சில லட்சம் திமுகவினருக்கு மட்டும் மகளிர் உரிமை தொகை திட்டத்தை அளித்துவிட்டு வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுவிட்டு விட்டது என்று சொல்ல திமுக முயற்சிக்கிறதா என முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
2021 சட்டமன்ற தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15-ஆம் தேதி முதல் செயல்படுத்த உள்ளது. மகளிர் உரிமை திட்டத்தை பெறுவதற்கு தமிழக அரசு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. இந்த நிபந்தனைகளை இல்லாமல் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகை வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, அதை மேடைக்கு மேடை பேசி, அதன்மூலம் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு, இரண்டு ஆண்டுகள் கழித்து அதனை நிறைவேற்றுகிறோம் என்று சொல்லி அதற்கு பல்வேறு நிபந்தனைகளை விதித்து இருப்பதைப் பார்க்கும்போது “பலரை சில காலமும், சிலரை பல காலமும் ஏமாற்றலாம்; ஆனால் எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது” என்ற ஆப்ரகாம் லிங்கனின் பொன்மொழி நினைவிற்கு வருகிறது.
தி.மு.கவின் தேர்தல் அறிக்கையிலே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தான் அறிவிக்கப்பட்டு இருக்கிறதே தவிர, அதற்கான நிபந்தனைகள் ஏதும் சொல்லப்படவில்லை. இதனால், குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், 2021 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மக்கள் தி.மு.கவிற்கு வாக்களித்தனர். இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படுகிறது என்று சொன்னால், கிட்டத்தட்ட 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும்.
ஆனால், இந்த உரிமைத் தொகையினை பெறுவதற்கான வழிமுறைகளைப் பார்க்கும்போது, தகுதியுள்ளவர்களை கண்டுபிடிப்பதே மிகவும் சிரமம்.
மகளிர் உரிமைத் தொகை பெற திமுக அரசு விதித்துள்ள நிபந்தனைகளைப் பார்க்கும்போது பெரும்பாலானோர் இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெற முடியாது என்பது மட்டும் தெளிவாகிறது.
இதிலே குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், ரேஷன் அட்டை, ஆதார் அட்டை போன்றவை இல்லை என்றாலும், அவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த விதியின்மூலம், சில லட்சம் திமுகவினருக்கு மட்டும் மகளிர் உரிமைத் தொகையை அளித்துவிட்டு, இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுவிட்டது என்று மார்தட்டிக் கொள்ள திமுக அரசு முயலுகிறதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஒருவேளை இதுதான் திராவிட மாடல் ஆட்சி போலும்.
இந்தத் திட்டத்தின்கீழ் கிட்டத்தட்ட ஒரு கோடி மகளிர் பயன்பெறுவர் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருந்த நிலையில் தற்போது, விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பார்த்தால், ஒரு சில லட்சம் மகளிர் கூட இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
“கைப்புண்ணுக்கு கண்ணாடி எதற்கு” என்பதற்கேற்ப இது ஓர் ஏமாற்று திட்டம் என்பது தெளிவாகத் தெரிகிறது. இது வாக்களித்த மக்களை வஞ்சிக்கும் செயலாகும். தேர்தல் வாக்குறுதியில் மகளிர் உரிமைத் தொகை என்று அறிவித்ததற்கு ஏற்ப, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட வேண்டுமென்பதே மகளிரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
“சொன்னதை செய்வோம்! என்பதற்கேற்ப, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சர் ஸ்டாலினை அதிமுக சார்பில் வலியறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்