எடப்பாடி பழனிசாமி பெயரை கூட சொல்ல விரும்பவில்லை என்று ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஓ. பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.
சென்னை எழும்பூரில் ஓ. பன்னீர்செல்வம் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் அசோகா ஹோட்டலில் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் இன்று (பிப்ரவரி 20) காலை 10 மணிக்குத் தொடங்கி நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் போது உரையாற்றிய ஓ. பன்னீர்செல்வம், “அதிமுகவின் தலைமை பொறுப்பை ஏற்பவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினர்கள் மூலமாகத்தான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்ற சட்ட விதியை எம்.ஜி.ஆர் கொண்டு வந்தார்.
அந்த வகையில் ஜூன் 23 ஆம் தேதி பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டது. ஆனால் சர்வாதிகாரத்தின் உச்சநிலைக்குச் சென்று எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல், யாருடைய ஒப்புதலும் இல்லாமல் 23 தீர்மானங்களும் ரத்து செய்யப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது.
பொருளாளராகக் கழகத்தின் கணக்கு வழக்குகளை நான் தான் வாசிப்பேன். அதற்குக் கூட வாய்ப்பில்லாமல் பல்வேறு அராஜகங்கள் நடைபெற்றது. அந்த அளவிற்கு அதிமுகவின் தலைமை பொறுப்பில் இருக்கின்றவர்கள்(எடப்பாடி பழனிசாமி), அது யார் என்று உங்களுக்குத் தெரியும். நான் அவர்கள் பெயரை உச்சரிக்கக் கூட விரும்பவில்லை. ஏனென்றால் அந்த தகுதியை அவர் இழந்துவிட்டார்.
தன்னுடைய இரும்புப் பிடிக்குள் இந்த இயக்கத்தைக் கொண்டு போய் சேர்த்து விட வேண்டும் என்று நடத்திய நாடகம் அலங்கோலமாக முடிந்தது. 2026 வரை ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவி இருக்கிறது. இன்று வரை தேர்தல் ஆணையத்தில் அது ஒரு ஆவணமாக விளங்கிக் கொண்டிருக்கிறது.
2வது தர்மயுத்தம் நாம் ஆரம்பித்தோம் என்று சொன்னால் எதற்காக, எம்ஜிஆர் உருவாக்கிய, ஜெயலலிதா பின்பற்றிய சட்டவிதியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகத் தான்.
உயர்நீதிமன்ற தனிநீதிபதி இந்த வழக்கில் நமக்கு ஆதரவாக தீர்ப்பளித்து விட்டார். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கை விசாரித்து, தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அந்த உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த அறிக்கையில், கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி என்று தான் இருக்கிறது.
இந்த நிலையில் ஈரோடு தேர்தலில் இரட்டை இலை சின்னத்திற்காக யார் பொறுப்பாளராகக் கையெழுத்திட வேண்டும் என்றால், நீதிப்படி தர்மப்படி அதிகாரம் ஒருங்கிணைப்பாளருக்கும் இணை ஒருங்கிணைப்பாளருக்கும் தான் இருக்கிறது.
ஆனால் மாற்று ஏற்பாடாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொல்லிவிட்டது. அதற்கு நாம் தலைவணங்கினோம்.
இவை அனைத்திற்கும் மேலாக மக்கள் தீர்ப்பு தான் மகேசன் தீர்ப்பு. அது கூடிய விரைவில் வரும். அப்போது தெரியும். நாம் தர்மத்தின் பக்கம் சென்று கொண்டு இருக்கிறோம்” என்று பேசினார்.
மோனிஷா
எலான் மஸ்க்கை பின்பற்றும் மார்க் ஜுக்கர்பெர்க்
விபத்திற்கு முன்பே சேதமடைந்திருந்த மோர்பி பாலம்: விசாரணை அறிக்கையில் பகீர்!