கர்நாடகா காந்தி நகர் தொகுதியில் அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர் குமார் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் மே 10-ஆம் தேதி 224 சட்டமன்ற தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் புலிகேசிநகர் தொகுதியிலும், ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் புலிகேசி நகர், கோலார் தங்கவயல், காந்திநகர் தொகுதியில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
புலிகேசி நகர் தொகுதியில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர் அன்பரசன் வேட்புமனு ஏற்கப்பட்டது. ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் கோலார் தங்கவயல் தொகுதியில் அனந்தராஜ் வேட்புமனு சுயேட்சையாகவும் காந்திநகர் தொகுதியில் குமார் வேட்புமனு அதிமுக சார்பிலும் ஏற்கப்பட்டது. புலிகேசி நகர் தொகுதி வேட்பாளர் நெடுஞ்செழியன் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது.
எடப்பாடி பழனிசாமியை பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்தும் கர்நாடக தேர்தலில் இரட்டை இலை சின்னம் ஒதுக்கியும் உத்தரவிட்டது. இந்தநிலையில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர் வேட்புமனு அதிமுக சார்பில் ஏற்கப்பட்டது எடப்பாடி தரப்பில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து கர்நாடகா அதிமுக செயலாளர் எஸ்.டி.குமார் காந்தி நகர் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர் போலியான ஆவணங்கள் வழங்கி அதிமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளித்திருந்தார்.
இந்த புகார் மனுவை காந்திநகர் சட்டமன்ற தேர்தல் நடத்தும் அலுவலருக்கு கர்நாடகா தேர்தல் ஆணையம் அனுப்பியிருந்தது. இதனை தொடர்ந்து கர்நாடகா கம்பன்பேட் காவல்நிலையத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வேட்புமனு தாக்கலின் போது போலியான ஆவணங்களை சமர்ப்பித்ததாக இரண்டு பிரிவுகளின் கீழ் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு வேட்பாளர் கே.குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் வேட்புமனு ஏற்கப்பட்ட ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பு வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவை வாபஸ் வாங்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செல்வம்