அக்டோபர் 11 இல் மனித சங்கிலி: 9 கட்சிகள் கூட்டறிக்கை!

அரசியல்

தமிழகத்தில் அக்டோபர் 11 ஆம் தேதி சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடைபெறும் என்று 9 கட்சிகள் கூட்டாக தெரிவித்துள்ளன.

திராவிடர் கழகம், மதிமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், சிபிஎம், சிபிஐ, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் மனித சங்கிலி தொடர்பாக அறிக்கை விடப்பட்டு இருக்கிறது.

அதில், “காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 02 ஆம் தேதி சிபிஐ (எம்), சிபிஐ, விசிக கட்சிகளின் சார்பில் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி நடத்துவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வியக்கத்திற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும், பல்வேறு மக்கள் அமைப்புகளும் பேராதரவு நல்கியிருந்தன.

இச்சூழ்நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பு தடை செய்யப்பட்டதாலும், அக்டோபர் 02 ஆம் தேதி நடத்தப்படவிருந்த ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதாலும்,

சமூகத்தில் உருவாகியுள்ள பதற்றமான சட்டம்-ஒழுங்கு சூழலைக் காரணம் காட்டி நாம் நடத்தவிருந்த சமூக நல்லிணக்க மனித சங்கிலி நிகழ்வுக்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

மாநிலத்தில் நிலவும் சட்டம்- ஒழுங்கு நிலவரம் குறித்தும், அக்டோபர்-02 அன்று அனுமதி வழங்க இயலாமைக்குரிய காரணங்கள் குறித்தும் காவல்துறை அதிகாரிகள் விளக்கியதோடு,

மனித சங்கிலி நிகழ்ச்சியைத் தள்ளி வைக்கும்படி கேட்டுக் கொண்டதன் அடிப்படையில்,

ஆதரவு நல்கிய அனைத்துக் கட்சிகள் மற்றும் மக்கள் இயக்கங்களின் தலைவர்களோடு தொலைபேசியின் ஊடாகக் கலந்து பேசியதன் அடிப்படையில் சமூக நல்லிணக்க மனித சங்கிலி அறப்போர்,

எதிர்வரும் அக்டோபர் 11 ஆம் தேதி மாலை 4 மணிக்கு தமிழ்நாடு முழுவதும் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மதத்தின் அடிப்படையில் பகைமையை ஏற்படுத்தி, அமைதியை சீர்குலைக்க முயற்சிக்கும் பிரிவினைவாதிகளை இங்கு ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று மக்களிடையே தொடர்ந்து பரப்புரை மேற்கொள்ளவும்,

சமூக நல்லிணக்கத்தைப் பாதுகாக்கவுமான இந்த மனித சங்கிலி நிகழ்வில் அனைத்து சனநாயக சக்திகளும், பொதுமக்களும் பங்கேற்று அறப்போராட்டத்தை வெற்றிபெற வேண்டுமென அழைப்பு விடுக்கிறோம்” என்று 9 கட்சி நிர்வாகிகளும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இவர்களது மனித சங்கிலிப் போராட்டத்தில் பல்வேறு கட்சி மற்றும் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

முன்னதாக அக்டோபர் 2 ஆம் தேதி ஆர்.எஸ்.எஸ். தமிழகத்தின் ஐம்பது இடங்களில் ஊர்வலம் நடத்தத் திட்டமிட்ட நிலையில், அதே தேதியில் விடுதலை சிறுத்தைகள் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி அறிவித்தது.

இரு தரப்பு நிகழ்வுகளுக்கும் தமிழக அரசு அனுமதி மறுத்தது. ஆர்.எஸ்.எஸ் மீண்டும் நீதிமன்றம் சென்ற பிறகு ஊர்வலம் நவம்பர் 6 ஆம் தேதி நடக்க இருக்கும் நிலையில் அக்டோபர் 11 ஆம் தேதி ஒன்பது கட்சிகளும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலியை அறிவித்துள்ளன.

கலை.ரா

நடிகர் சங்கத்தில் இருந்து கே.பாக்யராஜ் நீக்கம்!

6 மாவட்டங்களில் நாளை கனமழை: மீனவர்களுக்கு எச்சரிக்கை!

+1
0
+1
2
+1
0
+1
2
+1
0
+1
0
+1
1

2 thoughts on “அக்டோபர் 11 இல் மனித சங்கிலி: 9 கட்சிகள் கூட்டறிக்கை!

  1. சமூக நல்லிணக்கம் என்பது இவர்கள் பார்வையில் யாருக்காக என்பது நாடறியுமே🧐

    1. மக்களின் மத ஒற்றுமையை பிளவுபடுத்தி கலவரத்தின் மூலம் மத வெறுப்பை தூண்டும் தீவிரவாத RSS க்கு எதிராகத்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *