மக்களவை சபாநாயகர் பதவிக்காக இன்று (ஜூன் 26) நடைபெற்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான ஓம்பிர்லா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 24ஆம் தேதி தொடங்கியது. கடந்த 2 நாட்களாக தற்காலிக சபாநாயகர் பார்த்ருஹரி மகதப் முன்னிலையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள் பதவி ஏற்றனர்.
இந்த நிலையில் மக்களவை சபாநாயகர் பதவிக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக பாஜகவின் ஓம்பிர்லாவும், இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸின் கொடிக்குன்னில் சுரேஷும் போட்டியினர்.
இன்று நாடாளுமன்ற அவை நடவடிக்கை தொடங்கியதும், பாஜக தலைவரான பிரதமர் மோடி, 18வது மக்களவையின் சபாநாயகராக ஓம்பிர்லாவை தேர்ந்தெடுக்கும் தீர்மானத்தை முன்வைத்தார்.
தொடர்ந்து உத்தவ் தாக்கரே சிவசேனா (யுபிடி) எம்பி அரவிந்த் கன்பத் சாவந்த், சமாஜ்வாதி கட்சி எம்பி ஆனந்த் பதாரியா மற்றும் என்சிபி எம்பி சுப்ரியா சூலே, திமுக எம்.பி கனிமொழி ஆகியோர் அவை சபாநாயகராக கே.சுரேஷ் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தனர்.
பின்னர் நடைபெற்ற குரல் வாக்கெடுப்பில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரான ஓம்பிர்லா வெற்றி பெற்றதாக தற்காலிக சபாநாயகர் அறிவித்தார். இதன்மூலம் ஓம்பிர்லா இரண்டாவது முறையாக மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து வெற்றிபெற்ற ஓம் பிர்லாவுக்கு பிரதமர் மோடி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து இருவரும் அவரை சபாநாயகர் நாற்காலிக்கு அழைத்துச் சென்று அமர வைத்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கூட்டத்தொடர் முழுவதும் அதிமுகவினர் சஸ்பெண்ட் : அப்பாவு உத்தரவு!
சரிவில் தங்கம், வெள்ளி விலை! : மக்கள் மகிழ்ச்சி!