்பாலாஜியுடைய)  டாக்டராகவும் வந்திருக்கேன்’ என்று கூறியுள்ளார் எழிலன்.

இதேநேரம் செந்தில்பாலாஜியின் உடல் நிலையை பற்றி மத்திய அரசின் இ எஸ் ஐ மருத்துவமனை டாக்டர்கள் நால்வர் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது  செந்தில் பாலாஜியின் குடும்ப மருத்துவரான டாக்டர் எழிலன் அங்கே சென்றார். அவர்களிடம் சில நிமிடங்கள் கலந்துரையாடினார். 

What happened to Senthilbalaji

அப்போது  இஎஸ்ஐ மருத்துவமனையின் மூன்று டாக்டர்கள்,  ‘ 3 இடத்துல பிளாக் இருக்கு. அதனால பைபாஸ் பண்ணலாம்’ என்று சொல்லியிருக்கிறார்கள். இன்னொரு டாக்டர், ‘இதற்கு பைபாஸ் தேவையில்லையே. ஸ்டன்ட் வச்சிப் பார்க்கலாம். அதன் பிறகு டெல்லிக்கு அழைத்துச் சென்று தேவைப்பட்டால் எய்ம்ஸ் மருத்துவமனையில் பைபாஸ் பண்ணிக் கொள்ளலாம்’ என்று தெரிவித்தார்.

அப்போது டாக்டர் எழிலன், ‘இந்த மாதிரியான கிரிடிக்கலான சூழல்ல  இந்த மாதிரி சொல்றீங்களே… நாமெல்லாம் பேசிக்கலி டாக்டர்ஸ். முதலில் பேஷன்ட்டின் பாதுகாப்புதான் முக்கியம். இந்த நிலைமையில அவரை எப்படி டெல்லி அழைச்சுக்கிட்டு போக முடியும்? இம்பாசிபிள்’ என்று சொல்லியிருக்கிறார்.

ஆனாலும் அந்த ஒரு டாக்டர்,  ‘டெல்லிக்கு கூட்டிக்கிட்டு போய் இன்னும் பெட்டர் ட்ரீட்மென்ட்  கொடுக்கலாம்’ என்று தனது நிலைப்பாட்டில் தொடர்ந்து உறுதிகாட்டியிருக்கிறார்.

ஓமந்தூராரிலேயே சிகிச்சை கொடுக்கலாமே?  முதலில் கேட்ட ஸ்டாலின் 

What happened to Senthilbalaji

அப்போது செந்தில்பாலாஜியின் குடும்பத்தினர், ‘அப்பல்லோ கொண்டு போயிடலாங்க’ என்று எழிலனிடம் சொல்கிறார்கள்.

இந்த ஆலோசனை நடந்துகொண்டிருக்கும்போது முதலமைச்சர் ஸ்டாலினிடம் இருந்து டாக்டர் எழிலனுக்கு அலைபேசி அழைப்பு வருகிறது. அப்போது முதலமைச்சருடன் போனில் பேசிய எழிலன், அங்கே நடந்த  விவாதங்களைப் பற்றி ஸ்டாலினிடம் தெரியப்படுத்துகிறார்.

அதையெல்லாம் கேட்டுக் கொண்ட ஸ்டாலின், ‘ஏன் நம்ம ஓமந்தூரார் மருத்துவமனை நல்லாதானே இருக்கு. அங்கயே வச்சிப் பாத்துக்கலாமே?’ என்று எழிலனிடம் கேட்கிறார். இந்த உரையாடலின் முடிவில், ‘சரி…நீங்க உடனே அறிவாலயம் வாங்க’ என்று எழிலனை அழைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

அடுத்த அரைமணி நேரத்தில் டாக்டர் எழிலன் அறிவாலயத்துக்கு சென்றார். அங்கே திமுகவின் சீனியர்களோடு முதலமைச்சர் ஸ்டாலின் அமர்ந்திருந்தார். அப்போது டாக்டர் எழிலன் அவர்களிடம் சில தகவல்களை சொல்லியிருக்கிறார்.

‘செந்தில்பாலாஜியை  அமலாக்கத்துறை அதிகாரிகள் கடுமையாதான் ஹேண்டில் பண்ணியிருக்காங்க. அடிச்சிருக்கலாம்னு தோணுது. காதுக்கு கீழ செகப்பா இருக்கு.  அவர் ரொம்ப அதிர்ச்சியா இருக்காரு’ என்று செந்தில்பாலாஜியின் நிலையை  ஸ்டாலின் உள்ளிட்டவர்களுடன் பகிர்ந்துகொண்டார் டாக்டர் எழிலன்.

அதன் பின் மருத்துவமனை மாற்றம் பற்றிய பேச்சு வந்தபோது,  முதலமைச்சர் ஸ்டாலின் மீண்டும், ‘ ஓமந்தூரார் மருத்துவமனையே  நல்ல மருத்துவமனைதானே… அரசு மருத்துவமனையை விட்டுட்டு தனியார் மருத்துவமனைக்கு ஏன் போகணும்னு கேள்வி எழுமே. அங்கேயே பாலாஜிக்கு சிகிச்சை கொடுக்கலாமே?’ என்று எழிலனிடம் கேட்டிருக்கிறார்.

