“தீவிரவாதத்தை வேரோடு அழிக்க வேண்டும்” – ஓபிஎஸ் காட்டம்

அரசியல்

கடந்த ஒன்றரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில்‌ தீவிரவாதம்‌, பயங்கரவாதம்‌, கொலை, கொள்ளை, வன்முறை ஆகியவை தலை விரித்து ஆடுகிறது. தமிழ்நாட்டில்‌ சட்டம்‌ ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவையில் நடைபெற்ற சிலிண்டர் விபத்து குறித்து ஓ.பன்னீர் செல்வம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தி.மு.க. ஆட்சிப்‌ பொறுப்பேற்றதிலிருந்து, தமிழ்நாட்டில்‌ அன்றாடம்‌ இரண்டு கொலைகள்‌ என்ற நிலை படிப்படியாக மாறி, தினமும்‌ சராசரியாக எட்டு முதல்‌ பத்து கொலைகள்‌ நடைபெறுவது வாடிக்கையாகிவிட்டது.

அண்மைக்‌ காலமாக பெட்ரோல்‌ குண்டு கலாச்சாரம்‌ கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறது.

o panneerselvam condemn dmk government in kovai cylinder blast

வன்முறைக்‌ கலாச்சாரம்‌ தலைவிரித்து ஆடுகிறது. இதற்கு எடுத்துக்காட்டு தான்‌ நேற்று முன்‌ தினம்‌ கோயம்புத்தூர்‌ மாவட்டத்தில்‌ நடைபெற்ற எரிவாயு சிலிண்டர்‌ வெடிப்பு சம்பவம்‌.

கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌, கோட்டைமேட்டில்‌ உள்ள பிரசித்தி பெற்ற கோட்டை ஈஸ்வரன்‌ கோயில்‌ அருகில்‌ நேற்று முன்தினம்‌ பலத்த வெடி சத்தத்துடன்‌ கார்‌ ஒன்று வெடித்து சிதறி உள்ளது.

இதில்‌ ஒருவர்‌ உயிரிழந்துள்ளார். இதற்குக்‌ காரணம்‌ எரிவாயு உருளை வெடிப்பு என்று கூறப்பட்டாலும்‌, ‌காருக்குள் இருந்தவர்‌ காவல்‌ துறையினரின்‌ கண்காணிப்பில்‌ இருந்துள்ளார்.

வெடித்து சிதறுண்ட வாகனத்திற்குள்ளும்‌, சம்பவம்‌ நடந்த இடத்திலும்‌ ஆணிகளும்‌, கோலி குண்டுகளும்‌ சிதறிக்‌ கிடந்ததுள்ளது.

இந்த சம்பவத்தில், உயிரிழந்த நபர்‌ இதற்கு முன்பு தேசிய உளவுத்‌ துறை முகமையால்‌ விசாரணை செய்யப்பட்டுள்ளார்.

இறந்தவரின்‌ இல்லத்தில்‌ மேற்கொள்ளப்பட்ட ஆய்வில்‌ வெடிகுண்டுகள்‌ இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொட்டாசியம்‌ நைட்ரேட்‌, அலுமினியத்‌ துகள்கள்‌, மரக்கரி போன்றவையும் கைப்பற்றப்பட்டுள்ளது.

காவல்‌ துறை தலைமை இயக்குநர்‌ அவர்களே சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்கிறார்‌ என்றால்‌ இதன்‌ பின்னணியில்‌ ஏதோ இருக்கிறது என்பது தெளிவாகிறது.

o panneerselvam condemn dmk government in kovai cylinder blast

மேலும்‌, இது 1998 ஆம்‌ ஆண்டு தி.மு.க. ஆட்சியில்‌ நடைபெற்ற குண்டு வெடிப்புச்‌ சம்பவத்தை நினைவூட்டுகிறது. தமிழ்நாட்டில்‌ சட்டம்‌ ஒழுங்கு சீரழிந்து கொண்டிருக்கிறது என்பதற்கு இதைவிட ஒரு சிறந்த எடுத்துக்காட்டு தேவையில்லை.

சட்டம்‌-ஒழுங்கை சீரழித்துக்‌ கொண்டிருக்கிற தி.மு.க. அரசிற்கு அதிமுக சார்பில்‌ எனது கடும்‌ கண்டனத்தைத்‌ தெரிவித்துக்‌ கொள்கிறேன்‌. தீவிரவாதத்தை வேரோடும்‌, வேரடி மண்ணோடும்‌ அழிக்க வேண்டிய பொறுப்பும்‌, கடமையும்‌ தமிழ்நாடு காவல்‌ துறைக்கு உள்ளது.

மாண்புமிகு முதலமைச்சர்‌ அவர்கள்‌ சட்டம்‌-ஒழுங்கு பிரச்சனையில்‌ உடனடியாக தனிக்‌ கவனம்‌ செலுத்தி, தமிழ்நாட்டை, தமிழ்நாட்டு மக்களை வன்முறையாளர்களிடமிருந்தும்‌, தீவிரவாதிகளிடமிருந்தும்‌, பயங்கரவாதிகளிடமிருந்தும்‌ காப்பாற்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென்று அதிமுக சார்பில்‌ வலியுறுத்தி கேட்டுக்‌ கொள்கிறேன்‌.” என்று அவர் தெரிவித்துள்ளார்.

செல்வம்

இணையத்தில் வைரலாகும் நோ பால் சர்ச்சை!

தீபாவளி பொருளாதாரம்: சிக்கல்கள்… தீர்வுகள்!

+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *