இடைத்தேர்தல்: இரட்டை இலைக்கு ஓபிஎஸ் ஆதரவு!

அரசியல்

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற நானும் என் மீது பற்றுகொண்ட தொண்டர்களும் பாடுபடுவோம் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.

இன்று சென்னையில் ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் பண்ருட்டி ராமச்சந்திரன், ஜே.சி.டி.பிரபாகர், வைத்தியலிங்கம் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையை வைத்தியலிங்கம் வாசித்தார்.

அதில், “உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்தவரை இந்த இடைத்தேர்தலில் எந்தெந்த கோரிக்கைகளை மக்கள் முன்னால் எடுத்து சொன்னோமோ அவற்றை எல்லாம் நிறைவேற்றும் வகையில் அமைந்துள்ளது.

எதிர்வரும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக ஒற்றுமையாக போட்டியிட வேண்டும் என்றும் ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் அதற்கு கையெழுத்திட தயார் என்று அறிவித்தேன்.

அதற்கு ஏற்ப இன்று உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் ஒற்றுமையாக போட்டியிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் முடக்க நான் காரணமாக இருக்க மாட்டேன் என்று கூறியிருந்தேன்.

அதேபோல் இன்று இரட்டை இலை சின்னத்தின் மூலம் போட்டியிடும் வாய்ப்பு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் மூலம் கிடைத்துள்ளது.

ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் பொது வேட்பாளரை நிறுத்த நான் தயார் என்று அறிவித்தேன்.

என்னை ஒருங்கிணைப்பாளர் என்று மட்டுமல்ல, கட்சியிலே இல்லை என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் பகை உணர்வோடு கூறி வந்தனர்.

இந்த நிலையில் என்னையும் என்னை சார்ந்தவர்களையும் உள்ளடக்கி எங்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்னர் தான் பொது வேட்பாளரை பொதுக்குழு தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு எங்களை எதிர்த்தோருக்கு சரியான பாடமாக அமைந்துள்ளது.

அதிமுகவின் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர் என்ற என்னுடைய பொறுப்பு நீடிப்பதால் எந்தவித தடையும் உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் விதிக்கவில்லை.

ஆனால் அதே நேரத்தில் சச்சரவிற்கு உள்ளான பொதுக்குழுவின் மூலம் தேர்வு செய்யப்பட்ட இடைக்கால பொதுச்செயலாளர் என்ற பெயரில் நியமிக்கப்பட்ட முன்னாள் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் வகிக்கின்ற பொறுப்பை உச்சநீதிமன்றமும் தேர்தல் ஆணையமும் அங்கீகரிக்கவில்லை.

இந்த இடைத்தேர்தலை பொறுத்தவரை எம்ஜிஆர், ஜெயலலிதாவின் இரட்டை இலை சின்னம் வெற்றி பெற நானும் என் மீது பற்றுக்கொண்ட தொண்டர்களும் பாடுபடுவோம்.” என்று தெரிவித்துள்ளார்.

செல்வம்

+1
1
+1
4
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *