பாஜகவுக்கு பணியாற்ற பணிக்குழு? குழப்பும் ஓபிஎஸ்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்காக ஓ. பன்னீர்செல்வம் 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்துள்ளதாக ஜே.சி.டி பிரபாகர் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வரும் பிப்ரவரி 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவதாக அறிவித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஆனால் அதிமுக சார்பில் யார் போட்டியிடுவார்கள் என்றே இதுவரை அறிவிக்கப்படாமல் இருக்கிறது. இதனிடையே எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் போட்டிப் போட்டுக் கொண்டு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து ஆதரவு கோரினர்.
இதில் ஓ. பன்னீர்செல்வம் தரப்பு, “பாஜக போட்டியிடுவதாக இருந்தால் நாங்கள் ஆதரவு அளிக்கிறோம்” என்று தெரிவித்தது.
இந்நிலையில், அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 117 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்தார்.
தொடர்ந்து, ஓ. பன்னீர்செல்வம் 118 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை அமைத்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி பிரபாகரன், “இந்த இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுவதாக இருந்தால் முழு ஆதரவைக் கழகம் அவர்களுக்கு அளிக்கும் என்று ஓ. பன்னீர்செல்வம் அறிவித்திருக்கிறார்.
அவர்கள் போட்டியிடுவதாக அறிவித்தால் தேர்தல் பணிகளைச் செய்வதற்காக, தேர்தல் பணிக்குழுவை அமைத்துள்ளார்.
தேர்தலில் பாஜக போட்டியிடவில்லை என்றால், அனைத்திந்திய அண்ணா திராவிட கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் தனது வேட்பாளரை உறுதியாக அறிவிப்பார்.
தேசிய கட்சியான காங்கிரஸ் போட்டியிடுகிறபோது, பாஜக போட்டியிட்டால் பொருத்தமாக இருக்கும் என்ற கருத்து வெளியிடப்பட்டது. அவர்களது முடிவிற்காகக் காத்திருக்கிறோம்.
எடப்பாடி பழனிசாமி தரப்பு தேர்தல் பணிகளை ஆரம்பித்திருக்கலாம். ஆனால் தேர்தல் பணிகளை எப்படிச் செய்வதென்று, பல்வேறு தேர்தல் களத்தில் பணியாற்றிய எங்கள் ஒருங்கிணைப்பாளருக்குத் தெரியும் எதை எப்போது செய்ய வேண்டுமென்று.
தேர்தலில் போட்டியிடுவதற்காக நிறையப் பேர் தொகுதிக்கு உள்ளே இருந்தும், வெளியே இருந்தும் விண்ணப்பித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஜனவரி 31 ஆம் தேதி தான் வேட்புமனுத் தாக்கல் தொடங்கவிருக்கிறது. அதற்குள்ளாக ஒரு நல்ல முடிவை அதிமுக ஒருங்கிணைப்பாளர் அறிவிப்பார்” என்றார்.
மோனிஷா
காஷ்மீரில் ராகுல் பாதுகாப்பு: அமித் ஷாவுக்கு கார்கே கடிதம்!
இடைத்தேர்தலில் தனித்தே போட்டி : செங்கோட்டையன்