ஓமந்தூரார் மருத்துவமனை தலைமைச் செயலகமாக மாறுகிறதா என்ற கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதிலளித்துள்ளார்.
சென்னை அண்ணாசாலை வாலாஜா சாலை சந்திப்பில் ஓமந்தூரார் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இது திமுக ஆட்சிக் காலத்தில் புதிய தலைமை செயலகத்துக்காக 9,30,000 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டது.
ஆனால் 2011ல் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் தலைமைச் செயலகம் பழையபடி புனித ஜார்ஜ் கோட்டையிலேயே செயல்படும் என்றும், புதிய கட்டடம் மருத்துவமனையாகச் செயல்படும் என்றும் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
தொடர்ந்து 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியிலிருந்து, 2021ல் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தது. அப்போது முதல் புதிய தலைமைச் செயலகக் கட்டடம் தொடர்பான விவாதங்கள் எழுந்தன. ஓமந்தூரார் மருத்துவமனை கிண்டிக்கு மாற்றப்பட்டு அந்த கட்டடத்தில் தலைமைச் செயலகம் செயல்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதுதொடர்பாக நேற்று (மே 20) செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
“இந்த கட்டடம் தலைமைச் செயலகத்துக்காகக் கட்டப்பட்ட கட்டடம். கடந்த ஆட்சியில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக மருத்துவமனையாக மாற்றினார்கள்.
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பரந்த உள்ளத்தோடு, மருத்துவமனையான பிறகு அது மருத்துவமனையாகவே தொடரட்டும் என்று கூறினார்.
புதிய பல்வேறு பன்னோக்கு சிகிச்சைகளை இங்கு தொடங்கவும் உத்தரவிட்டு அதனைத் தொடங்கியும் வைத்துள்ளார்.
34 கோடி ரூபாய் மதிப்பிலான புற்றுநோய்க்குச் சிகிச்சை அளிக்கும் ரோபோட்டிக் கருவி ஒன்றை இந்த மருத்துவமனையில் தொடங்கி வைத்தார். இந்த கருவி இந்தியாவில் வேறு எந்த மருத்துவமனையிலும் இல்லை.
இப்படி மருத்துவத்தின் சிறப்புமிக்க கட்டமைப்புகளை இயக்கி வைத்துக் கொண்டிருக்கிறோம். இந்த கட்டிடத்தில் காலியாக உள்ள இடங்களை பயன்படுத்தத் தொடங்கவுள்ளோம்.
முன்னதாக 400 பேர் அளவுக்குத்தான் சிகிச்சைக்கு வந்துகொண்டிருக்கின்றனர். தற்போது 1000 பேர் வரை வந்து கொண்டிருக்கின்றனர். இந்த மருத்துவமனையில் இன்னும் கட்டமைப்பை உயர்த்துவோம்” என்று கூறினார்.
பிரியா