முதல் மருத்துவக் குறிப்பு…அதிர்ந்த முதல்வர் 

அப்போது எழிலன் மேலும் சில தகவல்களை முதலமைச்சரிடம் தெரிவித்தார். அதாவது அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படும் ஒவ்வொரு நோயாளிக்கும் அவர்கள் மருத்துவமனைக்குள் வரும்போது எந்த நிலையில் இருந்தார்கள் என்று டாக்டர்கள் முதல் குறிப்பு எழுதுவார்கள். 

அதிலும் குறிப்பாக இதுபோன்ற அரசியல் பிரமுகர்கள்  மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது மருத்துவர்கள் எழுதும் முதல் குறிப்பு என்பது மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகிறது. ஆனால் செந்தில்பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரது நிலை என்ன என்ற மருத்துவர்களின் குறிப்பு எழுதப்படவில்லை.  இந்தத் தகவலைக் கேட்டு முதலமைச்சர் அதிர்ச்சி அடைந்தார்.

காவேரிக்கு மாற்ற ஆலோசனை! 

What happened to Senthilbalaji

அதன் பிறகு மூத்த வழக்கறிஞரும்  எம்பியுமான என்.ஆர். இளங்கோவிடம் ஆலோசனை நடத்தினார். மருத்துவமனை மாற்றுவது பற்றி சட்ட ரீதியான விஷயங்களை இளங்கோ முதல்வரிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

‘ நாம நீதிமன்றத்தில் வேறு மருத்துவமனைக்கு மாற்றணும் என்று பொதுவாக கோரிக்கை வைத்தால் அவங்க மத்திய அரசோட ஆஸ்பத்திரிக்கு அனுப்பறோம் என்று சொல்லுவார்கள். நாம காவேரி ஆஸ்பத்திரிக்கு மாற்றணும்னு குறிப்பிட்டு கோரிக்கை வைப்போம்’ என்று தெரிவித்தார் என்.ஆர். இளங்கோ. 

உடனே எழிலனை அழைத்த முதலமைச்சர் ஸ்டாலின்…  ‘காவேரி ஆஸ்பிடல் டைரக்டர் அரவிந்தனுக்கு போன் போட்டு கேளுங்க எழிலன்’ என்கிறார்.  அப்போதே  காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனரும், செயல் இயக்குனருமான அரவிந்தனுக்கு போன் போட்ட  எழிலன் இதுகுறித்துப் பேசுகிறார்.  செந்தில்பாலாஜிக்கு சிகிச்சையளிக்க தயார் என்று அரவிந்தன் டாக்டர் எழிலனிடம் தெரிவித்தார். 

இதன் பிறகுதான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பெட்டிஷனில் காவேரி மருத்துவமனை பெயரையே குறிப்பிட்டார்கள். 

இதன் பிறகு சென்னை உயர் நீதிமன்றத்தில் செந்தில்பாலாஜி தரப்பிலும் அமலாக்கத்துறை தரப்பிலும் வாதங்கள் வைக்கப்பட்டு நேற்று (ஜூன் 15) பிற்பகல் செந்தில்பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளிக்கலாம் என்று தீர்ப்பளித்தது உயர் நீதிமன்றம். இதையடுத்தே இரவு 9.15 மணிக்கு பலத்த பாதுகாப்போடு  ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்  செந்தில்பாலாஜி.

காவேரியில் தூங்கிய செந்தில்பாலாஜி 

ஜூன் 15 ஆம் தேதி காவேரி மருத்துவமனைக்கு வந்த பிறகுதான் கொஞ்சம் நிம்மதியாக உணரத் தொடங்கியிருக்கிறார் செந்தில்பாலாஜி. முதல் கட்ட பரிசோதனை செய்த காவேரி மருத்துவர்கள், செந்தில்பாலாஜிக்கும் தூக்கமே இல்லாததை அறிந்து தூங்க வைப்பதற்கான மருந்துகளை கொடுத்திருக்கிறார்கள். 

டிவி, பேப்பர் பார்த்தால் டென்ஷனாகும் 

ஜூன் 16 காலையில் நன்றாக தூங்கி எழுந்த செந்தில்பாலாஜி  டிவி பார்க்க வேண்டும், செய்தித் தாள்கள் பார்க்க வேண்டும் என்று மருத்துவர்களிடம் கேட்டிருக்கிறார். அதற்கு மருத்துவர்கள், ‘ஏற்கனவே நீங்க டென்ஷனா இருக்கீங்க. இப்போதைக்கு அதெல்லாம் உங்களுக்கு எதுவும் வேண்டாம்’ என்று அறிவுறுத்தியுள்ளார்கள்.

’நான் கொஞ்சம் வாக்கிங் போகணுமே’ என்று கேட்டிருக்கிறார் செந்தில்பாலாஜி. ஆனால்  அவரது அறையே பரந்து விரிந்திருக்கும் நிலையில் அறைக்குள்ளேயே கொஞ்ச நேரம் வாக்கிங் போகச் சொல்லியிருக்கிறார்கள் மருத்துவர்கள். வரும் புதன் கிழமை செந்தில் பாலாஜிக்கு இதய அறுவை சிகிச்சை செய்வதற்கான ஏற்பாடுகளில் இருக்கிறார்கள் காவேரி மருத்துவமனைக் குழுவினர்.

வேந்தன்

பாலியல் தொல்லை : குற்றவாளியான முன்னாள் டிஜிபி – வழக்கு கடந்து வந்த பாதை!

துறைமாற்றத்துக்கு ஆளுநர் ஒப்புதல் : செந்தில்பாலாஜி அமைச்சராக தொடர மறுப்பு!

+1
0
+1
1
+1
0
+1
3
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *