அதிமுக கட்சியின் கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட இடைக்கால தடையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு இன்று (நவம்பர் 16) விசாரிக்கப்பட உள்ளது.
இதற்கிடையே அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கட்சியில் இருவரும் இணக்கமாக பயணிப்பது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தூது அனுப்பியதாக செய்திகள் வெளியானது.
இதுதொடர்பாக நேற்று ஈரோட்டில் தனது ஆதரவாளர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பன்னீர்செல்வம் விளக்கமளித்தார்.
அப்போது அவர், ”எடப்பாடி பழனிசாமிக்கு நான் தூதுவிட்டதாக கூறப்படுவது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். அவருடன் சேரும் எண்ணம் அறவே இல்லை. அப்படி வெளியான தகவல் முற்றிலும் தவறு.
கட்சி ஒன்றுபட்டால்தான் வெற்றி அடைய முடியும் என்றும், பாஜக கூட்டணியை தவிர்த்து அதிமுக தனித்து போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்றும் நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன். அதை அவர்கள் கேட்பதாக இல்லை. அதற்கான விளைவை கடந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் அனைவரும் கண்டோம்.
அதிமுகவின் கோட்டையான கொங்கு மண்டலத்திலே 66 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் எடப்பாடி பழனிசாமி தோற்கடிக்கப்பட்டார். எனவே இதில் விரைந்து முடிவு எடுக்கப்பட வேண்டும்.
நானும் அமமுக பொதுசெயலாளர் தினகரனும் இணைந்து நாடாளுமன்ற பணிகளை செய்து வருகிறோம். எங்கள் அணிக்கு வருவது குறித்து சசிகலா தான் கூற வேண்டும்.” என்றார்.
தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு குறித்து அவர் பேசுகையில், ”மேல்முறையீடு முடிவு நீதிபதிகளின் கையில் உள்ளது. எனக்கு ஜோதிடம் தெரியாது.” என்று அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில், அதிமுக கட்சியின் கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த தடை விதித்த தீர்ப்பு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வேலைவாய்ப்பு: தேசிய தடய அறிவியல் பல்கலைக் கழகத்தில் பணி!
வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை திடீர் குறைப்பு!