உயர்த்தப்பட்ட ஆவின் பொருட்களின் விலையை உடனடியாக குறைக்க வேண்டுமென்று என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று (டிசம்பர் 18) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுகிறோம் என்று சொல்லி ஆவின் பால் விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்துவிட்டு,
ஒன்றரை ஆண்டுகளில் பால் பொருட்களின் விலை அனைத்தையும் பன்மடங்கு உயர்த்தியதோடு மட்டுமல்லாமல், ஆரஞ்ச் பால் பாக்கெட்டின் விலையை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தி ஏழை எளிய மக்களை ஆற்றொணாத் துயரத்தில் தி.மு.க. அரசு ஆழ்த்தியது.
இவையெல்லாம் போதாதென்று, தற்போது ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் விலையை மீண்டும் உயர்த்தியுள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாத துவக்கத்தில் 515 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் சாதாரண நெய்யின் விலை, 535 ரூபாயாக உயர்த்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டு ஜூலை மாதம் பொருட்கள் மற்றும் சேவைகள் வரி என்று சொல்லி,
535 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஒரு கிலோ நெய்யின் விலையை 580 ரூபாயாக இரண்டாவது முறை உயர்த்தியது.
தற்போது மூன்றாவது முறையாக ஒரு லிட்டர் சாதாரண நெய்யின் விலை 580 ரூபாயிலிருந்து 630 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற போது 515 ரூபாயாக இருந்த ஒரு கிலோ சாதாரண நெய்யின் விலை தற்போது 630 ரூபாயாக உயர்ந்துள்ளது.
அதாவது, நெய்யின் விலை சுமார் 25 விழுக்காடு உயர்ந்துள்ளது. இது போதாது என்று வெண்ணெயின் விலையையும் கிலோவுக்கு 20 ரூபாய் உயர்த்தி மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது தி.மு.க. அரசு.
தொடர்ந்து மக்கள் மீது கூடுதல் நிதிச் சுமையை சுமத்திக் கொண்டேயிருக்கின்ற தி.மு.க. அரசின் மக்கள் விரோதச் செயல்பாட்டிற்கு அதிமுக சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.
இந்த விலை உயர்வின்மூலம் ஏழை எளிய மக்கள் நேரடியாக பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், நெய், வெண்ணெய் ஆகியவற்றின் மூலம் செய்யப்படும் தின்பண்டங்களின் விலையும் அதிகரிக்கும்.
மொத்தத்தில், பொதுமக்களை வாட்டி வதைக்கின்ற அரசாக தி.மு.க. அரசு விளங்கி வருகிறது.
தி.மு.க.வின் முன்னுக்குப் பின் முரணான நடவடிக்கைகளைப் பார்த்து ‘உபகாரம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை, உபத்திரவம் செய்யாமலிருந்தால் சரி’ என்ற மன நிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள்.
தி.மு.க. அரசு மக்களை வஞ்சிக்கும் அரசு, மக்கள் விரோத அரசு, ஏழைகளுக்கு எதிரான அரசு என்பதை கடந்த ஒன்றரை ஆண்டு கால அனுபவத்தில் மக்கள் நன்கு புரிந்து கொண்டுவிட்டார்கள்.
மக்களை அரவணைத்துப் பேணி காக்கும் அரசனை உலகம் வணங்கும் என்ற வள்ளுவரின் வாய்மொழிக்கிணங்க, உயர்த்தப்பட்ட ஆவின் பொருட்களின் விலையை உடனடியாக குறைக்க வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை அதிமுக சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
இல்லையெனில், மக்கள்படும் துன்பம் தி.மு.க. ஆட்சியை வீழ்த்திவிடும்.” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
அண்ணாமலை வாட்ச்: வரிந்துகட்டும் திமுக
போராடிய மொராக்கோ..பந்தாடிய குரோஷியா!