அதிமுகவில் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று (செப்டம்பர் 21) தெரிவித்த நிலையில், அதிமுக விரைவில் ஒன்றிணையும் என்று அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம் இன்று (செப்டம்பர் 22) தெரிவித்துள்ளார்.
சென்னை ஜெஜநகர் மேற்கு பகுதியில் முன்னாள் முதல்வர் அண்ணாவின் 116-வது பிறந்த நாள் விழாப் பொதுக்கூட்டம் நேற்று (செப்டம்பர் 21) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “கட்சியின் சீனியர்கள் ஆறு பேர் எனக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்று முதலில் சொன்னார்கள். தற்போது 18 பேர் எதிர்ப்பு என்கிறார்கள். அதிமுக கட்டுக்கோப்போடு இருக்கிறது. ஒருவர் கூட எனக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
அதிமுக இணையப்போகிறது என்று தொடர்ச்சியாக செய்திகள் வருகிறது. பொதுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவின்படி நான்கு பேர் நீக்கப்பட்டதே இறுதியான முடிவு. அதிமுக தெளிவாக பயணித்துக்கொண்டிருக்கிறது. இனியாவது பத்திரிகை மற்றும் ஊடகங்கள் அதிமுக விரைவில் இணையப்போகிறது என்ற செய்தியை வெளியிடாதீர்கள். இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை. அதிமுகவை அழிக்க நினைத்தவர்கள் இன்றைக்கு அடியோடு அழிந்து போயிருக்கிறார்கள். இது தொண்டர்களால் உயர்ந்த கட்சி. தொண்டர்கள் தான் அதிமுக.
2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக தலைமையில் ஒரு வலுவான கூட்டணி அமையும். திமுக கூட்டணியில் புகைச்சல் ஆரம்பித்துவிட்டது. திமுக ஆட்சி அமைத்ததற்கு கூட்டணி தான் பக்கபலமாக இருந்தது. கூட்டணி மட்டும் இல்லையென்றால் திமுக படுதோல்வியை சந்திக்கும்” என்று தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், அதிமுக விரைவில் ஒன்றிணையும், இருள் நீங்கி ஒளி தோன்றும் நாள் வெகு தூரத்தில் இல்லை என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் எடப்பாடி பழனிசாமிக்கு பதிலளித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றுபட்ட அதிமுக” என்ற முயற்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஈடுபட்டிருப்பதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்தன. இதனைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் 2025-ல் அதிமுக ஒன்றிணையும் என்று சில தினங்களுக்கு முன் பேட்டியளித்திருந்தார்.
அதிமுக ஒன்றிணைந்து விடுமோ என்கிற அச்சத்தில், முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் மீது திமுக அரசு இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கு பதிவு செய்தது. இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது நேற்று திமுக அரசு வழக்கு பதிவு செய்துள்ளது.
அதிமுகவை ஒன்றிணையவிடாமல் தடுத்து அதன்மூலம் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என்று முதலமைச்சர் ஸ்டாலின் கனவு காண்கிறார்.
அவருடைய கனவு நிச்சயம் பலிக்காது. அதிமுக ஒன்றுபடும், வீறுகொண்டு எழும், ஜெயலலிதாவின் ஆட்சியை மீண்டும் அமைக்கும் என்பதை அழுத்தந்திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன். இருள் நீங்கி ஒளி தோன்றும் நாள் வெகு தூரத்தில் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இலங்கை அதிபர் தேர்தல் ரிசல்ட் – முன்னணி நிலவரம் இதோ!
“அதிமுக ஒன்றிணையக் கூடாது என்பதற்காகவே முன்னாள் அமைச்சர்கள் மீது வழக்கு”… ஓபிஎஸ்