’சோழ மண்டலத்தில் பிள்ளையார் சுழி’: பன்னீர்

தமிழகத்தில் மீண்டும் ஆட்சியமைக்க சோழமண்டலத்தில் பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது என்று முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூரில் இன்று (ஜூன் 7) முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் இல்ல திருமண விழா நடைபெற்றது. இந்த விழாவில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

திருமண விழாவின் போது மணமக்களை வாழ்த்தி பேசிய ஓ.பன்னீர்செல்வம்,

“இந்த இயக்கத்தில் (அதிமுக) தொண்டனாக இருப்பதே மாபெரும் பெருமை என்ற அளவிற்கு பெரிய இயக்கமாக இதனை ஜெயலலிதா உருவாக்கி வைத்திருந்தார்.

புரட்சித் தலைவர் மற்றும் தலைவியின் தூய தொண்டர்களின் எண்ணங்களில் உள்ள ஆசை என்னவென்றால் நாம் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்பதுதான்.

பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், இன்றைய அரசியல் சூழலில் பல்வேறு பிரிவுகளாக இருந்தாலும் அனைவரும் ஒருசேர இந்த இயக்கத்தை இயக்கிட வேண்டும் என்று தான் அனைத்து உள்ளங்களும் ஏங்கி கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் நாங்கள் செல்கின்ற இடமெல்லாம் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்றுதான் மக்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் மீண்டும் அம்மாவின் ஆட்சி அமைய வேண்டும் என்றுதான் மக்கள் எண்ணுகின்றனர். அந்த எண்ணங்களுக்குத் தஞ்சையில் சோழ மண்டலத்தில் இன்று பிள்ளையார் சுழி போடப்பட்டுள்ளது.

எந்த ஒரு நிகழ்வாக இருந்தாலும் தஞ்சையில் இருந்து ஆரம்பிக்கின்ற போது அது முழுமையான வெற்றி அடையும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு.

இன்றைக்கு முன்னின்று இந்த திருமணத்தை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நடத்தி வைத்திருப்பது நமக்கு மகிழ்ச்சி அளிக்கக் கூடியது.

புரட்சி தலைவர், தலைவியால் வளர்க்கப்பட்ட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து நின்று அரசியல் களத்தில் விளையாடுகின்ற போது நம்மை எதிர்த்து நின்று விளையாடுகின்ற தகுதி தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்திய அரசியலிலே யாருக்கும் இல்லை என்ற நிலையை நாம் ஏற்படுத்திட வேண்டும்.

அந்த நிலை மீண்டும் உருவாக வேண்டும் என்பதுதான் புரட்சித் தலைவர், புரட்சித் தலைவி ஆன்மாவின் சிந்தனை.

அதற்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டுமென்றால் தொண்டர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்” என்று பேசினார்.

மோனிஷா

கிராமிய மக்கள் வாழ்வியலை பேசும் தண்டட்டி: ட்ரெய்லர் எப்படி?

10 லட்சம் லிட்டர் ஆவின் பால் திருட்டு: பொங்கும் ராமதாஸ்

[latest_youtube_video channel="UCgFSoS8vu0ONak4z5OBORHw" width="100%" height="450"]

Similar Posts