அதிமுக இணைய வேண்டும் என்பது தான் ஒன்றரை கோடி தொண்டர்களின் விருப்பம் என்று அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு இன்று (அக்டோபர் 30) மரியாதை செலுத்தினார்.
அப்போது, 10 கிலோ 400 கிராம் எடை கொண்ட வெள்ளி கவசத்தை தேவர் நினைவிட காப்பாளர் காந்தி மீனாள் அவர்களிடம் ஓ.பன்னீர் செல்வம் வழங்கினார்.
அவருடன் சட்டமன்ற உறுப்பினர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ஓ.பி.ரவீந்திரநாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், “இந்திய விடுதலைப் போரில் தனது பெரும் பகுதி நாட்கள் சிறையில் இருந்தவர் முத்துராமலிங்க தேவர்.
இந்திய நாடு ஒற்றுமையுடனும், ஒருமைப்பாட்டுடனும் விளங்க வேண்டும் என்று அவர் நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.
அனைத்து மக்களும் சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு வாழ வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முத்துராமலிங்க தேவருக்கு 13 கிலோ தங்க கவசத்தை குரு பூஜை நடக்கின்ற நாளில் சாத்தப்பட வேண்டும் என்று அதிமுக பொருளாளராக இருந்த என்னையும், தேவர் திருக்கோவிலின் அறங்காவலராக இருந்த காந்தி மீனாள் ஆகிய இருவரையும் நியமித்திருந்தார்.
அதனடிப்படையில் தங்க கவசத்தை தேவர் குரு பூஜைக்கு கொண்டு வந்து விழா நிறைவடைந்தவுடன் வங்கிகளில் வைக்கக்கூடிய ஒரு பழக்கம் இருந்தது.
2017-ஆம் ஆண்டும் தற்போதும் எதிர்பாராத விதமாக அந்த நிகழ்வு தடைபடுகிற ஒரு சூழல் ஏற்பட்டது.
தங்க பெட்டகம் வைத்திருக்கிற வங்கியில் இந்த பிரச்சனை ஒரு தீர்வுக்கு வர வேண்டும் என்றால் மாவட்ட ஆட்சியரிடம் இந்த தங்க கவசத்தை கொடுத்து தேவர் அவர்களின் குரு பூஜைக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் எப்பொழுதும் போல் தங்க கவசம் குருபூஜையில் சாத்தப்பட வேண்டும் என்று ஏற்கனவே 25 தினங்களுக்கு முன்பாக நாங்கள் கடிதம் கொடுத்து விட்டோம்.
அந்த கடிதத்தின் அடிப்படையில் திண்டுக்கல் சீனிவாசன் அவர்கள் தற்காலிக பொருளாளர் நான் தான் என்று சொல்லிக்கொண்டு உயர்நீதிமன்றத்திற்குச் சென்றார்.
உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, “தேவர் குருபூஜை தங்க கவசம் எந்த நேரத்திலும் விழாவுக்கு சென்றடைய வேண்டும் என்பதை நாங்கள் முறையாக உணர்ந்திருக்கிறோம்.
ஆகவே மாவட்ட நிர்வாகத்திடம் தங்க கவசத்தை வழங்கி அவர்களே எடுத்துக்கொண்டு அறக்கட்டளையின் தலைவராக இருக்கக்கூடிய காந்தி மீனாள் அவர்களிடம் தங்க கவசத்தை குருபூஜையில் வைத்து சிறப்பிக்க வேண்டும்.
குருபூஜை நிறைவடைந்தவுடன் மீண்டும் வங்கியில் வைப்பதற்கு நாங்கள் எந்தவித ஆட்சேபனையும் தெரிவிக்க மாட்டோம்” என்று நீதிமன்றத்தில் தெரிவித்தோம்.
ஆனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு எங்களிடம் தான் தங்க கவசத்தை தர வேண்டும் என்றார்கள்.
ஆனால் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பினை வழங்கியது.
எங்களுடைய கோரிக்கையில் இருக்கின்ற நியாயத்தை உணர்ந்து இந்த தங்க கவசத்தை அறக்கட்டளை தலைவரிடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் வழங்க வேண்டும் என்று தெரிவித்திருந்தது.
அதிமுக சார்பில் தேவர் அவர்களுக்கு வெள்ளி கவசம் வழங்கியிருக்கிறோம். அதிமுக ஒருங்கிணைப்பாளர் நான் தான்.
அந்த அடிப்படையில் அதிமுக சார்பில் வெள்ளி கவசம் வழங்கியிருக்கிறேன். அதிமுக ஒன்றரை கோடி தொண்டர்களும் இணைய வேண்டும் என்று தான் விரும்புகிறார்கள்” என்றார்.
செல்வம்
விபத்தில் சிக்கிய முன்னாள் அமைச்சர்களின் கார்கள்!
இந்தி படித்துதான் சுந்தர் பிச்சை கூகுள் சிஇஓ ஆனாரா?: பிடிஆர் கேள்வி!