“அதிமுக தலைமைக்கழகம் சீல் வைப்புக்கும் திமுகவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
வேலூரில் புதிதாக கட்டப்பட்ட பேருந்து நிலையம் கடந்த மாதம் 30ம் தேதி தமிழக முதல்வர் மு.கஸ்டாலினால் திறந்துவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அங்கு எஞ்சியிருந்த பணிகள் தற்போது முழுமை அடைந்துவிட்டதால் இன்று (ஜூலை 16) வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டன. இதற்கான விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “அதிமுக தலைமைக் கழகம் சீல் வைப்புக்கும் திமுகவுக்கும் எந்த சம்பந்தம் இல்லை. அந்த அலுவலகம் சீல் வைப்பு விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகிய இருவருமே எங்களுக்கு ஒன்றுதான். எங்களுக்கு இரண்டு பேருடைய தயவும் தேவையில்லை. மதுரை காமராஜர் பல்கலைக்கழக விவகாரத்தில் அரசின் விதிமுறைப்படி விழா அழைப்பிதழில் பெயரை போட்டிருக்க வேண்டும். ஆனால் அது பின்பற்றப்படவில்லை.

ஆளுநர் சனாதன தர்மம் பற்றி பேசுகிறார் என்றால் அவர் சனாதனவாதி. கொரோனாவை பொறுத்தவரை தமிழகத்தில் கட்டுக்குள் இருக்கிறது. அது, தற்போது கட்டுப்பாட்டை மீறினாலும் பழைய வேகமில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் இப்போது 2 நாட்களில் சரியாகிவிடுகின்றனர். கொரோனாவைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தொடர்ந்து தீவிர முயற்சிகளை எடுத்து வருகிறது.
ஸ்மார்ட் சிட்டி பணிகள் சரியில்லை. அதற்கு மாநகராட்சி ஆணையரும் மாவட்ட ஆட்சியரும்தான் பதில் சொல்ல வேண்டும். மேல்அரசம்பட்டு அணை விரைவில் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். பாலாறு தடுப்பணைகள், திருப்பாற்கடல், அரும்பருதி, சேண்பாக்கம், பொய்கை மற்றும் அகரம், கவசம்பட்டு ஆகிய இடங்களில் அணைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது தண்ணீர் சென்றுகொண்டிருக்கிறது. அதற்கு பிறகு பணிகள் துவங்கும். அரசு மணல் குவாரி தொடங்க அனுமதி கேட்டுள்ளோம்” என்றார்.
Comments are closed.