“தனது சுற்றுப்பயணம் விரைவில் தொடங்கும்” என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் இன்னும் ஓய்ந்தபாடில்லை. இதனால், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஓர் அணியாகவும், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றொரு அணியாகவும் பிரிந்து நின்று தனித்தனியாகச் செயல்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர்மோகன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், கடந்த செப்டம்பர் 1ம் தேதி, தீர்ப்பு வழங்கியது. அந்த தீர்ப்பில்,
”ஜூலை 11ம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு செல்லும். எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தொடரலாம்” எனக் கூறப்பட்டது.
இத்தீர்ப்பை எதிர்த்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.
இந்த விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஏற்கெனவே கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும், அதிமுக தலைமை நிர்வாகிகளும் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் என எடப்பாடி பழனிசாமியும், ஒருங்கிணைப்பாளர் என ஓ.பன்னீர்செல்வமும் தனித்தனியாக மாறிமாறி அறிக்கை மற்றும் அறிவிப்புகளை வெளியிட்டு வருவதால் அதிமுக தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
தவிர, இருவரும் தனித்தனியாக தொண்டர்களின் குடும்ப நிகழ்ச்சி மற்றும் கட்சி விழாக்களில் கலந்துகொள்கின்றனர்.
சமீபத்தில் மாவீரன் பூலித்தேவன் பிறந்த நாள் சிலைக்கு மாலை அணிவிப்பதற்குக்கூட இரண்டு அணியினரும் தனித்தனியாகத்தான் சென்று மாலை அணிவித்தனர்.
எடப்பாடி பழனிசாமி தரப்பில், அவரது ஆதரவாளர்கள் சென்று மாலை அணிவித்தனர். இதற்கிடையே எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தொண்டர்களை ஒன்றுதிரட்டி பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார்.
அதுபோல், ஓ.பன்னீர்செல்வமும் தொண்டர்களைச் சந்திக்க ஆயுத்தமாகி வருகிறார். கட்சியை வழிநடத்த, தொண்டர்களை உற்சாகப்படுத்த, பன்னீர்செல்வம் நிறைய திட்டங்களை வைத்துள்ளார்.
அதை சுற்றுப்பயணத்தின்போது தொண்டர்களை சந்தித்து தெரிவிக்க உள்ளார். அதிமுக வழக்கின் தீர்ப்புக்காக காத்திருக்கும் ஓ.பன்னீர்செல்வம் விரைவில் இந்த சுற்றுப்பயணத்தை தொடங்குவார் என அவரது ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
இந்த நிலையில், நேற்று இரவு (செப்டம்பர் 7) ஓ.பன்னீர்செல்வம், மதுரையில் தேநீர்க் கடை ஒன்றில் தன்னுடைய ஆதரவாளர்களுடன் தேநீர் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். பின் அங்கிருந்து வெளியில் வந்த அவரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
ஆனால், அவர் மெளனத்தையே பதிலாகத் தந்தார். இறுதியில், ”பிரேக்கிங் நியூஸுக்காவது ஏதாவது தகவல் இருந்தால்” எனக் கேட்டனர். அதற்கு அவர், “உண்மைத்தன்மையினை விளக்கும் சுற்றுப்பயணம் விரைவில் தொடங்கும்” என்றார்.
ஜெ.பிரகாஷ்
இருவரும் ராஜினாமா செய்வோம்; மக்கள் முடிவு செய்யட்டும்: ஓ.பன்னீர்செல்வம்