விஷம்போல்‌ ஏறும் காய்கறி விலை: பன்னீர் கண்டனம்!

விஷம்போல்‌ ஏறிக்கொண்டிருக்கும்‌ காய்கறிகளின்‌ விலையினை கட்டுப்படுத்துமாறு தி.மு.க. அரசை வலியுறுத்தி ஓ. பன்னீர்செல்வம்‌ இன்று (ஜூலை 5) அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில், “தமிழ்நாடு முழுவதும்‌ 35,000-க்கும்‌ மேற்பட்ட நியாய விலைக்‌ கடைகள்‌, குறிப்பாக நகர்ப்புறங்களிலேயே ஆயிரக்கணக்கான ரேஷன்‌ கடைகள்‌ இருக்கின்ற நிலையில்‌, வெறும்‌ 82 ரேஷன்‌ கடைகள்‌, 62 பண்ணை பசுமை நுகர்வோர்‌ கடைகள்‌ மற்றும்‌ 3 நகரும்‌ பண்ணை பசுமை நுகர்வோர்‌ கடைகள்‌ என 147 கடைகள் மூலம்‌, ஒரு கடைக்கு 100 கிலோ என்ற அடிப்படையில்‌ தக்காளி கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்‌ என்ற தமிழ்நாடு அரசின்‌ அறிவிப்பும்‌,

இலட்சணக்கணக்கான கிலோ தக்காளி ஒரு நாளைக்கு மக்களுக்கு தேவைப்படுகின்ற நிலையில்‌, மேற்படி கடைகள்‌ மூலம்‌ வெறும்‌ 5,500 கிலோ தக்காளி மட்டுமே ஒரு நாளைக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பதும்‌ யானை பசிக்கு சோளப்‌ பொறி போடுவது போல்‌ அமைந்துள்ளது.

தமிழ்நாட்டில்‌, குறிப்பாக சென்னை மற்றும்‌ நகரப்‌ பகுதிகளில்‌ காய்கறிகளின்‌ விலை உயர்ந்து கொண்டே செல்கின்றது.

உதாரணமாக, பெங்களூர்‌ தக்காளி ஒரு கிலோ 145 ரூபாய்க்கும்‌, நாட்டு தக்காளி ஒரு கிலோ 115 ரூபாய்க்கும்‌, சின்ன வெங்காயம்‌ கிலோ 170 ரூபாய்க்கும்‌, பீன்ஸ்‌ ஒரு கிலோ 150 ரூபாய்க்கும்‌, கேரட்‌ ஒரு கிலோ 100 ரூபாய்க்கும்‌, அவரைக்காய்‌ ஒரு கிலோ 90 ரூபாய்க்கும்‌, வெண்டைக்காய்‌ ஒரு கிலோ 90 ரூபாய்க்கும்‌ வெளிச்‌ சந்தையில்‌ விற்பனை செய்யப்படுகின்றது.

இதன்‌ காரணமாக பொதுமக்கள்‌ வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர்‌. ஒவ்வொரு வீட்டிலும்‌ காய்கறி செலவு மட்டும்‌ மும்மடங்கு உயர்ந்துள்ளது. ஆனால்‌, தி.மு.க. அரசோ தக்காளி மட்டும்‌ ஒரு கிலோ 60 ரூபாய்க்கு குறைந்த ரேஷன்‌ கடைகளில்‌ குறிப்பிட்ட அளவு விற்பனை செய்யப்படும்‌ என்று அறிவித்து இருப்பது வியப்பாக உள்ளது.

பொதுவாக காய்கறிகள்‌ விலை உயர்வுக்கு விளைச்சல்‌ குறைவு, வரத்துக்‌ குறைவு, பதுக்கல்‌, கடத்தல்‌ என பல காரணங்கள்‌ கூறப்படுகின்றன. மக்கள்‌ வாங்கும்‌ திறனுக்கு ஏற்ப பொருள்களை அதிகமாக உற்பத்தி செய்யவும்‌, இயற்கைச்‌ சீற்றங்களிலிருந்து இன்றியமையாப்‌ பொருட்களை காப்பாற்றவும்‌ அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்‌.

இது தவிர, வியாபாரம்‌ என்ற பெயரில்‌ கொள்ளை இலாபம்‌ ஈட்டுவோரையும்‌, பொருட்களை பதுக்கி வைத்து பற்றாக்குறை ஏற்படுத்தி பொருட்களின்‌ விலையேற்றத்திற்கு காரணமானவர்களையும்‌ கண்டறிந்து அவர்கள்மீது சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்‌. தி.மு.க. அரசு இவற்றையெல்லாம்‌ சரிவரச்‌ செய்யாததுதான்‌ தற்போதைய காய்கறிகள்‌ விலை ஏற்றத்திற்கு முக்கியக்‌ காரணம்‌.

இதைச்‌ செய்யாமல்‌, விலை உயர்ந்த பிறகு அவற்றை நியாய விலைக்‌ கடைகள்‌ மூலம்‌ வழங்குவது என்பது தும்பை விட்டு வாலைப்‌ பிடிப்பதற்குச்‌ சமம்‌. தி.மு.க. அரசின்‌ திறமையின்மைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு.

தி.மு.க. அரசின்‌ மெத்தனப்‌ போக்கால்‌ ஏற்பட்டுள்ள விலை உயர்வின்‌ காரணமாக விவசாயிகளுக்கு ஏதாவது இலாபம்‌ கிட்டுகிறதா என்றால்‌ நிச்சயம்‌ இல்லை. கிருஷ்ணகிரி மற்றும்‌ தர்மபுரி மாவட்டங்களில்‌ ஒரு கிலோ தக்காளி 60 ரூபாய்க்கு கொள்முதல்‌ செய்யப்பட்டு சென்னை மற்றும்‌ இதர நகரப்‌ பகுதிகளில்‌ 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாக செய்திகள்‌ வந்துள்ளன.

உண்மை நிலை என்னவென்றால்‌ வெளிச்சந்தையில்‌ ஒரு கிலோ தக்காளி 145 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதர காய்கறிகளும்‌ அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால்‌ இலாபம்‌ அடைபவர்கள்‌ இடைத்தரகர்களே தவிர, நுகர்வோர்களும்‌, விவசாயிகளும்‌ அல்ல.

இடைத்தரகர்கள்மீது நடவடிக்கை எடுக்காமல்‌, சொற்ப எண்ணிக்கையிலான கடைகளில்‌, குறைந்த அளவில்‌, தக்காளி ஒரு கிலோ 60 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும்‌ என்று தி.மு.க. அரசு அறிவித்திருப்பதைப்‌ பார்க்கும்போது, தி.மு.க.வினரே இடைத்தரகர்களாக செயல்படுகிறார்களோ என்ற சந்தேகம்‌ மக்கள்‌ மத்தியில்‌ எழுந்துள்ளது.

எது எப்படியோ, தக்காளி விலை தாறுமாறாக உயர்ந்துள்ள நிலையில்‌, தமிழ்நாட்டில்‌ உள்ள அனைத்து மக்களுக்கும்‌ குறைந்த விலையில்‌ தக்காளி உள்ளிட்ட காய்கறிகள்‌ கிடைக்கும்‌ வகையில்‌ கடைகளின்‌ எண்ணிக்கையை கணிசமாக அதிகரிக்கவும்‌, பதுக்கலைத்‌ தடுக்கவும்‌, இனி வருங்காலங்களில்‌ விலைவாசி ஏற்றத்தை அவ்வப்போது கண்காணித்து அதனைத்‌ தடுக்கவும்‌ முதலமைச்சர்‌ நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில்‌ வலியுறுத்திக்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌” என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

கிறிஸ்டோபர் ஜெமா

மதுரை அதிமுக மாநாடு இலச்சினை வெளியீடு!

கலைஞர் நூற்றாண்டு நூலகம்…தமிழனாக பெருமை: அமைச்சர் அன்பில் மகேஷ்

o panneerselvam wrote letter to mk stalin
[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts