தளவாய் சுந்தரத்திற்கு மீண்டும் பொறுப்பு வழங்கிய எடப்பாடி

Published On:

| By christopher

Edappadi gives responsibility to Thalavai Sundaram again

ஆர்.எஸ்.எஸ் பேரணியை தொடங்கிவைத்ததன் காரணமாக அதிமுக கட்சி பொறுப்புகளிலிருந்து தற்காலிகமாக  விடுவிக்கப்பட்ட தளவாய் சுந்தரத்திற்கு மீண்டும் அதே பொறுப்புகள் வழங்கி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (நவம்பர் 18) அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுகவின் முக்கிய ஆளுமையாக அறியப்படுபவர் தளவாய் சுந்தரம். அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமானவர்.

அவர் அதிமுக அமைப்புச் செயலாளராகவும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளருமாக பதவி வகித்து வந்தார். எனினும் கட்சி நிர்வாகிகளுடன் அவர் இணக்கமாக செயல்படவில்லை என்று புகார் எழுந்தது.

இந்த நிலையில் தான் கடந்த அக்டோபர் 6ஆம் தேதி விஜயதசமியை முன்னிட்டு கன்னியாகுமரியில் தனது தொகுதிக்குட்பட்ட ஈசாந்திமங்கலத்தில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணியை தளவாய் சுந்தரம் கொடியசைத்து தொடங்கிவைத்த வீடியோ வெளியாகி சர்ச்சையானது.

‘பா.ஜ.க-வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை என நாம் அறிவித்திருக்கும் நிலையில், ஆர்.எஸ்.எஸ் பேரணியை அவர் எப்படி தொடங்கிவைக்கலாம்?’ எனக் கட்சிக்குள்ளேயே பலரும் தளவாய்க்கு எதிராக தலைமைக்கு புகார்களை அனுப்பினர்.

அதனையடுத்து அதிமுக கட்சி பொறுப்புகளிலிருந்து தளவாய் சுந்தரத்தை தற்காலிகமாக விடுவித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.

சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் விதமாக, அதிமுகவில் தற்போது கள ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், கன்னியாகுமரியில் மாவட்டச் செயலாளர் பணியிடம் காலியாக இருப்பது சரியல்ல என்ற பேச்சு அதிமுகவிற்குள் எழுந்தது.

இந்த நிலையில், தற்காலிகமாக விடுவிக்கப்பட்ட தளவாய் சுந்தரத்திற்கு 40 நாட்களுக்கு பிறகு மீண்டும் அதே பொறுப்புகள் வழங்கி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Image

அதில், “முன்னாள் அமைச்சரும், கன்னியாகுமரி தொகுதி கழக சட்டமன்ற உறுப்பினருமான என். தளவாய்சுந்தரம் கன்னியாகுமரியில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட காரணத்தால், அதுசம்பந்தமாக உரிய விளக்கம் கேட்டு, 8.10.2024 அன்று அவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்பட்டார்.

தளவாய்சுந்தரம் அந்நிகழ்வில் கலந்துகொண்டது சம்பந்தமாக வருத்தம் தெரிவித்து தலைமைக்கு விளக்கம் அளித்துள்ளார். இதனையடுத்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் பொறுப்பிலும், கன்னியாகுமரி கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பொறுப்பிலும் என். தளவாய்சுந்தரம் இன்று முதல் நியமிக்கப்படுகிறார். இவர்க்கு கழக உடன்பிறப்புகள் முழு ஒத்துழைப்பு நல்கிடக் கேட்டுக்கொள்கிறேன்” என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிறிஸ்டோபர் ஜெமா

6 பேர் கடத்தி கொலை முதல் என்.ஐ.ஏ விசாரணை வரை … என்ன நடக்கிறது மணிப்பூரில்?

’கூட்டணி இல்லை’ : தவெக அறிக்கைக்கு அதிமுக தலைவர்கள் ரியாக்சன்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel